சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2015

டாஸ்மாக் சென்றால் என்ன உயிர் கவசம் அணிய வேண்டும்?

ண்டுக்கு 26,000 கோடிகளைத் தாண்டி, 50,000 கோடிகள்  இலக்கை நோக்கி பலரையும் மலடாக்கி, மன நோயாளியாக்கி, சர்க்கரை, இதய மருத்துவமனைக்கு அனுப்பும் தமிழக அரசின் மது என்ற விஷம் கொடுக்கும் 'புரட்சி', குடும்பம் என்ற நல்ல சமூக அமைப்பை சீர்குலைத்து வருகிறது.

பல்வேறு காலங்களில் வறட்சிகள், வெள்ளம் பார்த்தும் பயப்படாமல் உழைப்பால்  நிமிர்ந்து நின்ற தமிழகம், ஒரு பாட்டில் 'சரக்கால்' சாய்க்கப்பட்டு விட்டது. கள்ளுண்ணாமை பற்றி வள்ளுவர் எழுதிய திருக்குறளை பேருந்தில் மட்டும் எழுதி, தெருவெங்கும் டாஸ்மாக்   கடையை திறந்து வைத்துள்ள 'பெருமை' தமிழக அரசையே சேரும்.

மது கொடுத்து மக்களை மயக்கத்தில் போதை தெளியாமல் பார்த்துக்கொள்வது, பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டும் வருவது அரசின் கொள்கை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அரசின் 'கொள்கையில் (?)' நீதிமன்றம் தலையிடாது என்றும் கூறியுள்ளது, பொது நல நோக்கர்கள் மட்டுமின்றி குடும்பப் பெண்களின் வாழ்விற்கும் மது அரக்கனை வெல்ல முடியாது என்ற பயத்தை கொடுத்துள்ளது.

காந்திஜியின் கொள்கை, அண்ணாவின் கொள்கை, பெரியாரின் கொள்கை, வள்ளலாரின் கொள்கை, ராமானுஜர் கொள்கை என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம். மது குடிக்க வைக்கவும் கொள்கை என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். அன்றாடம் செய்தித்தாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர் சாவு என்றும், மதுவால் மனைவி தற்கொலை, மதுவால் ஏற்பட்ட கடனால் குடும்பமே தற்கொலை என்ற துக்கச் செய்திகள் ஆக்கிரமித்தாலும், அரசின் கொள்கையான மக்களை கொலை செய்யும் மது விற்பனையை, நீதிமன்றம் கூட தடுக்க முடியாத நிலையில், யார் தான் என்ன செய்ய முடியும்?

ஒரு அரசாங்கம் மக்களை தீய வழியில் நடத்துவதை எப்படி கொள்கை என்று சொல்ல முடியும்? அரசாங்கம் கொள்ளை அடிப்பதும் நாளை கொள்கை வடிவில் இடம் பெறலாம். கட்டாய ஹெல்மெட் சட்டம் மூலம் மக்களின் தலையை காக்க ஹெல்மெட் போடச் சொன்ன நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மது என்ற விஷம் வைத்து கொல்வதை எப்படி வேடிக்கை பார்க்கிறது?

ஒரு தனி நபரின் விருப்பு, வெறுப்பு உடல் நிலை பற்றி ஏதும் அறியாமல் கட்டாய ஹெல்மெட் சட்டம் உள்ளது. ஆனால், அரசே மக்களை விஷம் வைத்துக் கொல்ல எந்தத் தடையும் இல்லாமல் நீதிமன்றம் அரசின் கொள்கையில் தலையிடாது என தெரிவிப்பது, வரும் காலத்தில் பல சட்ட சிக்கல்களை தோற்றுவிக்கும்.

மதுக்கொள்கையின் மூலம் வருமானம் பார்க்கும் அரசு, அதேபோல் பல்வேறு கொள்கைகளை வகுத்தால் இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும். அதில் சில...

