சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jul 2015

புகைபிடிப்பவர்கள் கவனத்துக்கு !

புகைப் பழக்கம் உள்ளவர்கள் உடல் நலத்தைப் புறக்கணிப்பதோடு, பொதுவாகவே மாத பட்ஜெட்டில் அதற்கென கணிசமான தொகையை ஒதுக்கவேண்டியிருக்கும். இந்தக் கூடுதல் செலவு போக, இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பிரீமியமும் கூடுதலாக கட்டவேண்டியிருக்கிறது. புகை, மதுப் பழக்கம் இருப்பவர்கள் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது என்ன நஷ்டம் என்பது குறித்து எல்.ஐ.சி.யின் மார்க்கெட்டிங் பிரிவின் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் விளக்கமாகச் சொல்கிறார்.
''எந்தவிதமான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தாலும் பாலிசியின் விண்ணப்பத்தில் உங்களுடைய உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பழக்கங்கள் குறித்த கேள்விகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். உங்களுக்கு அந்தப் பழக்கங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கட்டாயம் குறிப்பிடவேண்டும். எந்தவிதமான கேடு விளைவிக்கும் பழக்கமும் இல்லை என்றால் பிரச்னை இல்லை. அதோடு, உங்களுடைய பிரீமியமும் சற்று குறையும். மது, புகைப் பழக்கம் ஏதாவது இருந்தால் உங்களின் இன்ஷூரன்ஸ் பிரீமியம் 1-லிருந்து 2 சதவிகிதம் வரை உயரும்.

தவிர, இன்ஷூரன்ஸ் நிறுவனங் கள், ஒரு நாளைக்கு எத்தனைமுறை மது அருந்துவீர்கள், எத்தனை முறை புகைபிடிப்பீர்கள் என்றெல்லாம் கேட்கும். உங்களின் பழக்கத்தைப் பொறுத்து, அடுத்தக்கட்டமாக, மருத்துவப் பரிசோதனை தேவைப்பட்டால் அதையும் செய்யவேண்டியிருக்கும். அதில், உங்களுடைய தீயபழக்கத்தினால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன என்பது தெரிய வந்துவிடும். அதன்பிறகு உங்களின் பிரீமியத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் முடிவு செய்யும். இதன்படி கூடுதல் பிரீமியத்தை உங்களின் பாலிசி காலம் முழுவதும் செலுத்தவேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை புகைபிடிப்பவர்களுக்கு பிரீமியத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. இவர்களின் சதவிகிதமும் குறைவுதான். இதேபோலத்தான் மது பழக்கத்திற்கும். ஆனால், இரண்டிற்கும் பிரீமியத்தில் வித்தியாசம் இருக்கும்.
பாலிசி எடுக்கும்முன் உங்களுக்கு புகை, மது, போதை பழக்கம் ஏதாவது ஏற்பட்டால் அதை கட்டாயம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிப்பது நல்லது. இல்லையெனில், க்ளைம் பெறுவதில் பிரச்னை வரலாம். ஏனெனில், பாலிசி எடுத்த இரண்டு வருடத்திற்குள் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் இன்ஷூரன்ஸ் சட்டம் 45 பிரிவின் கீழ் உங்களுடைய பாலிசியை ரத்து செய்வதற்கான முழு அதிகாரமும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு உண்டு.
பாலிசி ரத்து செய்யப்பட்டால் நீங்கள் செலுத்திய பிரீமியத் தொகையும் கிடைக்காது. கூடுதல் பிரீமியம் செலுத்தவேண்டுமே என உண்மையை மறைத்திருந்தால் பாலிசி ரத்தாகிவிடும் என்பதை மனதில்கொண்டு செயல்படுவது நல்லது. க்ளைம் வரும்போது உங்களின் அனைத்து மருத்துவ அறிக்கையையும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதில் ஏதாவது ஓர் இடத்தில் இந்தப் பழக்கங்களில் ஏதாவது ஒன்று இருப்பதாக மருத்துவர் சிறுகுறிப்பு எழுதினால்கூட க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படும், எச்சரிக்கை.
மேலும், உங்களது இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகை உங்களின் சம்பளத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். அதாவது,
25 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் உள்ளவர் இரண்டு லட்ச ரூபாய்க்கு கவரேஜ் என்றால் உங்களுக்கான க்ளைமில் பெரிய பிரச்னை இருக்காது. அதே நீங்கள், 25 ஆயிரம் சம்பளத்திற்கு 1 கோடி ரூபாய் கவரேஜுக்கு பாலிசி எடுத்தால் நீங்கள் எல்லாவிதமான மருத்துவச் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இதில் உங்களின் அனைத்துவிதமான பழக்கவழக்கங்களும் தெரிந்துவிடும். எனவே, இன்ஷூரன்ஸ் எடுக்கும் போது கவனமாக இருப்பது அவசியம்.
இன்ஷூரன்ஸ் என்பதே நமக்குப் பிறகு நம்முடைய குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை சமாளிக்கத்தான். நீங்கள் சொல்லும் சின்ன பொய்யால் உங்களுடைய குடும்பம், இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து க்ளைம் தொகையைப் பெற படாதபாடு படவேண்டியிருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்களிடம் இருக்கும் தீயபழக்கத்தை மறைக்காமல் சொல்லிவிடுவீர்கள். அதேசமயத்தில், இவ்வளவு பிரச்னைகளுக்கு எளிய தீர்வு, இந்தமாதிரியான பழக்கங்களை விட்டொழிப்பதுதான்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.



No comments:

Post a Comment