சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jul 2015

மண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்!

துரங்கம் ஆட்டத்தை பற்றி நமக்கு தெரியும். இரு அணிகளுக்கும் ராஜா தலைமையில் ராணி, மந்திரிகள், சிப்பாய்கள் என 16 பேர் அடங்கிய படை. ராஜா, ராணி என ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இயங்குவார்கள் என இருவருக்கும் ஒரே மாதிரியான விதி. ஒரு படை இன்னொரு படையை தாக்கி, ராஜாவை சிறைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆட்டம். 

தாக்குதல் நடத்துவதும், அதில் இருந்து தற்காத்துக்கொள்வதும்தான் ஆட்டம் என்று நினைத்தால் நிச்சயம் நீங்கள் இதில் வெல்ல முடியாது. தந்திரமாய் சிப்பாயையோ அல்லது வேறு வீரரையோ தாக்கும்படி வாய்ப்பு ஏற்படுத்தித் தந்து, ஆசையை உருவாக்கி, அந்தப் படையை கவர்ந்திழுத்து, அதன் பின்னர் சுற்றிவளைத்து தாக்கி ராஜாவை சிறைபிடிக்க வேண்டும். அப்படியென்றால்தான் நீங்கள் வெல்ல முடியும். 

அதாவது ஆசை காட்டி, கவர்ந்திழுத்து தாக்க வேண்டும். சதுரங்கத்தில் உள்ள இந்த உளவியலை தீர்க்கமாய் அறிந்தவர்களுக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்து வந்தது. கிடைத்தும் வருகிறது. இனியும் கிடைக்கக் கூடும். 
'மாட்டாத வரை எதுவும் தவறில்லை!'
இன்றைய சமூகத்தில் ஒருவர் கற்றவரா, பண்பாளரா என்பதையெல்லாம் தாண்டி அவர் செல்வந்தரா என்பது முக்கிய தகுதியாய் இருக்கிறது. செல்வந்தராக இருந்தால், அவர் எவ்வழியில் பொருளீட்டினார் என்பதெல்லாம் பார்க்கப்படுவதில்லை. மாட்டாமல் இருக்கும் வரை எதுவும் தவறில்லை என்பதுதான் பொதுவான கோட்பாடாக மாறிப்போனது. 

மந்திரிகுமாரியில் ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு. நாட்டை சூறையாடிவந்த கொள்ளையனை சிறையில் அடைத்திருப்பார்கள். அவனிடம் ராஜதந்திரியான அவனது தந்தை,  குற்றத்தை ஒப்புக்கொண்டு ராஜாவிடம்  விடுதலை பெறுமாறு அவனிடம் சொல்வார். அப்போது கொள்ளையனான அவரது மகன், கொக்கரிப்போடு சிரித்துவிட்டு,  'குற்றம்...எது குற்றம்? உங்களுக்குதான் அது குற்றம். எனக்கு அது கலை' என்பான் இறுமாப்பாக. 

நிஜத்தில் நடந்துகொண்டிருப்பது அதுதான். மாட்டிக்கொண்டால் குற்றம். மாட்டாத வரை அது ஒரு கலை, கொஞ்சம் முன்னேறி இன்று அதுவே சாமார்த்தியம் என்றாகிவிட்டது.
இந்தச் சூழல் பெரும்பாலானோர் உடனடி பணக்காரராகிவிட வேண்டும் என்றும், உழைக்காமல், குறுகிய காலத்தில் பணம் சேர்த்துவிட வேண்டும் எனவும் யோசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இப்படி எப்படியாவது பணம் ஈட்டிட வேண்டும் என நினைப்பவர்கள்தான் மோசடியாளர்களின் டார்கெட்.
சர்வசாதாரணமாய் இல்லாமல் இவர்களை ஏமாற்றுவது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அனைத்தும் மிக நூதனமானவை. இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா அல்லது இப்படியெல்லாம் ஏமாறுவார்களா என யோசிக்க வைப்பவை. ஆனால் அத்தனையும் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றது. லட்சங்களில் துவங்கி பல ஆயிரம் கோடி வரை மோசடிகள் சர்வ சாதாரணமாய் நிகழ்ந்த பகுதி என்றால் தமிழகத்தின் மேற்கு பகுதியான இந்த கொங்கு மண்டலம்தான். எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள், இந்த மோசடிகளின் நதி மூலம், ரிஷி மூலம் எல்லாம் என்ன என விவரித்தால்,  இப்படியெல்லாமா ஏமாந்தார்கள்? என்ற அதிர்ச்சி மேலோங்கும்.

