சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jul 2015

நியூட்ரினோ: அப்துல் கலாமுக்கு எதிராக சீறும் 'தண்ணீர்'!

நியூட்ரினோ ஓர் பேராயுதம்’ என்ற பெயரில் நியூட்ரினோவுக்கு ஆதரவாக ஆங்கில, தமிழ் தினசரிகளில் பக்கம் பக்கமாக கட்டுரைகளை எழுதித் தள்ளுகிறார் இந்தியாவின் அணு விஞ்ஞானி- அப்துல் கலாம்.

இந்நிலையில், "நியூட்ரினோவால் நன்மையா... தீமையா என முடிவெடுக்க முடியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் மத்திய அரசு, அப்துல் கலாம் கையில் வலையைக் கொடுத்து அனுப்பி இருக்கிறது" என அதிரடி கிளப்புகிறார்கள் தண்ணீர் இயக்கத்தினர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தண்ணீர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சேவிரா என்ற வினோத்ராஜ் சேஷன், ‘‘நியூட்ரினோவால் மனித குலத்துக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கப் போகின்றன என சொல்லும் யாராலும், எந்தத் தீமையும் நேராது என்பதற்கான உத்தரவாதத்தை இதுவரை தரமுடியவில்லை. இந்நிலையில், இந்தியாவின் அறிவுச் சின்னமாக கற்பிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மூலமாக, தனது திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைகிறதோ என்ற அச்சம் எழுகிறது. ஏற்கெனவே, ‘காட்டாமணக்கு சாகுபடி செய்து, உயிரி எரிபொருள் தயாரிக்கலாம். இதன் மூலம் இந்தியா வல்லரசாகும்’ என அதிகாரிகள் போட்ட கூச்சலை, ஆய்வு செய்யாமல், ‘ஆமாம் சாமி’ போட்டவர்தான் அப்துல் கலாம்.

அணுவிஞ்ஞானி அப்துல் கலாமே சொல்லிவிட்டார், காட்டாமணக்கு சாகுபடிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என நினைத்து, வயலில் இருந்த பயிரைக்கூட வெட்டி எறிந்துவிட்டு, காட்டாமணக்கு சாகுபடி செய்த விவசாயிகளின் நிலை என்னவானது என்பதை நாடே அறியும். இப்போது, அந்தக் காட்டாமணக்கு பற்றி வேளாண் பல்கலைக்கழகம்கூட வாய் திறப்பதில்லை.

அதைப் போலவே, நியூட்ரினோ விஷயத்திலும் இவர் சொல்வதற்கு எதிர்மாறாக நடந்தால், யார் பொறுப்பேற்பது? கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு தினசரியில் 'நியூட்ரினோ ஒரு பேராயுதம்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறார் அப்துல் கலாம். அதில், "தற்போது பல நாடுகளில் அணு ஆயுதம் இருப்பதால், அதை கட்டுப்படுத்த ஓர் ஆயுதம் தேவை. அதுதான் ‘நியூட்ரினோ’. சூரியனில் இருந்து அணு பிணைவின் மூலம் வெளிவரும் நியூட்ரினோ கதிர், பூமியின் ஒருமுனையில் புகுந்து பூமியின் மறுமுனையில் சென்றுவிடும். நியூட்ரினோ கதிரை எந்த பொருட்களாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஓர் இடத்தில இருந்துகொண்டே இந்த நியூட்ரினோ கதிரால், பூமியில் உள்ள அணு குண்டுகளின் அணு கதிரியக்க தன்மையை செயலிழக்கச் செய்யமுடியும். மேலும், பூமியில் உள்ள பெட்ரோலியம் போன்ற கனிம வளங்களையும் நியூட்ரினோ மூலம் கண்டறிய முடியும்" என எழுதி இருக்கிறார்.

நியூட்ரினோ மக்களை கொல்லும் பேராயுதம்!