கட்டாய தார் இல்லாத ரோடு போடும் கொள்கை:

இந்தக் கொள்கை  மூலம் அரசு ஒப்பந்ததாரர்கள் இஷ்டத்திற்கு 'மாதிரி' ரோடு போடலாம், தார் இல்லாமல் ரோடு போடுவதால் அடிக்கடி ரோடு போடும் ஒப்பந்தம் மூலம் கொள்ளை அடிக்கலாம்.

கட்டாய  லஞ்சம் கொடுக்கும் கொள்கை:

இந்தக் கொள்கை மூலம் தெருவில், நடுரோட்டில் நிற்கும் போக்குவரத்து போலீசாரிடம் ஹெல்மெட் அணியாதவர்கள்   மட்டுமின்றி அரசுக்கு வருமானம் தரும் தமிழ்நாட்டின் மீது பற்று கொண்ட பாசக்கார குடிமகன்கள் போலீசாரிடம் கட்டாய லஞ்சம் கொடுத்து விட்டு வண்டி ஓட்டலாம்.

கட்டாய கண்மாய் 'கணக்கு' கொள்கை:

இந்தக் கொள்கை மூலம் கண்மாய்கள் ஆழப்படுத்தியது போலவும், கரைகள் பலப்படுத்தியது போலவும் கணக்கு காண்பிக்கப்படும். கொட்டும் மழையில் மனிதர்களே நடக்க முடியாத சூழலில் வெள்ளம் வரும் காலத்தில் கண்மாய் வெட்டியது போல கணக்கு காட்டப்படும்.

கட்டாய நீர் நிலைகள் மேல் அரசு குடியிருப்பு, அலுவலகம்  கட்டும் கொள்கை:

இந்தக் கொள்கை மூலம் நீர் நிலைகளால் மக்களுக்கு அதிகம் பலன் கிடைப்பதால் (மக்கள் அரசிடம் கையேந்தி தானே நிற்க வேண்டும்) லாரி நீர் விற்பனை குறைவை ஈடுகட்டவும், வெள்ள நிவாரண நிதி, வறட்சி நிவாரண நிதி மத்திய அரசிடம் பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதால் நீர் நிலைகள் மேல் வீடு, அரசு அலுவலகம் கட்டி மக்களை வெள்ளத்திற்கும், வறட்சிக்கும், குடி நீர் பஞ்சத்திற்கும் ஆளாக்கி மத்திய நிதி பெற இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வரும். மேலும் ஹெலிகாப்டரில் இருந்து உணவுப்பொட்டலம் போட்டு பல கோடிகள்  கணக்கும் கட்ட இந்தத்திட்டம் உதவும்.

கட்டாய விவசாயிகளை விரட்டும் கொள்கை:

பல லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலத்தை கூறு போட்டு பிளாட் போட்டால் அரசுக்கு பத்திரப்பதிவின் மூலம் லாபமும், அரசு ஊழியர்களுக்கு லஞ்சமும் கிடைக்க வழி இருப்பதால் இந்தத்திட்டம் உடனடியாக அமலுக்கு வரும். இதன் மூலம் விவசாயிகளை நாடு கடத்தவும், வாட்ச்மேன் வேலைக்கு அனுப்பவும் முடியும்.

தொழில்களை முடக்கும் கொள்கை:

மின்சார பற்றாக்குறையை ஏற்படுத்தி தொழில்களை நடக்க விடாமல் செய்வதால் மக்கள் வேலையின்றி டாஸ்மாக் கடைக்கு வந்து சரக்கு சாப்பிட்டு வருமானத்தை இழப்பார்கள். ஆகவே தொழில் முடக்கும் திட்டம் அவசியம் என்பதை அரசு உணர்ந்து டாஸ்மாக் மதுபான  கொள்கை வடிவில் வெற்றி பெற தொழில்களை முடக்கும்.

கட்டாயம் வாகனப்போட்டி கொள்கை:

அதிகப்படியான வாகன அனுமதிக்கு அரசு ஆதரவளிக்கும், முறையற்ற வாகனப் பெருக்கத்தால் சாலைகளில் வாகனப் போட்டி நடக்கும். வாகன நெரிசலால் பாதிப்பேர் வீட்டை விட்டு வெளியே கிளம்ப பயப்படும் நிலை வரும். இதனால் மெகா சீரியல்கள் கட்டாயம் பார்க்கும் சூழல் ஏற்படும். 

