சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Jul 2015

கெளரவ கார்கள்! - ஒப்பீடு

முதல் தலைமுறை கார் வாடிக்கையாளர்கள் ஆல்ட்டோ, பீட், i10 என சின்ன கார்கள் வாங்கி பிள்ளையார் சுழி போடுவதுபோல, சொகுசு கார் வாடிக்கையாளர்கள் சி கிளாஸ், 3 சீரிஸ், ஏ4 கார்கள் வாங்கித்தான் கணக்கைத் துவங்குவார்கள். சொகுசு கார்களுக்கான  ஸ்டார்ட்டிங் பாயின்ட்டாக இந்த கார்கள்தான் இருந்தன.

இந்த செக்மென்ட்டில் இந்தியாவில் முதன்முதலாகக் களம் இறங்கிய கார், பென்ஸ் சி-கிளாஸ். சென்னையில் தொழிற்சாலை துவங்கி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 3 சீரிஸ் காரை வெளியிட்டது பிஎம்டபிள்யூ. ஆடி நிறுவனமும் ஏ4 காரை இந்த செக்மென்ட்டில் விற்பனை செய்துவருகிறது. ஆனால், அன்று முதல் இன்றுவரை 3 சீரிஸ்தான் மார்க்கெட் லீடர். 
இப்போது புது  அவதாரம் எடுத்து வந்திருக்கும் பென்ஸ் சி-கிளாஸ், பிஎம்டபிள்யூ, ஆடி  கார்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. மூன்றில் எது பெஸ்ட்?
டிஸைன்

மெர்சிடீஸ் பென்ஸின் விலை உயர்ந்த எஸ் கிளாஸ் காரை நினைவூட்டுவதால், டிஸைனில் புதிய சி-கிளாஸ் மிகவும் உயர்தரமாகத் தனித்துத் தெரிகிறது. சொகுசு கார்களைப் பார்த்ததுமே‘வாவ்’ என்று வியப்பை ஏற்படுத்தும் டிஸைனைக் கொண்டிருக்கிறது பென்ஸ்.
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார், ஸ்போர்ட்டியாகத் தோற்றமளிக்கக் காரணம், பிஎம்டபிள்யூவின் M-Sport ஆப்ஷனல் ஆக்சஸரீஸ் அத்தனையும் இதில் இருப்பதுதான். வழக்கமான 320d ஸ்போர்ட் வேரியன்ட்டில் கிளாஸான பம்பர்கள், சின்ன 17-இன்ச் வீல்கள் இருக்கும்.  இதில் இருப்பதுபோல ஸ்பாய்லர், ஸ்கர்ட்ஸ் போன்றவை இருக்காது. கச்சிதமான அளவுகோல்களுடன் பார்க்க யூத்ஃபுல்லாக இருந்தாலும், புதிய சி-கிளாஸ் மாதிரி ‘செம கிளாஸாக’ இல்லை 3 சீரிஸ்.
ஆடி என்று பம்ப்பரில் இருக்கும் வளையங்களைத் தாண்டி, சொகுசு கார் என்று வியக்க வைக்க எந்த விஷயமும் ஏ4 காரில் இல்லை.