இவர் கூற்றுப்படியே வைத்துக்கொண்டால், இதன் மூலம் நியூட்ரினோ அல்லாத நாடுகளின் மீது அதிகார போர் தொடுக்கும் அபாயமும் உள்ளது தெளிவாகிறது. உதாரணமாக, நம் நாடுகளில் உள்ள இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கண்டறிந்து, அதை சுரண்டுவதற்காக வனங்களையும், விவசாய நிலங்களையும் சூறையாடும் நிலை உருவாகலாம். அதுமட்டுமல்ல, நியூட்ரினோவால் வெகு தொலைவில் இருக்கும் அணு ஆயுதத்தையே செயலிழக்க செய்யமுடியுமென்றால், எலக்ட்ரானிக் பொருட்களான கணினிகளையும், அலைபேசிகளையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, ஒவ்வொரு நாட்டின் ரகசியங்களையும் திருடவோ, அதை செயலிழக்கவோ செய்யவும் முடியும்தானே?
அதைவிட மோசமானது, அணுகுண்டில் உள்ள அணு கதிரியக்கத்தை நியூட்ரினோவால் செயலிழக்க செய்யமுடியுமென்றால், பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்தும், பல லட்சம் மக்களின் உயிர்களை அடகு வைத்து உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்பட உள்ளதுமான அணுமின் நிலையங்களில் உள்ள அணு கதிரியக்கத்தைச் செயலிழக்க செய்யமுடியாதா?

அணு பிளவின் அடிப்படையிலேயே அணுகுண்டும், அணு உலையும் செயல்படுகிறது. அப்படியென்றால் அணுகுண்டுவின் அணுகதிரியக்கத்தை செயலிழக்க செய்யமுடியுமென்றால், நிச்சயமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலையின் அணுகதிரியக்கத்தையும் செயலிழக்க செய்யமுடியும்தானே? இப்படி செய்தால் நிச்சயமாக மின்சார உற்பத்தி பாதிக்கப்படுமே.

தமிழ்நாட்டில் தினமும் 3 மணிநேரம் மின்சாரம் தடைசெய்யப்பட்டபோது எத்தனை பாதிப்பு ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் நியூட்ரினோ கதிரால் அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டால் நாடே இருளில் மூழ்கும் நிலை உருவாகும். அதுமட்டுமல்ல விவசாயம் முதல் பெரிய தொழில்நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டு பெரிய அளவில் வேலையிழப்பு ஏற்படும். இதனால் உள்நாட்டின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சீர்குலைந்துவிடும்.

மேலும், எந்த பொருட்களாலும் தடுத்துநிறுத்த முடியாத நியூட்ரினோ கதிரால், அணு உலையையும் துளைத்துகொண்டுபோக முடியும். அப்படி நிகழ்ந்தால் அணு உலையின் பாதுகாப்பும் கேள்விக்குறிதான். இதன்மூலம் நம்முடைய பல்லாயிரம் கோடி ரூபாய் வரிப்பணம் வீணடிக்கப்படாதா? பல லட்சம் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இருக்கிறதா?
மேலும், பூமியில் உள்ள பெட்ரோலியம் போன்ற கனிம வளங்களை நியூட்ரினோ கதிரால் கண்டுபிடிக்க முடியுமென்றால், ஒரே இடத்தில் இருந்துகொண்டே பூமிக்கு அடியில் உள்ள அத்தனை வளங்களையும் கண்டுபிடிக்கமுடியும். அப்படி கண்டுபிடித்தால் எண்ணற்ற வளங்கள் உள்ள தமிழ்நாட்டை சூறையாடிவிடுவார்கள்.

