சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jul 2015

அகன்றது அரை நூற்றாண்டு பகை... மலர்ந்தது கியூபா-அமெரிக்கா உறவு!

சிவப்பு கியூபாவும், வல்லரசு நாடான அமெரிக்காவும் நட்பில் இழைய தொடங்கியுள்ளன. கடந்த 54  வருடங்களாக பல்வேறு விவகாரங்களில் முட்டி மோதிக்கொண்ட இரு நாடுகளும் நட்பு கொடியைப் பறக்கவிட்டுள்ளன.
இரு நாடுகளிலும் அதற்கு அடையாளமாக, ராஜாங்க நடவடிக்கைகளுக்கு ஏதுவாக தூதரகங்களும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் அவ்விரு நாடுகளில் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் தனிக் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலக வரைபடத்தில் தென் அமெரிக்க கண்டத்திற்கும், வட அமெரிக்க கண்டத்திற்கும் இடையில் கடலில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. வட கரிபியன் கடலில், கரிபிய  கடலும் மெக்சிகோ குடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. நில அமைப்பில் அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாக இருந்தாலும் அரசியல் கொள்கை கோட்பாடுகளிலும், அரசு அமைப்பிலும் மிகத் தொலைவில் உள்ள நாடு கியூபா. இது உலகின் 7ஆவது பெரிய தீவு ஆகும்.

அமெரிக்காவின் மியாமி கடற்கரையிலிருந்து 130 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. பல ஆண்டுகள்   பிரிட்டன், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளின் காலனியாக இருந்தது. 1898 ஆம் ஆண்டு  ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து கியூபா விடுபட்டது. 1920 ஆம் ஆண்டில் சுதந்திரக் குடியரசு என்ற நிலையைப் பெற்றது. ஆனால் ஏனைய நாடுகளுடன் கியூபா எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்து ஆதிக்கம் செலுத்தியது. 

அமெரிக்காவின் ஆசி பெற்ற குடியரசாக கியூபா இருந்த நிலையில், 1952 ஆம் ஆண்டு பில் ஜன்ஸியோ பாட்டிஸ்டா (Bill Batisda) என்பவர், ஆட்சி அதிகாரத்தை ராணுவப் புரட்சி மூலமாகக் கைப்பற்றினார். ஆனால் நாட்டின் முன்னேற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை. அனைத்து விதமான சீர்கேடுகளும் மலிந்த நாடாக கியூபா மாறியது.கடுமையான துன்பங்களுக்கு ஆளான மக்கள் நல்லாட்சி வேண்டி நின்றனர்.
 
அந்தக் கொடுமையான காலத்தில்தான், பாட்டிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய படையின் தலைமை தளபதியாக உருவெடுத்தார்  பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro). கியூபாவின் ஒவ்வொரு பகுதிக்கும் போய் இளைஞர்களை அணி திரட்டிய காஸ்ட்ரோ, பாடிஸ்டாவின் மான்கடா (Moncada) படைத்தளம் மீது,  1953 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதியன்று நள்ளிரவு தாக்குதல் நடத்த திட்டமிட்டார். ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைந்து, பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட முக்கிய நபர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். கியூபாவின் சரித்திரம் சிவப்பு என்பதை  பாடிஸ்டா அரசு மட்டுமல்ல, உலக நாடுகளும் உணரத் தொடங்கிய காலம் அது.

ராணுவ அரசின் பிடியில் இருந்த காஸ்ட்ரோ, நீதிமன்றத்தில் வரலாற்று புகழ் பெற்ற தன்னுடைய வாக்கு மூலத்தை உலகின் முன் வைத்தார். "இந்த சிறைவாசத்தைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை.. என்னை தண்டியுங்கள். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. வரலாறு என்னை விடுதலை செய்யும்! " என்று முழங்கினார்.

துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் பிடல். தொடர்ந்து நாட்டின் சூழல் கொதிப்படைந்து கொண்டே வந்தது. எங்கு நோக்கினும் ராணுவ அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு நின்றார்கள்.பின்னர்  1959 ஆம் ஆண்டில் கொடுங்கோலன் பாடிஸ்டா, நாட்டை விட்டே ஓடும் அளவுக்கு மக்கள் புரட்சி வென்றது.
ஆட்சி பிடல்காஸ்ட்ரோவின் கைகளுக்கு மாறியது. அமெரிக்கா உள்ளிட்ட அண்டை  நாடுகள் அதிர்ச்சியடைந்தன. அன்று முதல் தொடங்கிய வல்லரசு அமெரிக்காவிற்கும், கியூபாவுக்குமான மோதல் போக்கு, கடந்த 54  ஆண்டுகளாக நீடித்தது. தற்போது இரு நாட்டு தலைமையும் நட்புறவை விரும்புவதால் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