ஆனால், அதே நேரத்தில் அடுத்த மோசடி சத்தமில்லாமல் துவங்கியிருக்கும். முந்தைய மோசடிக்கு அதிர்ச்சி தெரிவித்தவர், இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவராக இருப்பார். அப்படி விதவிதமாய் நடந்த மோசடிகளைதான் நாம் இந்தத் தொடரில் பார்க்க இருக்கிறோம்...
மோசடிகளின் துவக்கம் மண்ணுளிப் பாம்பு!
கொங்கு மண்டலத்தில் மோசடிகளின் துவக்கம் என்றால் அது மண்ணுளிப் பாம்புகள்தான். மண்ணுளிப் பாம்பு என்றால்கூட ஊரில் பலருக்கு தெரியாது. இரு தலை மணியன் என்றால்தான் பலருக்கு தெரியும். மண்புழு வகையைச் சேர்ந்த இந்த மண்ணுளிப் பாம்பை 2000-க்கு முன் யாரும் சீண்டியதுகூட இல்லை. 2000-க்குப் பின்னர் இதற்கு ஏற்பட்ட கிராக்கி எக்கச்சக்கம். ஒவ்வொரு பாம்பும் 50 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதெல்லாம் நடந்தது. ஒருவரை ஏமாற்றி பல லட்ச ரூபாய்க்கு விற்றதுதான் கொங்கு மோசடியின் துவக்கம்.


அதெப்படி யாரும் சீண்டாத மண்ணுளியை 50 லட்ச ரூபாய்க்கு ஏமாற்றி விற்க முடியும் என்கிறீர்களா? அதுதான் இதில் உள்ள ட்ரிக். இந்தப் பாம்பு அதற்கு நல்லது என்றும், இதற்கு நல்லது என்றும், இத்தனை லட்சத்துக்கு மண்ணுளிப் பாம்பை வாங்க ஆட்கள் தயாராக உள்ளார்கள் என்றும் ஊர் முழுவதும் முதலில் தகவல்கள் பரப்பப்பட்டன. 3 கிலோவுக்கு மேல் எடை இருந்தால் ஓரிரு லட்சம், அதுவே 5 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட மண்ணுளி என்றால் அதற்கு பல லட்சம் கிடைக்கும் என பரப்பப்பட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவியது. வேலையே செய்யாமல் பணக்காரராகி விட வேண்டும் என இருந்தவர்கள், பணக்காரராக இதுதான் வாய்ப்பு என மண்ணுளியைத் தேடி பயணம் போனார்கள். இன்னும் சிலர் வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு மண்ணுளிப் பாம்பைத் தேடத்துவங்கினர். அப்படி வந்ததுதான் மண்ணுளிக்கு வந்த கிராக்கி. இந்த கிராக்கிதான் அதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத, பாம்பாக கூட மதிக்கப்படாத மண்ணுளி பல லட்சத்துக்கு விலை போகும் என நம்புவதற்கு காரணமாய் இருந்தது.
மண்ணுளி வாஸ்து பாம்பாம்!
சும்மா கிராக்கி உருவாக்கினா மட்டும் போதுமா? இத்தனை விலை கொடுத்து மண்ணுளிப் பாம்பை ஏன் வாங்கணும்? அதற்கும் விதவிதமாய் காரணங்கள் சொல்லப்பட்டது. அப்படி மண்ணுளிப் பாம்புக்கான டிமாண்டை ஏற்ற முதலில் சொல்லப்பட்ட காரணம்... அது வாஸ்துவுக்கு சிறந்தது என்பதுதான். 'இந்தப் பாம்பை வீட்டில் வளர்த்தால் வாஸ்து சாஸ்திரப்படி ராசி. இந்த பாம்பு இருக்கும் வீடுகளில் லட்சுமி குடியிருப்பாள்' எனச் சொல்லப்பட்டது. 'பொள்ளாச்சி பக்கத்துல விவசாயம் எல்லாம் ஒடிஞ்சு போய் இருந்தானே சுப்பிரமணி. இப்ப எப்படி நிலம், பங்களானு வாங்கி கோடீஸ்வரனா இருக்கான் தெரியுமா? காரணம் இந்த மண்ணுளிதான். வீட்டுல வாங்கி வளர்த்துட்டு வந்தான். ஆறே மாசத்துல பெரிய பணக்காரன் ஆயிட்டான்ல' இப்படி சில கதைகள் சொல்லப்படும். ஆம்... அந்தப் பாம்பால்தான் நான் கோடீஸ்வரன் ஆனேன் எனச் சொல்லவும் சிலர் இருப்பார்கள். இப்படி மெல்ல மெல்ல நம்பவைத்து முதலில் ஓரிரு லட்சங்களுக்கு விலை போனது.

