''என்னது 'காதலர் தினம்’ ஸ்பெஷல் பேட்டியா? வருஷத்துல ஒருநாள் மட்டும் காதலைக் கொண்டாடினா போதுமா? எனக்குப் பத்தாதே'' அழகாகச் சிரிக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஆக்ஷன் படங்களிலும் கௌதம் காட்டும் காதல் அத்தியாயங்கள்... லவ் கிளாசிக்ஸ். பல வருடங்களுக்குப் பிறகு அஜித்தையும் காதல் ஃபீலுடன் காட்டியிருக்கும் மனிதரிடம், அவருடைய பெர்சனல் காதல்கள் குறித்துக் கேட்டால், பிடிகொடுக்கவே இல்லை. ஆனால், இறுதி வெற்றி... காதலுக்கே!
''அஜித் சார் பண்ணதுல 'கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரைத் திரும்ப அப்படி ஒரு படத்துல நடிக்கவைக்கணும்னு தோணிட்டே இருந்துச்சு. ஆனா, இவ்வளவு வளர்ச்சிக்கு அப்புறம் அவரை மென்மையாக் காட்டுறது பெரிய ரிஸ்க். 'அப்படி எதுவும் நினைக்க வேண்டாம். நீங்க நினைக்கிறதை நாம பண்ணுவோம்’னு அஜித் சார் கொடுத்த தைரியம்தான், 'என்னை அறிந்தால்’!
'காக்க காக்க’, 'வாரணம் ஆயிரம்’, 'விண்ணைத் தாண்டி வருவாயா’... இந்தப் படங்களில் ஹீரோ, ஹீரோயின் பேசுற பல வசனங்கள் நான் என் லைஃப்ல பார்த்த விஷயங்கள்தான். அதுல என் மனைவி ப்ரீத்தி பேசினது, அப்பா, அம்மாவைக் காதலித்த விஷயங்கள்னு எல்லாமே என்னைப் பாதித்த விஷயங்கள். என் உறவினர்கள் படம் பார்க்கிறப்ப, 'என்னது... இதெல்லாம் நம்ம வீட்ல பேசினதாச்சே. அதை அதே ஸ்டைல்ல பயன்படுத்தியிருக்கானே’னு சொல்வாங்க. 'வி.டி.வி’ படத்தில் 'ஓமணப்பெண்ணே’ பாட்டு சிச்சுவேஷன், என் லைஃப்ல நடந்த விஷயம்தான். 'பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ் கூபேக்குள்ள சரத், ஆண்ட்ரியா, 'உன் சிரிப்பினில்...’ பாட்டு... அது என் வாழ்க்கையில் அப்படியே நடந்தது. கல்யாணத்துக்கு அப்புறம் இதுக்காக மெனக்கெட்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் கூபே புக் பண்ணினேன். அதெல்லாம் படத்துல பார்க்கும்போது, 'ஐயோ... கௌதம் முன்னாடி எதுவும் பேச வேணாம். அது படத்துல வந்துடும்’னு சொல்லிட்டே இருப்பாங்க.''
''உங்க காதல் கதையை ஆரம்பத்துல இருந்து சொல்லுங்களேன்...''
