சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Feb 2015

கூண்டோடு காலியாகிறது திருச்சி தே.மு.தி.க. !

திருச்சி மாநகரத்தில் தேமுதிகவினரை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பங்குபோட்டுக் கொண்டு அக்கட்சியின் கூடாரத்தை கூண்டோடு காலி செய்துள்ளனர்.

ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, விஜயகாந்த் இதோ வருகிறார்... அதோ வருகிறார் என்றார்கள். ஆனால் விஜயகாந்த் வரவில்லை. அடுத்து அவரது மனைவி பிரேமலதா வருவதாகவும்,  பிஜேபி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அடிக்கடி பேட்டி கொடுத்தார்கள் பிஜேபி தலைவர்கள். அவரும் வரவில்லை.
 

ஆனால், ஶ்ரீரங்கம் தொகுதிக்குள் வலம் அந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தர்ராஜன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பிசாரத்திற்கு ஊர் ஊராக சென்று  விஜயகாந்தின் ஆசிபெற்ற உங்கள் வீட்டு பிள்ளை ஶ்ரீரங்கத்தில் போட்டியிடுகின்றார் என மைக் செட் கட்டி அலப்பறை செய்தார்கள். ஆனால் கடைசி வரைக்கும் தே.மு.தி.க கட்சித்தலைவர் விஜயகாந்த் வாயே திறக்கவில்லை. இன்றுவரை கூட்டணியில் இருக்கிறார்களா இல்லையா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில்தான் திருச்சி தே.மு.தி.க.வினர் ஒட்டுமொத்தமாக  கூடாரத்தை காலிசெய்து, " விஜயகாந்த், தொண்டர்களின் மனநிலையை புரிந்துகொள்ளவில்லை. எங்கள் சொத்துக்களை விற்றுக்கூட கட்சிக்காக செலவு செய்துள்ளோம். ஆனால் விஜயகாந்த், அவரது உறவுக்காரரை மாநகர் மாவட்ட செயலாளராக்கி அவரை கோடீஸ்வராக்கிவிட்டார். அவரது உறவுக்காரர்களை முன்னிலைப்படுத்த எங்களை பலிகடா ஆக்கிவிட்டார். எங்களுக்கான பிரச்னைகளை விஜயகாந்திடம் சொல்ல முடியவில்லை" என குற்றம்சாட்டியதோடு, கடந்த 4ஆம் தேதி மாலை ஶ்ரீரங்கத்தில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தியானேஷ்வரனின் மகனுமான செந்தூரேஸ்வரன், திருச்சி மேயர் வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் சித்ரா ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகரத்திலுள்ள  60க்கும் மேற்பட்ட தே.மு.தி.க பொறுப்பாளர்கள் தே.மு.தி.க.விலிருந்து விலகி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர், பூனாட்சி ஆகியோர் தலைமையில்  அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
 
 
இது இப்படியிருக்க அடுத்த நாள் வழக்கறிஞர் சித்ரா தலைமையில் மீண்டும் 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க.விற்கு தாவினார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நேருவும் தங்கள் பங்குக்காக தே.மு.தி.க.வினரை கடந்த 7ஆம் தேதி தி.மு.க.வில் சேர்த்தார். இப்படி அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பங்குபோட்டுக் கொண்டு தே.மு.தி.க. கூடாரத்தை காலி செய்தாலும், தே.மு.தி.க தலைமை அமைதியாகவே இருந்தது.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி விஜயகாந்த் அல்லது  அவரது மனைவியாவது பிரசாரத்திற்கு வருவார்கள், திருச்சியில் கேப்டன் கட்சி உள்ள நிலையை உணர்வார்கள் என நினைத்திருந்த மிச்சமுள்ள தே.மு.தி.க.வினருக்கு மனக்குமுறலே மிச்சம். அவங்க யாரும் வரவில்லை. ஆனால், 'கேப்டனின் ஓட்டு நம்ம பாக்கெட்ல உள்ள ஓட்டு!' என பி.ஜே.பி.யினர்  உலா வருகின்றார்கள்.
ஆனால் இன்னமும் விஜயகாந்த் ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா?  என எதிர்பார்த்து காத்துள்ளார்கள் அவரது உண்மை விசுவாசிகள்.

கடந்த 2006ல் ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க. 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 10 ஆயிரம் வாக்குகளும்,  2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி  கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட  ஏ.எம்.ஜி. விஜயகுமார் 16 ஆயிரம் வாக்குகளும் பெற்றார். கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் ஸ்ரீரங்கம் தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடவில்லை. ஆனால் இந்த முறையும் போட்டியிடவில்லை. குறைந்தபட்சம் 15 ஆயிரம் ஓட்டுகள் நம்மிடம் உள்ளது.
இந்த பிஜேபிகாரர்கள் கேப்டனை கலந்தாலோசிக்காமல் வேட்பாளரை அறிவித்துவிட்டு இப்போது ஓட்டுபோடுங்க. விஜயகாந்த் எங்களை ஆதரிக்கிறார்னு தங்களுக்கு தாங்களே சொல்லிக்கொள்கிறார்களே தவிர, எங்க கேப்டன் வாய்திறந்து ஒரு வார்த்தை சொன்னாரா. அவரின் மவுனத்தால் பல இழப்புகளை  திருச்சி தேமுதிக சந்தித்து வருகிறது. அதன் விளைவுதான் திருச்சி மாநகரில் இருந்த தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு முகாம் மாறினார்கள் என புலம்பினார்கள்.

அவர் வருவாரா? என காத்திருந்த தேமுதிக தொண்டர்கள், அவர் வாய்ஸ் கொடுப்பாரா மாட்டாரா என செய்வதறியாமல் நிற்கிறார்கள். இந்நிலையில் ஶ்ரீரங்கம் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. ஒருவேளை வாக்குப்பதிவு முடிஞ்ச பிறகு நம்ம கேப்டன், 'பிஜேபி வேட்பாளர் சுப்பிரமணியத்திற்கு ஆதரவு!' ன்னு அறிவிப்பாங்களோன்னு கேள்வி எழுப்புகிறார்கள் திருச்சி தேமுதிககாரர்கள்.

தே.மு.தி.க.வின் ஓட்டு யாருக்கு போகும் என்பதுதான்  ஶ்ரீரங்கத்தின் டாப் டிஸ்கசன்.



No comments:

Post a Comment