பாம்பில் இருந்து வயாக்ரா?
இதில் கிடைத்த லாபம் குறைவு என்பதாலோ என்னவோ, அடுத்த காரணத்தைத் தேடினர் மோசடியாளர்கள். அதுதான் ஆண்மை பெருக்குவதற்கான மருந்து இதில் உள்ளது என்பது. வயாக்ரா போன்ற மாத்திரைகள் அறிமுகமான காலத்தில் அதுபோன்ற மாத்திரைகள் இந்தப் பாம்பின் மூலம்தான் தயாரிக்கப்பட்டு வந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தப் பாம்புக்கான தேவை வெளிநாடுகளில் மிக அதிகம் இருக்கிறது. இந்தப் பாம்பை சில லட்சங்கள் கொடுத்து வாங்கினால் கோடியில் விற்கலாம் என ஆசை வார்த்தை கூறப்பட்டது. வெளிநாடுகளில் இதன் தேவை இருப்பதை போன்று சூழலை இவர்களே உருவாக்கி, அதை நம்ப வைப்பார்கள். 'போன மாசம் தர்மபுரியில 4 கிலோ பாம்பு கிடைச்சது. அதை 10 லட்சத்துக்கு ஒருத்தர் வாங்கினார். ரெண்டு நாளுக்கு முன்னாடி இந்தப் பாம்பை செக் பண்ணி பாத்துட்டு ஒரு கோடிக்கு வாங்கிட்டாங்க. இந்த பாம்பு 5 கிலோ இருக்கு. விலை 15 லட்சம்தான். ஒரு மாசம் வீட்டுல வெச்சு பாத்துகிட்டீங்கனா எப்படியும் ஒன்றரை கோடிக்கு விலைக்குப் போகும். அதுக்கு நான் கியாரண்டி. ஆனா, எடை குறையாமா பாத்துக்கோங்க" என்பார்கள். நான் பாம்பை வாங்கிக்கறேன்னு சில போன் அடுத்தடுத்து வரும். இதெல்லாம் புரோக்கர்களால் உருவாக்கப்படும்.

எய்ட்ஸ்க்கு இதுதான் மருந்தாம்!
இதுவும் கொஞ்சம் ஓய்ந்த பின்னர், மண்ணுளிப் பாம்புக்கான டிமாண்டை உருவாக்க அடுத்து சொல்லப்பட்ட காரணம்... இந்தப் பாம்பில் இருந்து எடுக்கப்படும் மருந்துதான் எய்ட்ஸ் மற்றும் கேன்சருக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இதனால், மண்ணுளிப் பாம்பின் விலை தாறுமாறாக நிர்ணயிக்கப்பட்டது. 
"எய்ட்ஸ் நோய், கேன்சர் நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை அணுக்களோட செயல்பாடு ரொம்ப குறைஞ்சுடும். இதனால் சீக்கிரம் சாக வாய்ப்பிருக்கு. இந்த மண்ணுளிப் பாம்புல வெள்ளை அணுக்கள் நிறைய இருக்கு. 5 கிலோ எடைக்கு மேல இருக்குற பாம்புகள்லதான் இந்த வெள்ளை அணுக்கள் அதிகம் இருக்கும். இதனாலதான் இந்தப் பாம்புக்கு ஏக கிராக்கி. 

