'உடல் ஆரோக்கியத்துக்கு சரிவிகித உணவை, சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இரவு நேரம் கண் விழித்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்கள், வெப்பம் மிகுந்த இடத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று பலருக்கும் தங்களுக்கு ஏற்ற உணவு எது என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இவர்களுக்கான உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து, ஊட்டச் சத்து நிபுணர்களான தாரிணி கிருஷ்ணன் மற்றும் ஷைனி சந்திரன் அளிக்கும் ஆலோசனைகள்.
இரவுநேரப் பணியில் ஈடுபடுபவர்கள்:
இவர்களுக்கு சோர்வு, தூக்கம் தொடர்பான பிரச்னைகள், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் இன்றி உடல் எடை அதிகரிப்புதான் இவர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை. இரவில் பணிபுரிவதால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க, இவர்கள் உணவில் அதிக அளவில் புரதச் சத்தைச் சேர்த்துக்கொண்டு, கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதச் சத்து, கவனம் மற்றும் விழிப்புத் தன்மையை (அலர்ட்) அளிக்கிறது. இதேபோல், இனிப்புமிக்க பானங்களைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரைச் சத்துள்ள உணவுப்பொருள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. இருப்பினும், நம் உடலின் சர்க்கரையைக் கையாளும் திறன் இரவு நேரத்தில் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில், அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது உடலைப் பாதிக்கும். இரவு பணியில் உள்ளவர்கள், நொறுக்குத் தீனிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வர். இது தேவையற்ற கலோரிகளைச் சேர்த்து, கொழுப்பாக மாற்றிவிடும். இதைத் தவிர்க்க வேண்டும்.
இரவு நேரத்தில் சப்பாத்தி, இட்லி, பொங்கல் போன்ற ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவது நல்லது. இரவு ஒரு மணிக்கு 'ஃப்ரூட் சாலட்’ அல்லது ஏதாவது ஒரு 'ஃப்ரெஷ் ஜூஸ்’ குடிக்கலாம். பேரிக்காய், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், மாதுளம்பழம் போன்ற பழங்களையும் சாப்பிடலாம். அதிகாலை மூன்று மணிக்கு நல்ல குளிர்ச்சியான பானங்கள் குடிக்கலாம். பணியின் இடையே பசித்தாலும் முளைகட்டிய பயறு வகைகளை, சாலட் செய்து சாப்பிடுவது நல்லது.
அதிகம் உஷ்ணமான இடங்களில் வேலை செய்பவர்கள்:
இவர்களுக்கு நீரிழப்புதான் மிக முக்கியமான பிரச்னை. நம்முடைய உடலில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, குளிர்விப்பதற்காக அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. இதனால் உடலில் உள்ள நீரும், தாது உப்புக்களும் வெளியேறுகின்றன. வெப்பமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கு, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீர் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம். இதைத் தவிர்க்க 15 முதல் 20 நிமிடங்களுக்கு, ஒரு முறை ஒரு டம்ளர் நீர் அருந்த வேண்டும். வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்க, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தினசரி உணவில் இளநீர், மோர் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். ஃப்ரிஜ்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் அருந்துவதைத் தவிர்த்து, மண் பானைத் தண்ணீர் அருந்தினால் மிகவும் நல்லது.
நீண்ட நேரம் நடந்து/நின்றுகொண்டு வேலை செய்பவர்கள்:
இவர்கள், குறைந்த கலோரி, புரதம் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,800 கலோரி உணவு தேவை. வேலை நிமித்தம் பல்வேறு இடங்களுக்கு அலைந்துகொண்டே இருப்பதால், பஜ்ஜி, போண்டா என்று ஆங்காங்கே கிடைக்கும் பொரித்த உணவைச் சாப்பிடுவதையும் இவர்களால் தவிர்க்க முடியாது. இதனால், கலோரியின் அளவும் 2,200-க்கு மேல் அதிகரித்துவிடும். நொறுக்குத் தீனியைத் தவிர்த்து, வேகவைத்த கடலை, பழங்கள் சாப்பிடலாம். காலையில் மிதமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மதிய வேளையில் ஒன்று முதல் ஒன்றரை கப் அளவு சாதம், அதற்குச் சரிசமமாக காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். மூன்று மணியளவில் தேநீர் அருந்தலாம். மாலை வேளையில் முளைகட்டிய பயறு வகைகளை வேகவைத்துச் சாப்பிடலாம்.
அமர்ந்தே வேலை செய்யும் அலுவலகப் பணியாளர்கள்:
அதிகம் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்து, எனர்ஜி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், ஜூஸ் தவிர்த்து பழங்கள் சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான சாதத்துடன், அதிகம் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். அலுவலகத்தில் ஒரே இடத்தில் உட்காராமல் ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒருமுறை, சிறிது தூரம் நடந்து போய்விட்டு வரலாம். இரவு உணவை எட்டு மணிக்கு முன்னால் முடித்துக்கொள்வது மிகவும் நல்லது.
No comments:
Post a Comment