சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jul 2015

கருணாநிதியின் மதுவிலக்கு அறிவிப்பு மக்கள் நலன் சார்ந்ததா? ஆதாய அரசியலா?

ல்லோரும் கல்லால் மாங்காய் அடிக்கிறோம். மாமரத்தில் இருந்து மாங்காய் விழலாம் அல்லது விழாமல் போகலாம். ஒருவர் அடித்தால்  கண்டிப்பாக மாங்காய் விழும். எப்படி? அவர் மாங்காயை கொண்டே மாங்காய் அடிப்பார். அப்படி என்றால் மாங்காய் விழுவது நிச்சயம் தானே! அப்படிப்பட்ட சாணக்கியர், ராஜ தந்திரி யார்? வேறு யார்? சாட்சாத் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான்.

அரசியலில் ராஜ தந்திரம் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த குணத்தை வைத்தே அரசியலில் வெற்றி, தோல்விகள் முடிவு செய்யப்படுகின்றன. நான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் 'மது விலக்கு' என்று அவர் மகன் ஸ்டாலின் மூலமாக சொல்லி ஒரு அரசியல் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து, தமிழக அரசியலை தள்ளாட வைத்து விட்டார். இது நடைமுறை சாத்தியமா? என பொருளாதார நிபுணர்கள் சந்தேகம் கொண்டாலும் இப்போதைக்கு அவருக்கு இணையான தந்திரம் கொண்ட அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவுக்கு ஒரு செக் வைத்து விட்டார் என்று சொன்னால் அது மிகை இல்லை.


தமிழகத்தை பொறுத்தவரையில் இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இருந்து வருகின்றன. அ.தி.மு.க. ஜெயலலிதாவின் தலைமையிலும், தி.மு.க. கருணாநிதியின் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 20 வருடங்களில் இவ்விருவருமே தமிழகத்தை தங்களின் ஆளுமையால் கட்டுபடுத்தி வருகின்றார்கள். இதில் பழுத்த அரசியல்வாதி கருணாநிதி பல வருடங்களாக தனது மன உறுதியாலும், தந்திரத்தாலும் தி.மு.க.வை தாங்கி பிடித்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கருணாநிதியின் பல சாணக்கியதனத்தில் சில துளிகள்:

1. 1991 தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகும், 1993ல் தி.மு.க. உடைந்து ம.தி.மு.க. உருவான பின்னும் கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்து, மீண்டும் அபார வெற்றி பெற்றது கருணாநிதி தன்னிகரில்லாத தலைமைக்கு அபாரமான எடுத்துக்காட்டு.

2. 2001ல் தன்னை கைது செய்த சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றது.

3. 2004ல் மீண்டும் ஜெயலலிதாவின் பாணி கூட்டணி அமைத்து அபார வெற்றி பெற்று மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்தது.

4. 2009ல் பதவி இழப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழல், கனிமொழி சிறை, அண்ணன் தம்பி மோதல் என்று குடும்பமும் கட்சியும் நலிவடைந்து, மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த சூழலில், இவற்றை எல்லாம் புறம்தள்ளி, கருணாநிதி தான் ஈழ தமிழர்கள் மீது கொண்ட அக்கறையை ஒட்டுமொத்த தமிழினமும் வியந்து பாராட்டும் என்று நினைத்தாரோ என்னமோ... ஆனால், தொடர்ந்து ஏமாற தாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை தமிழர்கள் நிருபித்தார்கள். ஆனாலும், இவை எதையும் கருத்தில் கொள்ளாது அடுத்த நாள் படுக்கையில் இருந்து எழும்பி 'டெசோ மாநாடு வெற்றி' என்று அறிவித்த கருணாநிதியின் ராஜ தந்திரத்தை பொன்னாடை போர்த்தி கவுரவித்தாக வேண்டும்.

இது தவிர ஈழ தமிழர்கள்பால் கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் ஒவ்வொரு தடவையும், உடனே ஒரு பல்லவியை சந்தம் தப்பாமல் பாட தொடங்கிவிடுவார். ''தண்டவாளத்தில் தலைவைத்தேன், பதவி இழந்தேன், ஈழம் சென்று திரும்பிய இந்திய ராணுவத்தை புறக்கணித்தேன், உண்ணாவிரதம் இருந்தேன், மனித சங்கிலி போராட்டம் நடத்தினேன்..." இவ்வாறு அது நீண்டு செல்லும்.

ஆனால், ரெயில் ஓடாத தண்டவாளத்தையும், காலை-மாலை இடைப்பட்ட நேர உண்ணாவிரதத்தையும், அடுத்த கட்ட அரசியலுக்காக இழந்த பதவியையும் பற்றி என்ன சொல்ல? அவர் சொன்ன இன்னொரு வாக்குறுதியை பாருங்கள்- கச்சதீவை மீட்க வேண்டுமாம். இதிலே வேடிக்கை என்னவென்றால் கச்சதீவை இந்திராகாந்தி, இலங்கைக்கு தாரை வார்க்கும் போது தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர் இதே கருணாநிதி தான். அதன் பின்னரும் மூன்று தடவைகள், மொத்தம் பதின்நான்கு வருடங்கள் தமிழகத்தின் முதல்வர் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்.

இப்படி தந்திர அரசியலுக்கு பெயர் போன கருணாநிதி இப்போது 'மது விலக்கு நிச்சயம். அது என் லட்சியம்' என சொல்வது மக்களின் மறதியை நினைத்து சொல்லப்பட்டதா? அல்லது தனது அரசியல் நேர் எதிரி முதல்வர் ஜெயலலிதாவை வரும் சட்டசபை தேர்தலில் வீழ்த்த செய்யபட்ட மாய வலையா? தேர்தல் நேரத்து ஆதாய அரசியலா? அல்லது உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்த அறிவிப்பா? என்பதை காலம் காட்டும்.




No comments:

Post a Comment