குடல் நோய் பாதிப்பால் துன்பப்பட்டு வந்த காஸ்ட்ரோ, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி அரசியல் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து 47 ஆண்டுகள் கியூபாவின் பிரதமராகவும், பின்னர் அதிபராகவும் விளங்கிய பிடல் காஸ்ட்ரோ, தனது 80 ஆவது வயதில் பொறுப்புகளை தனது தம்பி ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். இவரைப் பற்றிய அமெரிக்க தகவல்கள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும்

உலகின் வல்லரசு என்பதாலும், எந்த நாட்டின் பிரச்னையிலும் தலையிடும் அதிகாரம் கொண்ட நாடு என்பதாலும் அமெரிக்கா, கியூபாவிடமும் அடிக்கடி முரண்படும். கியூபாவும்,  அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி தர தயங்கியதில்லை. எந்த வகையிலும் அமெரிக்காவால் பலன் பெறாத நாடு என்றால் அது கியூபா என்று சொல்லலாம். காரணம் இரு நாட்டிற்கும் இடையிலான அரசியல் கொள்கைகள்,  செயற்பாடுகள். பொதுவுடைமை தத்துவம் கோலோச்சும் கியூபாவில், முதலாளித்துவ சிந்தனை கொண்ட வல்லரசான அமெரிக்காவின் உள்ளடி வேலைகள் எடுபடவில்லை. முன்னாள் சோவியத் யூனியனிடம் நட்புறவு கொண்ட கியூபா,  அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாகவே பல ஆண்டுகள் இருந்தது.

பின்னர் 1991 ஆம் ஆண்டு வாக்கில் சோவியத் யூனியன் பிரிந்ததையடுத்து, கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து முடக்கியது. அதுவரையில் பொருளாதார ரீதியாக பலம் கொடுத்து வந்த ரஷ்யா, கியூபாவிடம் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றது அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியளித்தது. இது கியூபாவிற்கு பெரும் சிக்கலைக் கொண்டுவந்தது.

கியூபாவுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே உறவு முறிந்தது 1961 ஆம் ஆண்டு. 1959 ஆம் ஆண்டில் சிவப்பு நாடுகளான கியூபாவும்,  ரஷ்யாவுடன் கொண்ட கொள்கை ரீதியிலான உறவுகளால், சோவியத் நாட்டின்  ஏவுகணையைப்  பொருத்திக்கொள்ள இடமளித்தது கியூபா. இது பெரிய விவாதத்திற்கு வித்திட்ட விவகாரம் என்றாலும், அமெரிக்காவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.  

1962 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா, அணுகுண்டு ஏவுகணையை  கியூபாவில் நிறுத்த எடுக்கப்பட்ட  முடிவானது ரஷ்யா – அமெரிக்காவிடையே உலகப் போராக வெடித்து, பெரும் அழிவுக்குக் கொண்டு செல்லும் என்று உலகநாடுகள் மத்தியில் அச்சம் நிலவியது.
இது தொடர்பாக கியூபாவுடன் ஏற்பட்ட மோதலில்,  கியூபாவுடனான அனைத்து ராஜதந்திர உறவையும் முறித்துக் கொண்டார் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான். எப். கென்னடி. பின்னர் நடந்த கென்னடி கொலைச் சம்பவத்தில் பிடல் காஸ்ரோவின் கரங்கள் இருந்தன என்றும் சந்தேகம் விதைக்கப்பட்டது. ஆனாலும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கியூபாவிற்கு பெரும் இடைஞ்சல் தராதவாறு காஸ்ட்ரோ பார்த்துக்கொண்டார்.
வேளாண்மை, மருத்துவம், சுற்றுலா என்று பல்வேறு துறைகளில் தன்னிறைவு பெற்ற நாடாக கியூபாவை அவர் மாற்றிக் காட்டினார். அதனாலேயே கரும்பின் உற்பத்தி அதிக அளவில் உயர்ந்து உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்ற பெயரை பெற்றது. இன்றளவும் மருத்துவத் துறையில் புற்று நோய் உள்ளிட்ட ஆட்கொல்லி நோய்களுக்கு சிறந்த மருத்துவம் தரும் நாடகத் திகழ்கிறது.  