''சொல்லிடலாம். ஆனா, வொஃய்ப் படம் மட்டும் கேட்டுராதீங்க. பத்திரிகைகள்ல படங்கள் வர்றதை அவங்க விரும்ப மாட்டாங்க. ஸ்கூல்ல ஆரம்பிச்சு காலேஜ் வரை அஞ்சு வருஷம் ஒரு பொண்ணைக் காதலிச்சுட்டு இருந்தேன். அப்ப ப்ரீத்தி எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பெஸ்ட் ஃப்ரெண்ட். பக்கத்துப் பக்கத்து வீடு. என் காதலில் திடீர்னு ஒரு பிரேக். அவங்க 'போஸ்ட் கிராஜுவேஷன் படிக்க வெளியூர் போறேன்’னு சொன்னாங்க. நான் அப்போதான் காலேஜ் முடிச்சுட்டு, சென்னை வந்திருந்தேன். கையில பத்து பைசா கிடையாது. வேலை தேடிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை. உதவி இயக்குநரா சேர்ந்தா, சம்பளம் கிடைக்காது. 'நீ போகாதம்மா... நாம இங்கேயே ஒண்ணா இருக்கலாம்’னு சொல்றேன். ஆனா, என் பேச்சைக் கேட்கலை. சண்டை. போய்ட்டாங்க. அதுதான் 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்துல ஒரு போர்ஷன். போன இடத்துல அவங்களுக்கு ஒரு கஷ்டம். அப்ப உதவிக்கு வந்த நண்பர்களில் ஒருவரின் அரவணைப்பு அவங்களுக்குக் கிடைச்சிருக்கு. அவரைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டாங்க. விஷயம் எனக்குத் தெரிஞ்சதும் நொந்துட்டேன். அப்ப ப்ரீத்திதான், 'வருத்தப்படாத கௌதம்... நான் உனக்காக அவகிட்ட பேசிட்டு இருக்கேன்’னு சொன்னாங்க. ஒரு வருஷத்துக்கும் மேல நடந்தது அந்தச் சமாதானப் படலம். ஆனா, ஒரு கட்டத்துல அந்தக் காதல் திரும்ப ஒட்டவே ஒட்டாதுனு தெரிஞ்சது. நான் அவங்களைக் குறைசொல்ல மாட்டேன். அவங்க சூழ்நிலை அப்படி.
அவங்களைக் கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு இருந்தேன். அதுக்கு ப்ரீத்திதான் எனக்கு சப்போர்ட். ரெண்டு குடும்பங்களுக்குள்ளும் நல்ல பழக்கம். அதனால, ப்ரீத்தி எப்பவும் ஒரு நல்ல ஃப்ரெண்டா என்கூடவே இருப்பாங்க. அப்ப எனக்கு எந்த வேலையும் கிடையாது. அவங்க ஒரு பிரபல மருத்துவமனையில பிசியோதெரப்பிஸ்ட். அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டுப் போறது, வீட்டுல டிராப் பண்றது, சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதுனு நல்ல நட்பு இருந்தது. எனக்கான செலவையும் அவங்கதான் பண்ணுவாங்க. 'குணா’, 'தளபதி’ படங்களுக்கு 'மன்னன்’ ரஜினி - கவுண்டமணி மாதிரி அடிச்சுப் பிடிச்சு டிக்கெட் வாங்கிட்டு அவங்களைக் கூட்டிட்டுப் போயிருக்கேன். ஒரு தடவை என்.சி.சி ஹேர்கட்ல போய், 'ஆர்மியில் இருக்கேன். திஸ் இஸ் மை வொய்ஃப்’னு தியேட்டர்ல பொய் சொல்லி 'தேவர் மகன்’ டிக்கெட் வாங்கிப் படம் பார்த்திருக்கோம்.
அப்படி இருந்தப்ப திடீர்னு ஒருநாள், 'நான் ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லியே ஆகணும். அந்தப் பொண்ணு உன் லைஃப்ல இல்லைனு உறுதியாகி, ரெண்டு வருஷம் ஆச்சு. அதான் இதைச் சொல்றேன். இல்லைனா, நான் சொல்லியிருக்கவே மாட்டேன். எப்போ உன்னை முதல்முறையா பார்த்தேனோ, அப்பவே 'நீதான் எனக்கு’னு தெரிஞ்சிருச்சு கௌதம். எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஆனா, எப்படிச் சொல்றதுனு தெரியாமலே இருந்தேன். இப்பத்தான் தைரியம் வந்துச்சு’னு ப்ரீத்தி என்னிடம் சொன்னாங்க. எனக்குப் பயங்கர ஷாக். யோசனையாவே இருந்தது. ஃப்ரெண்ட்ஷிப், ஒருதலைக் காதல்னு ஏதேதோ காம்பினேஷன்ல பழகிட்டு இருந்தேன். அப்போதான் நான் ராஜீவ் மேனன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்றேன். அந்த ஸ்டேஜ்ல நான் சாய்ஞ்சுக்க ஒரு தோளா எனக்கு ப்ரீத்தி இருந்தாங்க. அப்படி இப்படினு, 'எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு’னு சொல்ல, இன்னொரு ரெண்டு வருஷம் ஆச்சு. அதுவும் எப்படித் தெரியுமா? ஒரு இந்திப் படம் பார்த்துட்டு இருந்தோம். படம் அவங்களுக்குப் பிடிக்கலை. 'படம் ரொம்ப போர்ல. என்ன பண்ணலாம்?’னு அவங்க கேட்டப்ப, 'கல்யாணம் பண்ணிக்கலாமா?’னு டக்குனு கேட்டுட்டேன்.