கோடிக்கணக்குல விலை கொடுத்து வாங்க ஆள் ரெடியா இருக்கு. குறைஞ்ச விலையில உங்களுக்கு கிடைச்சிருக்கு. வாங்கி கை மாத்தி விட்டா 10 மடங்கு லாபம் கிடைக்கும். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க" என ஆசையைத் தூண்டி விட்டு இந்த பிசினஸ் நடக்கிறது.
யாரை ஏமாற்றுவார்கள்?
இதற்கான ஆளை தேர்வு செய்வதுதான் மிகப்பெரிய வேலை. ஒரு ஊரில் யார் உழைக்காமல் கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள்தான் இவர்கள் டார்கெட். அவர்களிடம் ஓரளவு பணம் இருக்க வேண்டும், புத்திசாலித்தனமாக யோசிக்கக் கூடாது. எளிதில் ஆசை காட்டி கவர்ந்திழுத்திருக்கக் கூடியவராக இருக்க வேண்டும். இப்படி ஒருவரைத் தேர்வு செய்துவிட்டால், அவரைச் சுற்றி மண்ணுளி பாம்புக்கு ஏக கிராக்கி உள்ளதை போன்று காட்சிகள் உருவாக்கப்படும். அவரிடமோ, அவர் அருகில் இருக்கும்போதோ 'மண்ணுளிப் பாம்பு கிடைச்சா பல லட்சத்துக்கு விலை போகுதாம். பக்கத்து ஊர்ல கூட நடராஜ் இப்படிதான் பல லட்சம் சம்பாதிச்சு புது வீடு வாங்கிட்டான்' எனச் சிலர் திரும்பத் திரும்ப பேசுவார்கள். அதன் பின்னர், 'மண்ணுளிப் பாம்பு ஒண்ணு இருக்கு. ஒரு மாசம் வெச்சு கை மாத்தி விட்டா பல லட்சம் கிடைக்கும். யாராவது ஆள் இருக்காங்களா?'னு அவர்கிட்டயே கேப்பாங்க. அப்புறம் என்ன..? அவரிடம் சில லட்சங்களுக்கு மண்ணுளி விற்கப்படும். ஆனால், பின்னாளில் பாம்பின் எடை குறைந்துவிட்டது எனச் சொல்லியோ வேறு காரணங்களைச் சொல்லியோ அவர் ஏமாற்றப்படுவார்.
இந்த மோசடியில் மூன்று தரப்பினர் சிக்கலுக்கு உள்ளாகின்றனர். லாபம் அடைவது புரோக்கர் மட்டும்தான். அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண மக்கள். மண்ணுளிப் பாம்பு கிடைத்தால் பல லட்சம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட தகவலை நம்பி, வேலை வெட்டியை விட்டு மண்ணுளிப் பாம்பைத் தேடி சுற்றித்திரியும் மக்கள். காடுகளில் தேடி கஷ்டப்பட்டு மண்ணுளிப் பாம்பைப் பிடித்தவர்கள் சிலர், வனத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு. அப்படியே பாம்பு பிடித்து வந்தாலும் 'இது 3 கிலோவுக்கும் குறைவா இருக்கு. எதுக்கும் அதை கொஞ்ச நாள் வெச்சு வளர்த்துட்டு வா. 4 கிலோ ஆனா கூட வித்துடலாம்' எனச் சொல்லி அவர்களை ஏமாற்றினர். இவர்கள் பணத்தை இழக்காவிட்டாலும் பாம்பைத் தேடியும், பாம்பைப் பற்றி பேசியுமே இவர்களின் காலம் கழிந்துவிடும்.
இரண்டாவதாக பாதிக்கப்பட்டவர்கள், சிறிய முதலீடைக் கொண்டு பெரிய லாபம் அடைந்துவிடலாம் என எண்ணிய நடுத்தர வர்த்தகத்தினர். சிறிய கடைகளை நடத்தி, சிறு விவசாயிகளாக இருந்து மண்ணுளிப் பாம்பைக் கைமாற்றினால் பல லட்சம் கிடைக்கும் என எண்ணி ஓரிரு லட்சங்கள் கொடுத்து வாங்கியவர்கள். 'அட பாம்பு வெயிட் குறைஞ்சிடுச்சு. நல்ல நேந்திரம் பழமா வாங்கி போடுங்க. போட்டுட்டு அங்க நிக்காதீங்க. நீங்க பார்த்தா பாம்பு பழத்தை சாப்பிடாது' என ஏகப்பட்ட விதிமுறைகளைச் சொல்லி, மாதக்கணக்கில் பாம்புக்குப் பழம் வாங்கிப் போட்டு, தான் சாப்பிட மறந்துபோன இவர்கள், நாம் ஏமாற்றப்பட்டதை யாரிடமும் சொல்ல முடியாமல், அந்தப் பாம்பை என்ன செய்வது எனத் தெரியாமல், யாருக்கும் தெரியாமல் அதை வெளியே வீசிச் சென்ற பரிதாபமும் உண்டு.
மூன்றாவதுதான் செல்வந்தர்கள். 'இந்தப் பாம்பு இருக்கும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும். உங்களுக்குச் சாதகமான சூழல் உருவாகும்' எனச் சொல்லியதில் வந்து விழுந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர்களும் கொங்கு மண்டல மோசடியில் சிக்கியது இப்படித்தான். இது ஆண்மைக்கு நல்லது, கேன்சருக்கு மருந்து போன்றவற்றை சொல்லியும் செல்வந்தர்கள் ஏமாற்றப்பட்டனர். எய்ட்ஸ், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள், உயிர் மேல் உள்ள பயத்தில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல், அதுவரை அருவெருப்புடன் நாம் ஒதுக்கித் தள்ளிய இருதலை மணியன் எனும் மண்ணுளிப் பாம்பை ஆசையாய் வாங்கிச் சென்று வளர்த்தனர்.
இதெல்லாம் உண்மையா?
மண்ணுளிப் பாம்பை மையப்படுத்திய இந்த தகவல்கள் எந்தளவுக்கு உண்மை?