இந்நிலையில் இவ்வளவு காலமும் பகைமை பாராட்டிய அமெரிக்கா, இப்போது கியூபாவிடம் நட்பு பாராட்ட காரணங்கள் வலுவாக இருக்கத்தான் செய்கின்றன. இப்போது கியூபாவுடன் அமெரிக்கா கொள்ளும் புதிய உறவானது வெனிசுலாவில் இருந்து தென் அமெரிக்கா நோக்கிய அமெரிக்க உறவில் புதிய கதவுகளைத் திறந்துள்ளது என்று கணிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த முடிவை எடுக்க இரண்டு வலுவான காரணங்கள் உள்ளன.

1. இப்போதே தென் அமெரிக்காவில் சீனா ஆழமாகக் கால்பதித்து எண்ணெய்  வர்த்தகம், கட்டுமானப் பணிகளில் நிலைத்து நிற்கிறது. அதனால் இந்த வர்த்தகத்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது. 

2. பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளான அரேபியா உள்ளிட்ட நாடுகளில்,  தங்களால் நீண்ட காலத்திற்கு வணிகம் மேற்கொள்ள முடியாது என்று அமெரிக்கா உணர்ந்துள்ளதால் ஆசியா கண்டத்தை நோக்கி தனது வர்த்தக கரத்தை நீட்டியுள்ளது. அதே ஆர்வத்தில்,தனது வணிகக் கரங்களை தென் அமெரிக்காவிலும் விரித்துள்ளது. அதன் அடையாளமாகவே இந்த தூதரக நடவடிக்கைகள் அமைந்துள்ளன.   

இந்நிலையில்தான் அமெரிக்கா வேறு வழியின்றி, கியூபாவுடன் சமாதானமாக செல்லும் முடிவை எடுத்தது. அதனையடுத்தே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் தொலைபேசியில் பேசினார்கள். இதில் சுமூக நிலை உருவானது. இதைத் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 21, 22 ஆம் தேதிகளில் கியூபா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கியூபா தலைநகர் ஹவானாவில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அப்போது கியூபா அதிகாரிகள், தூதரக உறவு தொடங்குவதற்கு முன்பு கியூபாவை தீவிரவாதிகள் நாடு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபாவை தீவிரவாதிகள் நாடு பட்டியலில் இருந்து நீக்குவது உள்ளிட்ட  முடிவுகளைக் கடந்த  6 மாதங்களில் எடுத்து, இன்று தூதரகம் திறக்கும் அளவிற்கு  நிலைமையைக் கொண்டு சென்றுள்ளார்.

இந்த உறவு மாற்றத்தில் முக்கிய பங்காற்றியவர்  கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ். அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் அமெரிக்காவின் ஆதரவு கொண்டவர். இவர் மேற்கொண்ட முயற்சிகள் தற்போது பலன் தந்திருக்கின்றன.  அவர் மேற்கொண்ட முயற்சிகளுடன், கனடாவும் அரசியல்  காய்களை நகர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த உறவுகளால் இனி நடக்கவிருப்பவை என்ன என்பது உலகம் அறிய ஆவலாயிருக்கிறது. முதலில், உளவு பார்த்ததாக கியூபா  கைது செய்து 5 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ள  அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இணையதள நிபுணர் ஆலன் கிராஸ் விடுவிக்கப்படுவார். அமெரிக்காவும் தனது நாட்டுச் சிறைகளில் அடைத்து வைத்துள்ள கியூபா நாட்டினரை விடுவிக்கும்.  அமெரிக்காவின்  உற்பத்தி பொருட்கள்  எளிதாக கியூபா சந்தையில் விற்கும். கியூபா  'சிகார்'  அமெரிக்காவின் சந்தைகளை அலங்கரிக்கும். கியூபாவின் வேளாண் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி ஆகும். அழகிய கடற்கரையைக் கொண்ட கியூபா, தனது சுற்றுலா துறையில் பெரும் வளர்ச்சியை அடையும்.     

இரு நாடுகளில் சுமூக நிலை ஏற்பட்டதை அடுத்து, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கியூபா தூதரகம் நேற்று (திங்கள் கிழமை) திறக்கப்பட்டது. அதே போன்று கியூபா தலைநகர் ஹவானாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது.  இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உலக அளவில் கருதப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், பகைமை மறந்து இரு நாடுகளும் தங்களின் அரசியல் உறவில் ஒரு முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளன. இந்த வர்த்தக அளவிலான உறவு, கரீபியன் கடல் பகுதியிலும் தென் அமெரிக்கக் கண்டத்திலும் அமைதியை நிலைக்க செய்வதாக அமைய வேண்டும் என்பதே உலகின் எதிர்பார்ப்பு.


No comments:

Post a Comment