மூணு மாசப் போராட்டத்துக்குப் பிறகுதான் ரெண்டு பேர் வீட்லயும் சம்மதம் சொன்னாங்க. அச்சச்சோ... நான் பாட்டுக்கு இதையெல்லாம் சொல்லிட்டேன். கண்டிப்பா, வீட்ல பரேடுதான். சரி, வழக்கம்போல சமாளிச்சுக்கலாம்!
இப்போ, சினிமாவுல எவ்வளவோ பிரஷர். அதையெல்லாம் சமாளிக்க வீட்ல உள்ளவங்களும் என் பார்ட்னர்ஸும் என்கூட வேலை செய்றவங்களும்தான் எனக்கான ஆதரவு. 'துருவ நட்சத்திரம்’ படம் ட்ராப் ஆனதுல இருந்து ரெண்டு வருஷம் பயங்கர ப்ரஷர். ஆனாலும் அது எதுவுமே தெரியாத மாதிரி அவங்க என்னை பார்த்துக்கிட்டாங்க. 15 வருஷக் குடும்ப வாழ்க்கையில், 'ஏன் என்கூட இருக்க மாட்டேங்கிற? அது எனக்குப் பிடிக்கலை’னு ப்ரீத்தி பேசி நான் கேட்டதே இல்லை. 'பட் யூ ஹேவ் டு கீப் த ரொமான்ஸ் அலைவ்’னு எனக்குத் தோணிட்டே இருக்கும். அதனால சினிமா பார்ட்டிகளுக்குக்கூட நான் போறதே இல்லை. அந்த நேரத்தைக் குடும்பத்தோட செலவழிக்கலாமே... அதான்.''
'' 'வேட்டையாடு விளையாடு’ ஜோதிகா, 'என்னை அறிந்தால்’ த்ரிஷானு உங்க படங்கள்ல 'சிங்கிள் மதர்’ கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீங்களே... அதுக்கு என்ன காரணம்?''
''அதுவும் என்னை நேரிடையாப் பாதிச்ச விஷயம்தான். என் நெருங்கிய உறவுப் பெண். அவருக்கும் கணவருக்குமான புரிதலில் பிரச்னை. கர்ப்பமாகி குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே புருஷனைவிட்டுப் பிரிஞ்சு 'சிங்கிள் மதர்’ ஆகிட்டாங்க. அப்போ அவங்க எதிர்கொண்ட கஷ்டங்களைப் பார்த்து நான் மனசு அளவுல பாதிக்கப்பட்டேன். அப்பா இல்லாத தனிமையை அந்தக் குழந்தை எப்படிச் சமாளிக்கும்னு பயந்தேன். ஆனா, அந்தப் பெண் ரொம்பத் தைரியமா சமாளிச்சாங்க. அப்புறம் அவங்க வாழ்க்கையில் இன்னொருத்தர் வந்தார். அந்தக் குழந்தையை தன் குழந்தை மாதிரியே ஏத்துக்கிட்டார். அந்த தம்பதி மேல எனக்கு அவ்வளவு மரியாதை. அது 'வேட்டையாடு விளையாடு’ சமயம் நடந்த விஷயம். அதையே படத்தில் சேர்த்தேன். அந்தப் பாதிப்பின் தொடர்ச்சிதான் 'என்னை அறிந்தால்’ த்ரிஷா கேரக்டர். 'ஒருத்தன் இருந்தான். இவ பொறக்குற வரைக்கும்கூட அவன் காத்திருக்கலை. நீ என்னடான்னா அவளோட இருபது வருஷம் பிளான் பண்றியே?’னு த்ரிஷா கேப்பாங்க. 'அதுக்காகத்தான் உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றேன்’ம்பார் அஜித் சார். அந்தப் பாதிப்பு வாழ்க்கை முழுக்க எனக்குப் போகாது.''