மருத்துவர்கள் உள்ளிட்ட சில நிபுணர்களிடம் பேசினோம். அவர்களின் பதில்... அனைத்துமே பொய் என்பதுதான். "மண்ணுளிப் பாம்பு, மண்புழு குடும்பத்தைச் சேர்ந்தது. அது மண்ணில் இருப்பது, மண் வளத்தை பாதுகாக்கும். அதை வாஸ்து பாம்பு எனச் சொல்லி வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது நல்லதல்ல. அதனால் எந்தப் பலனும் நிச்சயம் கிடைக்காது.
இரண்டாவது இது ஆண்மைக்கான மருந்தெல்லாம் கிடையாது. ஏற்கெனவே கடல் ஆமைகளில் ஒரு வகை ஆமையை விரும்பி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று ஒரு வதந்தி பரவியது. அப்போது கடல் ஆமைகளுக்கு பெரிய டிமாண்ட் ஏற்பட்டது. அதில் உண்மை ஏதும் இல்லை. அது போன்றதுதான் இதுவும். மண்ணுளிப் பாம்பில் இருந்து மருந்து எதுவும் எடுத்ததாக தகவல் இல்லை.  அதேபோல் எய்ட்ஸ் மற்றும் கேன்சருக்கு இதுவரை உரிய மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. அதற்கான ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


மண்ணுளி பாம்பில் இருந்து வெள்ளை அணுக்கள் எடுக்கப்பட்டு எய்ட்ஸ், கேன்சர் தாக்கியவர்களுக்கு செலுத்தப்படுவதாக கூறுப்படுவது முற்றிலும் பொய். மக்களை ஏமாற்றிட, மண்ணுளி பாம்பு அணுக்கள் மூலம் இந்த நோய்களை குணப்படுத்திடலாம் என வதந்தியைப் பரப்புகிறார்கள்" எனச் சொன்னார்கள்.
ஆனால் இன்றும் தொடர்ந்து வருகிறது இந்த மண்ணுளிப் பாம்பு மோசடி. இப்போதும் மண்ணுளிப் பாம்பைத் தேடித்திரிபவர்கள் இருக்கிறார்கள். நட்சத்திர ஹோட்டல்களில் மண்ணுளிப் பாம்பை வைத்து பேரம் நடக்கிறது. புதிய புதிய ஆட்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
2000-ம் ஆண்டின் துவக்கத்தில் மண்ணுளிப் பாம்பை வாங்கி கைமாற்றிவிட நினைத்து ஏமாந்தவர்களில் ஒருவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன். பாம்பின் எடை குறைந்ததால் லட்சாதிபதி ஆகும் வாய்ப்பை இழந்துவிட்டதாக இன்றும் நம்புபவர். 'நமக்கு மண்ணுளி பாம்பு ராசியில்லை' என இதில் இருந்து ஒதுங்கியவர், ஆபத்தில் இருந்து தப்பி ஆற்றில் விழுந்த கதையாக இன்னொரு பிரச்னையில் சிக்கிக்கொண்டார். 

அது... நாகமாணிக்கக் கல் மோசடி. "யாரையுமே கடிக்காத ராஜ நாகத்தோட விஷம் கெட்டிப்பட்டு இறுகிடும். அது ஒரு மாணிக்கமா மாறும். அதுதான் நாகமாணிக்கம். அமாவாசை இரவுல அந்த ராஜநாகம் மாணிக்கத்தைத் துப்பி அந்த வெளிச்சத்துல ஆடும். அந்தப் பாம்புக்குத் தெரியாம மாட்டுச் சாணியால மூடி நாகமாணிக்கத்தை எடுத்து வந்தா லட்சக்கணக்குல கிடைக்கும்" என யாரோ சொன்னதை நம்பி, நாகமாணிக்கக் கல்லைத் தேடி அலைந்தார்.
அதென்ன நாகமாணிக்கக் கல் மோசடி என்கிறீர்களா? அதை அடுத்த மாதம்  விரிவா பார்க்கலாம்...

No comments:

Post a Comment