கோட் சூட் அணிந்து கொண்டு பல்ஸர் பைக்கில் பறக்கும் சேல்ஸ்மேன் தோற்றத்துடன் இருக்கிறது ஏ4. மற்ற இரண்டு கார்களுடன் நிற்க வைக்கும்போது, மிகவும் சாதாரணமாக இருக்கிறது ஏ4.
உள்ளே
புதிய மெர்சிடீஸ் பென்ஸ் காரின் சிறப்பம்சம், அதன் உள்பக்கம்தான். பார்ப்பதற்குப் எஸ்-கிளாஸை நினைவூட்டினாலும், தனக்கென்று ஒரு தனி அழகைக்கொண்டிருக்கிறது கேபின். கார் நிறுவனங்கள் வழக்கமாக, தன் பிராண்டில் இருக்கும் விலை குறைந்த காரின் பாகங்களை எடுத்து, பெரிய கார்களில் பொருத்தும். ஆனால், எஸ் கிளாஸின் கதவுக் கைப்பிடிகள், சுவிட்ச்சுகள், கன்ட்ரோல்களை எடுத்து சி - கிளாஸில் பொருத்தியிருக்கிறது பென்ஸ். மரவேலைப்பாடுகளின் தரம் நன்றாக இருக்கிறது. லெதர் சீட் கவர்கள் இரட்டைத் தையல் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மெட்டல் பாகங்கள் கச்சிதமான டிஸைனில் உள்ளன.
ஸ்போர்ட்லைன் வேரியன்ட்டில், 3 சீரிஸ் காருக்கு கறுப்பு வண்ண டேஷ்போர்டு அளிக்கப்படுகிறது. இதில் ப்ரஷ்டு சில்வர் பேனல்கள், சீட் கவரில் சிவப்பு வண்ணத் தையல்கள் உள்ளன. லக்ஷூரி லைன் வேரியன்ட்டில், இன்டீரியர் இன்னும் உயர்தரமாகத் தெரியும். பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள விதம் நன்றாக இருந்தாலும், இன்னும் தரமாக இருக்க வேண்டும்.
ஆடி ஏ4 காரின் இன்டீரியர் தரம் நன்றாக இருந்தாலும், சி-கிளாஸ் காருடன் ஒப்பிடும்போது, டல்! ஆனால், ஆடியின் இன்டீரியர்தான் பிராக்டிக்கலாகப் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. 
சி-கிளாஸின் Avantgarde வேரியன்ட்டில் வசதிகளை நிரப்பியுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். பனோரமிக் சன் ரூஃப், மல்ட்டி கலர் ஆம்பியன்ட் லைட்டிங், ரியர் பவர் சாக்கெட், கீ-லெஸ் என்ட்ரி, சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற வசதிகள் இருக்கின்றன. ஆனால், பென்ஸ் சி-கிளாஸ் பெட்ரோல், இந்தியாவில் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், விலை அதிகம்.
இங்கு போட்டியிடும் பிஎம்டபிள்யூ - ஆடி கார்களில், வசதிகள் போதுமான அளவுக்கு இருந்தாலும், தேவைக்கும் அதிகமாக பென்ஸ் கொடுத்திருப்பதால், இவை குறைந்த வசதிகள் கொடுத்திருப்பதுபோலத் தெரிகிறது.

டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ஆன்போர்டு கம்ப்யூட்டர்ஸ் (பென்ஸில்தான் பெரிய ஸ்கிரீன்), சன் ரூஃப் (பென்ஸில்தான் பனோரமிக் சன் ரூஃப்), ஸெனான் ஹெட்லைட்ஸ், LED டே டைம் ரன்னிங் லைட்ஸ் (பென்ஸில்தான் ஃபுல் LED ஹெட்லைட்ஸ்), நல்ல ஆடியோ சிஸ்டம், ஸ்மார்ட்போன் இணைக்கும் வசதி ஆகியவை இரு கார்களிலும் உள்ளன. ஆனால் 3 சீரிஸ் காரில், ஆடியில் இருக்கும் முன்பக்க பார்க்கிங் சென்ஸார்ஸ், ரியர் வியூ கேமரா, சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற வசதிகள் இல்லை. 3 சீரிஸ் காரில் மட்டும்தான் மேனுவல் ஹேண்ட் பிரேக் உள்ளது.

சி-கிளாஸ், ஏ4 கார்களில் டிரைவரின் இருக்கை சரியான உயரத்தில் இருக்கிறது. எலெக்ட்ரிக் சீட் கன்ட்ரோல் இருப்பதால், நல்ல பொசிஷனைக் கண்டுபிடிப்பது சுலபம். 3 சீரிஸ் காரின் இருக்கைகள் தாழ்வாக இருப்பதால், பிஎம்டபிள்யூவின் டிரேட் மார்க் ஸ்போர்ட்டி ஓட்டுதல் அனுபவம் கிடைக்கிறது. ஆனால், உயரம் குறைவான நபர்களுக்கு, இதன் டிரைவிங் பொசிஷன் சற்று கடினமாக இருக்கும். 3 சீரிஸ் காரின் பின்னிருக்கைகளும் தாழ்வாகவே இருக்கின்றன. ஆனால், இந்த செக்மென்ட்டிலேயே வசதியான இருக்கை 3 சீரிஸில்தான். அதிக இடவசதி, தொடைகளுக்கான சப்போர்ட், அருமையான குஷனிங் குஷிப்படுத்துகிறது.
சி-கிளாஸ் அடிவாங்கும் இடம் இதுதான். லெக்ரூம் அதிகமாக இருந்தாலும், ஹெட்ரூம் குறைவுதான். இதனால் உயரமானவர்கள் தலை இடிக்குமோ என்று கொஞ்சம் பயந்தே உட்கார வேண்டியிருக்கும்.
ஏ4 காரின் இருக்கைகள், சி கிளாஸை விட சொகுசாக இருக்கின்றன. ஆனால், லெக்ரூம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். ஆடி காரில் ஸ்பேர் வீல் டிக்கிக்குக் கீழே இருப்பதால் இடவசதி அதிகம். ஆனால், சி-கிளாஸ் காரின் ஸ்பேர் வீல் டிக்கியிலேயே இருப்பதால், பொருட்கள் வைக்க இடம் குறைந்துவிடுகிறது. பிஎம்டபிள்யூவில் ஸ்பேர் வீல் இல்லை. ஆனால், நம் ஊர் சாலைகளைக் கண்டு பயந்துபோய், டீலரிடம் ஸ்பேர் வீல் வாங்கினால், அதை டிக்கியில்தான் வைக்க வேண்டும். 