''இந்த ரெண்டே காதல்கள்தானா கௌதம் வாழ்க்கையில்?''
'' 'ஷாஜஹான்’னு ஒரு படத்துல விஜய் சார் எல்லார் காதலுக்கும் உதவுவாரே... அதுதான் காலேஜ்ல என் ரோல். 'மச்சான் அந்தப் பொண்ணு உன்னைப் பார்த்துட்டே இருக்கா. லவ் பண்றானு நினைக்கிறேன். புரப்போஸ் பண்ணு’னு ஐடியா கொடுக்கிறதுல இருந்து லெட்டர் எழுதிக் கொடுக்கிற வரை நிறைய டிப்ஸ் கொடுப்பேன். ஆனா, நான் ஏற்கெனவே காதல்ல இருந்தேன். நான் காதலிக்கிற பொண்ணு சென்னையில இருக்கானு காலேஜுக்கே தெரியும். அதனால எனக்கு கல்லூரி காலங்களில் புரப்போஸல் வந்தது இல்லை. தினமும் காலையில உக்காந்து அந்தப் பொண்ணுக்கு லெட்டர் எழுதிட்டு இருப்பேன். இந்த லெட்டர் அங்கே போனதும் பதில் லெட்டர் வரும். இப்படி ஆயிரத்துக்கும் மேல லெட்டர்ஸ் வெச்சிருந்தேன். ஒருநாள் நடு வீட்டில் ஒரு பேக் கிடந்துச்சு. 'என்னது?’னு ப்ரீத்திகிட்ட கேட்டேன். 'எல்லாம் உன் லவ் லெட்டர்ஸ்தான்’னு சொன்னாங்க. உண்மையைச் சொல்லணும்னா, என் பட காதல் வசனங்களுக்கு அந்தக் கடிதம் எழுதுன பயிற்சிதான் காரணம். 'உன்னைப் பார்த்ததுமே நெஞசுக்குள்ள 'காட்ஃபாதர்’ நாவல்ல குறிப்பிட்டிருக்குற தண்டர்போல்டு மாதிரி விஷயம் நடந்துச்சு’னு எழுதியிருப்பேன். அதுதான் 'வாரணம் ஆயிரம்’ல சமீராவைப் பார்த்ததும் சூர்யா சொல்ற டயலாக்.
அப்ப நான் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டிருந்தேன். என் வகுப்புல பொண்ணுங்களே கிடையாது. என் பேஜ்மேட்ல வேற வகுப்பு பொண்ணுங்களோடும் சீனியர் பொண்ணுங்களோடும்தான் பேசிட்டிருப்பேன். அப்ப என் கிளாஸ் ஃப்ரெண்ட்ஸ் 'மச்சான்... பொண்ணுங்க வந்ததும் எங்களைக் கட் பண்ணிட்டுப் போறீயேடா’னு கிண்டல் பண்ணுவாங்க. 'டேய்... இது ப்ளட்டானிக் ரிலேசன்ஷிப் மச்சான்... அதைத் தாண்டி வேறு ஒண்ணும் இல்ல’னு சொல்வேன். காலேஜ் வாழ்க்கையைவிட்டு வெளியில் வந்து இருபது வருஷத்துக்கும் மேல ஆச்சு. ஆனாலும் அன்றைய நண்பர்கள் எல்லாரோடும் இப்பவும் நல்ல நட்புல இருக்கேன். இப்போ ஓய்வுநேரங்கள்ல யோசிக்கும்போது 'நமக்கும் அந்தப் பொண்ணுங்களுக்கும் இடையில் இருந்தது நட்பையும் தாண்டி அழகான தூய்மையான காதலோ?’னு தோணும். அந்த முதிர்ச்சியான அன்பும் பிரியமும்தான் என் படத்தின் காதல் காட்சிகளில் பிரதிபலிக்குதுனு நினைக்கிறேன்.''