டாஸ்மாக் சரக்கும் சந்தேகமும்:

1. டாஸ்மாக் சரக்கு நல்ல ஆரோக்கியமான உணவாக இருந்தால் டாஸ்மாக் சரக்கில், விற்பனை செய்யும் கடையில் குடி குடியைக் கெடுக்கும் என போடச் சொல்வதேன்? தெரியாமல் கொலை செய்தாலும் கொலைதான். பிறர் குடும்பம் அழியவும், தெரிந்தே மதுவால் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதிப்பதேன்?

2. டாஸ்மாக் சரக்கில் அதிகமான நச்சு கலந்திருப்பதாக செய்திகள் வரும் நிலையில் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு இடைக்காலத் தடை கூட விதிக்காதது ஏன்?

3. ஆய்வறிக்கை வெளிவரும் வரை டாஸ்மாக் சரக்கு கடைகளை பூட்டச் சொல்லாதது ஏன்?

4. இதுவரை டாஸ்மாக் சரக்கால் ஏற்பட்ட விபத்து பற்றி அரசு, பொதுநல சமூக எண்ணம் கொண்டவர்களிடம் அறிக்கை கேட்காதது ஏன்?

5. ஒருவேளை டாஸ்மாக் சர்க்கால் மக்கள் பலர் சாகின்றனர் என்ற உண்மையை நீதிபதிகள் உணர்ந்தால் டாஸ்மாக் கடையை மூடச் சொல்வார்களா?

6. டாஸ்மாக் சரக்கு குடித்து இதயம், சிறுநீரகம் கெட்டுப் போனவர்களுக்கு நீதிமன்றம் என்ன இழப்பீடு வழங்கும்?

7. டாஸ்மாக் சரக்கு விற்பனை லாபத்தின் மூலம் மக்களின் நவீன மருத்துவத்திற்கு அரசு என்ன உதவி செய்யும்?

8. பல குடிகள் அழிந்து வருகிறது எனத் தெரிந்தும் அரசும், தயாரிப்பு நிறுவனமும் பல கோடிகள் சம்பாதிக்க ஏழைகளின் உயிர் அவ்வளவு மலிவாகி விட்டதா?

அரசியல்வாதிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அமெரிக்கா செல்லலாம், அப்பாவி முனியனும், முத்துவும் மூச்சு அடைத்தால்  அரசு மருத்துவமனையில் இடம் பிடிக்க இரவிலேயே முன்பதிவு எனபது அவர்கள் தலை விதி என்று சொல்லத்தான் வேண்டுமா? நீதிமன்றம் குடிகாரர்களின் குடும்பங்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் குடும்பத்தினரிடம் ஒரு தொகையை கொடுக்கச் சொல்லி விட்டு டாஸ்மாக் கடையை நடத்த அனுமதிக்க வேண்டும். அரசின் டாஸ்மாக் சரக்கால் செத்துப்போனால் வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்குமா? இல்லை அரசு வேலை கிடைக்குமா?

இலவசம் கொடுக்க இலவசமாக உயிர் எடுப்பது நியாயமா? இலவசமாக மருத்துவமனையிலும் இடம் கொடுக்கும் திட்டம்  இருந்தால் சொல்லுங்கள். அய்யா சாலையில் வண்டி ஓட்ட உயிருக்கு பாதுகாப்பு என்று ஹெல்மெட் போடச் சொல்கிறீர்கள். டாஸ்மாக் கடைக்குச் சென்றால் என்ன உயிர்க்கவசம் எனத் தெளிவாகச் சொல்லுங்கள். அய்யா, அவசர வண்டி 108 யை ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன் நிறுத்த வேண்டும் என்பதே ஏழைப்பெண்களின் அன்பு வேண்டுகோளாக இருக்கிறது.



No comments:

Post a Comment