 
இன்ஜின், பெர்ஃபாமென்ஸ்
இங்கு விற்பனைக்கு வந்திருக்கும் சி - கிளாஸ், 220 CDI மாடலில் உள்ள 2.1 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் 168 bhp சக்தியையும், 40.78 kgm டார்க்கையும் அளிக்கிறது. இதைவிட மற்ற இரண்டு கார்களும் பவர்ஃபுல். பிஎம்டபிள்யூவின் 2 லிட்டர் இன்ஜின் 181 bhp சக்தியையும், ஆடியின் இன்ஜின் 174 bhp சக்தியையும் அளிக்கிறது. ஆனால், மற்ற இரண்டு கார்களைவிட சி-கிளாஸ் 2 kgm அதிகமான டார்க்கை அளிப்பதோடு மட்டுமில்லாமல், 300 ஆர்பிஎம்-க்கு முன்பே அதிகபட்சமான டார்க் வெளிப்படுவது, ஓட்டும்போது தெரிகிறது. இதனால், குறைந்த வேகங்களில் நல்ல பவர் டெலிவரியை அளிக்கிறது இந்த இன்ஜின். அதிக ஆர்பிஎம்-ல் திணறினாலும், பவர் ரேஞ்சிலேயே வைத்து ஓட்டினால் நன்றாக இருக்கிறது. 7G ட்ரானிக் கியர்பாக்ஸிடம் இருந்து அதிக வேகத்தில் ஷிஃப்ட் எதிர்பார்க்க முடியாது.


தன்னுடைய ஸ்போர்ட்டி யான 3 சீரிஸ் சேஸிக்கு, பவர்-ஃபுல்லான இன்ஜின் மூலம் நல்ல தீனி போட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. டார்க் டெலிவரி ஷார்ப்பாக இருப்பதால், மலைச் சாலைகளில் ஓட்ட ஜாலியாக இருக்கும். 8 -ஸ்பீடு கியர்பாக்ஸ், செம சூப்பர். 
 
ஆடி ஏ4 காரின் CVT டிரான்ஸ்மிஷன், டிராஃபிக்கில் நன்றாக இருக்கிறது. இன்ஜினின் சீரான பவர் டெலிவரி, காரை ஸ்மூத்தாகச் செலுத்த உதவுகிறது. ரொம்பவும் விரட்டாமல் ஓட்டினால், தன் பாட்டுக்கு இயங்கிக்கொண்டிருக்கிறது இந்த CVT . ஆனால், கொஞ்சம் அதிகமாக விரட்டினாலும், இன்ஜின் ரெவ் ஆகிறதே தவிர, ஆக்ஸிலரேஷன் இல்லை. ஆனால், ஆடியின் இன்ஜின்தான் அமைதியாக இயங்குகிறது. பிஎம்டபிள்யூவின் டீசல் இன்ஜின் சத்தம் அதிகம். பென்ஸின் இன்ஜின் முன்பை விட ஓகே!