''உங்களைப் பத்தி வர்ற கிசுகிசுகளுக்கு வீட்ல என்ன ரியாக்ஷன்?''
''கண்டுக்கவே மாட்டாங்க. சிரிப்பாங்க. என் பட ஹீரோயின்ஸ் எல்லாருமே என் வீட்டுக்கு வந்து பழகியிருக்காங்க... சாப்பிட்டிருக்காங்க. லைஃப்ல எல்லாத்துக்குமே ஒரு மெல்லிசான லைன் இருக்கும். நான் எப்பவும் அந்தக் கோட்டைத் தாண்ட மாட்டேன்.''
''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிச்ச காதல் ஜோடி யார்?''
''கமல்-ஸ்ரீதேவி. எனக்கு ரொமான்டிக் ஃபிலிம்னா 'வறுமையின் நிறம் சிவப்பு’தான். ப்ரீத்திக்கும் அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும். அந்தப் படம் டி.வி-யில எப்ப ப்ளே பண்ணாலும் முழுப் படத்தையும் பார்த்திடுவோம். அப்படி இருபது தடவைக்கும் மேல பார்த்திருக்கோம். ஃப்ரெண்ட்ஷிப், லவ், பிரதாப் போத்தன் வர்றப்ப உள்ள பொசசிவ்னு பிரமாதமான படம். எனக்கு என்னைக்கும் கமல்-ஸ்ரீதேவிதான் எவர்க்ரீன் ஜோடி. என் பட ஜோடிகளில் பிடிச்சது சிம்பு-த்ரிஷா.''
''அடுத்த படத்தோட காதலில் என்ன ஸ்பெஷல்?''
''நேத்துதான் ப்ரீத்தி சொல்லிட்டு இருந்தாங்க, 'இந்த ஜெனரேஷன் காதல்ல நடக்கிற விஷயங்களை வெச்சு ஒரு படம் பண்ணு’னு. 'அது ரொம்பத் தப்பாப் போயிட்டு இருக்கு. டீன் ஏஜ் பொண்ணுங்க பேசுறது எல்லாம் ஷாக்கிங்கா இருக்கு. அவங்களுக்கு எதைப் பத்தியும் எந்தத் தயக்கமும் இருக்க மாட்டேங்குது. ரொம்பச் சின்ன வயசுக்குள்ளயே பப், பாப்னு சிக்கிக்கிறாங்க. ஏதோ ஒரு போதைக்கு அடிமையா இருக்காங்க. குடும்பத்தோட பாண்டிங் இல்லாத மாதிரியும் இருக்கு. அதையெல்லாம் வெச்சுக்கிட்டு நீ ஏன் ஒரு படம் பண்ணக் கூடாது?’னு கேட்டாங்க. 'மெசேஜ் சொல்ற மாதிரி பண்ண மாட்டேன். ஆனா, இதெல்லாம் ஒரு கதையில வர்ற மாதிரி பண்றேன்’னு சொல்லியிருக்கேன். நான் காதலைச் சொல்லவே நாலைஞ்சு வருஷம் தவிச்சிருக்கேன். ஆனா, இன்னைக்கு ஒரு சாட்ல தொடங்கிற காதல் ஒரே வாரத்துல பெட்ல முடிஞ்சிருது. காதலுக்கான தேடல், தீவிரம், ஏக்கம், நம்பிக்கை, ஆயுசுக்குமான ப்ரியம்... இதெல்லாம் மிஸ் ஆகுது. அது ரொம்பக் கவலையா இருக்கு. இன்னும் அன்பா, அழகா, அர்த்தமுள்ளதா... காதலிக்கக் கத்துக்குடுக்கணும்!''
No comments:
Post a Comment