மீத்தேன்- டெல்டா, நிலக்கரி- நெய்வேலி, சுண்ணாம்பு- அரியலூர், கிரானைட்- மதுரை, தாது மணல்- தூத்துக்குடி, எரி எண்ணெய்- ராமநாதபுரம், இரும்பு தாது- சேலம், திருவண்ணாமலை என இதுபோன்ற இயற்கை வளங்களை சுரண்ட முதலில் அவர்கள் கால் பதிக்கும் இடம் நாட்டின் முதுகெலும்பான விவசாய பூமியில்தான். அப்படி ஒருநிலை வந்தால், சோற்றுக்கு நாம் கையேந்த வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயுவும், நிலக்கரியும் இருப்பது தெரிந்ததால்தான், 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுமோ என்கிற அச்சத்தில் வாழ்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பதாக சமூகவலைதளங்களில் பதிவிடும் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், நியூட்ரினோ நோக்குகூடம் வேண்டுமென பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுவது ஏன்? மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பதாக சொல்கிறீர்கள். அதேவேளையில் கனிம வளங்களை கண்டறிய நியூட்ரினோ தேவை என்கிறீர்கள். எது உங்களின் தெளிவான நிலைப்பாடு? ஏன் இந்த இரட்டை வேடம்?

கடைசியாக ஒரு கேள்வி, நியூட்ரினோ திட்டத்துக்கு துளியும் தொடர்பில்லாத அப்துல் கலாம், ஏன் பக்கம் பக்கமாக கட்டுரை எழுத வேண்டும். பெப்சி, கோக் போன்ற அமெரிக்க நச்சு குளிர்பானங்களை, உள்நாட்டு பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வதுபோல், இவருக்கு மக்களிடம் உள்ள நற்பெயரை வைத்து 'நியூட்ரினோ' விளம்பரம் செய்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. சமூகத்தை சீர்குலைக்கும் மதுவை, அதை விற்பனை செய்யும் அரசை எதிர்த்து வாய் திறக்காத கலாம், குழந்தைகளிடம், பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை குடிக்காதீர்கள் என அறிவுறுத்தத் தவறியவர், நியூட்ரினோவில் அக்கறை காட்டுவது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
76 வயதிலும் சுயநலமின்றி மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்த கடைசி மூச்சுவரை களத்தில் நின்று உயிர்விட்ட 'நம்மாழ்வாரின்' பொதுநலம் எங்கே? இத்தனை வயதிலும் அரசாங்கத்திடம் நல்ல பெயர் வாங்குவதற்காக பேசிக்கொண்டிருக்கும் இவர் எங்கே? இவர் சமாதானம் பேசும் வெள்ளை புறா அல்ல. அரசின் கொள்கைகளை பரப்பும் தூதுப் புறா’’ என்று சாடிய வினோத் ராஜ்,

‘‘அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளுக்கு ஒரு வேண்டுகோள். எந்த ஒரு திட்டம் தொடங்கும் போதும் நன்மையை பற்றி மட்டும் யோசிக்க வேண்டாம். அதில் உள்ள தீமைகளை பற்றியும் யோசித்தால் நாடு நலம் பெறும். இப்படித்தான் பசுமைப் புரட்சி என்று சொல்லி ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தலையில் கட்டினார் வேளாண் விஞ்ஞானி என்று கொண்டாடப்படும் எம்.எஸ். சுவாமிநாதன். இப்போது என்னவாயிற்று? இந்தியா முழுக்கவே பசுமை வறட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது. இதோ அண்டை மாநிலமான கேரளா, 'தமிழக காய்கறிகளில் பூச்சிக்கொல்லி விஷம் இருப்பதால், அதை கேரளா கொண்டுவர தடை செய்வோம்' என்று மிரட்டுகிறது.

அய்யா... விஞ்ஞானிகளே, உங்களின் அறிவியல் பசிக்கு, அப்பாவி மக்களை தீனியாக்காதீர்கள். அணுமின் நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், இன்றுவரை அதிலிருந்து வெளிவரும் அணுக்கழிவை முறையாக அழிக்க ஒரு தொழில்நுட்பமும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு முன்னுரிமை கொடுக்காமல், மேலும் மேலும் பிரச்னையை வளர்ப்பதற்கான ஆராய்ச்சி வேண்டாமே’’ என்று கெஞ்சும் குரலில் சொன்னார்.



No comments:

Post a Comment