இந்த மூன்று கார்களிலும் நம் தேவைக்கு ஏற்றவாறு ஓட்ட டிரைவிங் மோடுகள் உள்ளன. பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ் கார்களில் இன்ஜின் ஸ்டாப் - ஸ்டார்ட் வசதி உண்டு. 
கையாளுமை
 
 ஆடி ஏ4 காரில் சஸ்பென்ஷன் மிக சாஃப்ட்டாக இருப்பதால், குறைந்த வேகங்களில் சீராகச் செல்கிறது. இதனால், சிட்டிக்குள் நல்ல ஓட்டுதல் தரம் கொண்டிருக்கிறது ஏ4. ஆனால், நெடுஞ்சாலைகளில் குலுங்குகிறது. வளைவுகளில் பாடி ரோல் அதிகமாக இருக்கிறது. ஸ்டீயரிங் ஃபீட்பேக் குறைவுதான். இது நாம் ஓட்டுவதற்கான கார் இல்லை. பின் இருக்கையில் உட்கார்ந்து சொகுசாகப் பயணிப்பதற்கான கார்.

சி-கிளாஸின் ஸ்டீயரிங் லைட்டாகவே இருக்கிறது. ஆனால், நல்ல ஃபீட்பேக் அளிக்கிறது. இந்த மூன்று கார்களில் வெயிட்டான கார் சி-கிளாஸ்தான். இந்தியாவுக்காக கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகரித்திருப்பதால், சஸ்பென்ஷனை இறுக்கமாக்கி யுள்ளது பென்ஸ். இதனால், மேடு பள்ளங்களில் அதிகம் குலுங்குகிறது. இது அப்படியே ஏ4 காரைவிட வித்தியாசமான ஓட்டுதல் தரம். வேகம் அதிகரித்துவிட்டால், சி-கிளாஸில் ஸ்டெபிளிட்டி வந்துவிடுகிறது. வளைவுகளில் பாடி ரோல் குறைவுதான்.
 
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில்தான் ஓட்டுதல் தரமும், கையாளுமையும் சரியான விகிதத்தில் உள்ளது. குறைந்த வேகத்தில் மேடு பள்ளங்களைத் திறமையாகச் சமாளிக்கும் 3 சீரிஸ், அதிக வேகத்தில் நல்ல ஸ்டெபிளிட்டியைக் கொண்டுள்ளது. பாடி ரோல் ஏ4 அளவுக்கு இல்லாவிட்டாலும், சி கிளாஸ் காரைவிட அதிகமாக இருக்கிறது. சேஸி பேலன்ஸ் சிறப்பாக இருப்பதால், அருமையான இன்ஜினுடன் வளைத்துத் திருப்பி ஓட்ட வசதியாக உள்ளது.

ந்த செக்மென்ட், ஒரு காலத்தில் என்ட்ரி லெவல் லக்‌ஷூரி செக்மென்ட்டாக இருந்தது. ஆனால், காம்பேக்ட் லக்‌ஷூரி கார்கள் வந்தவுடன் இந்த செக்மென்ட் ஒருபடி தன்னை உயர்த்திக் காட்டிக்கொண்டது. ஆடி ஏ4 காரின் டெக்னாலஜி வேரியன்ட்டில், ஒரு காலத்தில் ஆப்ஷனலாக இருந்த வசதிகள் எல்லாம் ஸ்டாண்டர்டாக இன்று அதே வேரியன்ட்டில் இருக்கிறது. 
சிட்டியில் ஓட்டுவதற்கு அருமையான காராக இருக்கிறது A4. ஆனால், ஏ4 இப்போது அவுட்டேட்டட்.
3 சீரிஸ் ஒரு ஆல் ரவுண்டர் கார். நல்ல இடவசதி, சிறந்த பின்னிருக்கைகள், அருமையான ஓட்டுதல் தரம், சூப்பரான கையாளுமை என பல ப்ளஸ்கள் இருந்தாலும் முழுமையான சொகுசு காராக இல்லை. 
மெர்சிடீஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் விலை அதிகம். பின்னிருக்கை இடவசதி குறைவுதான். ஆனால், பென்ஸ் புதிய சி கிளாஸ் காரில் கொடுத்திருக்கும் வசதிகள் செக்மென்ட்டையே ஒருபடி மேலே கொண்டுசென்றுவிட்டது. இந்தியாவில் அசெம்பிளி துவங்கியதும் விலை குறையும். 3 சீரிஸ், ஏ4 கார்களில் அப்டேட் மாடல்கள் வரும்வரை, சி கிளாஸ்தான் மாஸ்டர் கிளாஸ்!
 


No comments:

Post a Comment