சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Jul 2015

உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !

'நாம் கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையையும் சேர்த்துதான் கட்டுகிறோம். எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இன்ஷூரன்ஸைப் பயன்படுத்தி 40 லட்சம் ரூபாய் வரையிலும் இழப்பீடு பெற முடியும். ஆனால், இந்தச் செய்தியை இன்ஷூரன்ஸ் நிறுவனமோ, கியாஸ் நிறுவனமோ மக்களுக்குச் சொல்வது இல்லை!’ இப்படி ஒரு செய்தி குபீரெனப் பரவுகிறது. அது உண்மையா? 
உண்மைதான்! ஆனால், முழு உண்மை அல்ல. எரிவாயு இணைப்பை நாம் பெறும்போதே, ஒவ்வோர் இணைப்பின் மீதும் இரண்டு வகையான இன்ஷூரன்ஸ் எடுக்கப்படுகின்றன. ஒன்று, சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் எடுப்பது; மற்றொன்று நமது கியாஸ் ஏஜென்சி எடுப்பது. இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் தொகையை, கியாஸ் ஏஜென்சிகளும் கியாஸ் நிறுவனங்களுமே செலுத்திவிடும்; வாடிக்கையாளர்களாகிய நாம் செலுத்தவேண்டியது இல்லை.
ஒருவேளை கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், இதற்கான தொகையை இன்ஷூரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் இது பொருந்தும். இதன்படி, தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரையிலும், மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரையிலும், உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக இழப்பீடு பெற முடியும். இந்த இழப்பீட்டுக்கான உச்சவரம்பு எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம், குறிப்பிட்ட ஒரு விபத்துக்கு 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இப்படி ஒரு இன்ஷூரன்ஸ் இருப்பது குறித்து, கியாஸ் ஏஜென்சிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் மக்களுக்கு எந்தத் தகவலும் சொல்வது இல்லை. இது தொடர்பான விழிப்புஉணர்வும் மக்களிடம் இல்லை. இதனால் கியாஸ் சிலிண்டர் விபத்துக்கள் எத்தனையோ நடந்திருந்தும், கடந்த 20 ஆண்டுகளில் ஒரு கிளெய்ம்கூட செய்யப்படவில்லை. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய், பிரீமியம் என்ற பெயரில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குச் செல்கிறது.
அதே நேரம், இந்த முறையில் கிளெய்ம் செய்ய வேண்டுமானால், அதற்கு பல நிபந்தனைகள் இருக்கின்றன. விபத்து ஏற்பட்டதும் உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள், சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனத்திடமும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமும் தெரிவிப்பார்கள். பிறகு, அதிகாரிகள் குழு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அதுவரையில் விபத்து நடந்ததற்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். விபத்து குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்க வேண்டும். யாருக்கேனும் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை இணைக்க வேண்டும். விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்திருந்தால், அதற்கான மருத்துவமனை/ மருந்துப் பொருட்களின் ரசீதுகளை இணைக்க வேண்டும். விபத்தின் மூலம் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும். ஆனால், இவையெல்லாம் விபத்துக்குப் பிறகான நடைமுறை.
விபத்துக்கு முன்னரே நாம் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ஏகமாக இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். அப்படி சான்று பெற்றிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. நமது பெயரில் நாம் பெற்ற கியாஸ் சிலிண்டராக இருக்க வேண்டும். அவசரத்துக்குக் கடன் வாங்கிய சிலிண்டரில் விபத்து ஏற்பட்டால், கிளெய்ம் செய்ய முடியாது. இப்படிப் பல நிபந்தனைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நிறைவேற்றி இருந்தால் மட்டுமே, விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியும்.
'ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற பொருட்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்’ என்ற முதல் இரண்டு விஷயங்களிலேயே நம் ஆட்கள் அத்தனை பேரும் ஃபெயில் ஆகிவிடுவார்கள். இத்தனை சிக்கலான நிபந்தனைகளை வைத்துக்கொண்டு, அதை மக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?
'இது தொடர்பாக விளம்பரங்கள் செய்வது இல்லை என்பது உண்மைதான். அதற்காக இதை நாங்கள் மறைக்கிறோம் எனச் சொல்ல முடியாது. எல்லா விவரங்களும் எங்கள் இணையதளங்களில் வெளிப்படையாக இருக்கின்றன’ என்கிறார்கள் எரிவாயு நிறுவன ஊழியர்கள்.
கியாஸ் சிலிண்டர் விபத்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே இருக்கின்றன. சிலிண்டர்களை எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் கையாள்வது இதற்கு முக்கியக் காரணம் என்றால், காலாவதியான சிலிண்டர்கள் இன்னொரு காரணம்.
அது என்ன காலாவதியான சிலிண்டர்?

'இந்த சிலிண்டர், எரிவாயு நிரப்பும் தரத்துடன்தான் இருக்கிறது’ என, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு சிலிண்டரும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்தச் சோதனையில் சிலிண்டரில் ஏதேனும் குறை இருப்பது தெரியவந்தால், அது சரிசெய்யப்பட்டு இந்தியத் தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards) சான்று அளித்த பின்னரே, மீண்டும் பயன்பாட்டுக்கு விட வேண்டும். ஒரே சிலிண்டரில் இரண்டாவது முறையாகக் குறை இருப்பது கண்டறியப்பட்டால், அது பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும்.
சிலிண்டரின் தலைப்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கின்றன அல்லவா? அதில் ஒரு கம்பியின் பக்கவாட்டில், சிலிண்டரின் எடை விவரங்கள் இருக்கும். இன்னொன்றில், காலாவதி தேதி குறித்த எண்கள், சுருக்கெழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையில் A, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் B, ஜூலை முதல் செப்டம்பர் வரை C, அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் D. உதாரணத்துக்கு உங்கள் சிலிண்டரில் A–15 என எழுதப்பட்டிருந்தால், அதன் எக்ஸ்பயரி தேதி மார்ச் 2015 என அர்த்தம். இந்தத் தேதிக்குப் பிறகு சிலிண்டரைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. கியாஸ் கசிவு முதல் சிலிண்டர் வெடிப்பது வரை பல அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகம். காலாவதித் தேதியைக் கடந்து இருந்தாலோ, மிக நெருக்கத்தில் இருந்தாலோ,  அந்த சிலிண்டரை நிராகரிக்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு!
காப்பீடு பெற...
சென்னைப் புறநகர் பகுதியில் உள்ள கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ஒருவரிடம் பேசியபோது, ''கியாஸ் ஏஜென்சி தரப்பில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். கியாஸ் கம்பெனி தரப்பில் எடுக்கணீப்படும் இன்ஷூரன்ஸ் தனி. என் அனுபவத்தில் இதுவரை யாரும் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணியது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அடுப்பு, லைட்டர், டியூப் போன்றவற்றின் தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக எங்கள் பிரதிநிதிகள் சென்றால் மக்கள் யாரும் ஒத்துழைப்பதும் கிடையாது. ஒருவேளை இனிமேல் யாரேனும் இப்படி தரச் சான்றிதழ் பெற்று உரிய முறையில் பராமரித்தால், ஏதேனும் விபத்து ஏற்படும்போது இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம்'' என்றார்.


No comments:

Post a Comment