சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Feb 2015

இவர்களின் கதறலுக்கு உங்க கட்சி பதில் சொல்லுமா?

ஶ்ரீரங்கம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை ஆன்மீக நகரமான ஶ்ரீரங்கம் திணறிப்போனது.
 
திரும்பு திசையெங்கும் காவிகளுக்கு பதில் கரைவேட்டிகளாகவே காட்சியளித்தன.   தெருமுனைகளில் ஏதாவது ஒரு தேர்தல் அலுவலகம், அதில் முகம் தெரியாத கட்சிக்காரர்கள் கும்பல் கும்பலாக  உட்கார்ந்து கட்சி ஜெயிக்க என்னவெல்லாம் செய்யணும் என பேசியதோடு செயலில் இறங்கியும்  காட்டினர். ராத்திரியோடு ராத்திரியாக பணப்பட்டுவாடா முடித்தனர்.

இப்படி தேர்தல் பணி முடிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து திருச்சி ஶ்ரீரங்கம் நோக்கி அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களை வரவழைத்து கூட்டம் காண்பித்தார்கள்.  ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல் திருவிழா இன்றோடு முடிகிறது. கடந்த 11ஆம் தேதி பிரசாரத்திற்கு வந்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு கிளம்பினார்கள். ஆனால்  இருவர் பிணமாக சென்றதுதான் பரிதாபம்.

சென்னை அம்பத்தூர், மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற இராசேந்திரன். 45 வயதான இவர் சென்னை மாநகராட்சியின் 82வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்தவர். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, திருச்சியை அடுத்துள்ள  பெருகமணியில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டார் ரவி.

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி பிரசாரத்தில் கலந்து கொண்ட ரவிக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  அவர் வரும் வழியிலேயே மாரடைப்பால் இறந்துவிட்டதாக ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். கவுன்சிலர் ரவியின் உடல் திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
 
மேலும், ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது நடந்த சாலை விபத்தில் அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இறந்த அ.தி.மு.க. தொண்டருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். தினம்தினம் அறிக்கை விடும் தி.மு.க தலைவர் கருணாநிதியோ, அல்லது அக்கட்சியின் பொருளாளர்  ஸ்டாலினோ  இதற்காக இரங்கல் கடிதம் கூட வெளியிடவில்லை. ஶ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தால் முக்கிய தலைவர்கள் இருந்ததால் இவரின் மறைவில் கவனம் செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது.  திமுக தரப்பு இப்படியிருக்க அதிமுக தரப்பிலும் ஒரு விபத்து இரண்டு குடும்பங்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

அறிக்கையோடு முடித்துக்கொண்ட அதிமுக தலைமை, திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில், திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி ஒன்றியம், கொரசின்னம்பட்டி கிளைக் கழக செயலாளர் ஏ.வெள்ளைச்சாமி, கம்பிளியம்பட்டி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.சிவசங்கரன் ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக திருச்சியில் முகாமிட்டிருந்தார்கள்.

இவர்கள் கடந்த 10ஆம் தேதி எதிர்பாராத விதமா பூலாங்குளத்துபட்டியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இவர்கள் பயணித்த  பைக் மீது கார் மோதியதில் வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  உடன் வந்த சிவசங்கரன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள். அவர் தேர்தல் பொறுப்பேற்றுக்கொண்ட பகுதியில் பிரசாரத்துக்காக திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு வந்தவர்கள்  குடும்பத்தை நிற்கதியாக நிற்க வைத்துவிட்டதுதான் கொடுமை.

இவர்களுக்காக அதிமுக பொது செயலாளர்  ஜெயலலிதா, இரங்கல் கடிதம் வெளியிட்டார்.  அதில் தொண்டர்கள் இனி வரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். வெள்ளைச்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவசங்கரன் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் அறிவித்தார். ஆனால் ஶ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த விபத்தில் சிக்கி தவிக்கும் அதிமுக குடும்பங்களுக்கு இதுவரை எந்த உதவியையும் அறிவிக்கவில்லை. காயம்பட்ட சிவசங்கரன்  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த தொண்டர்கள் வீட்டில் இருந்தபோது இறந்திருந்தால்கூட பரவாயில்லை. கட்சிப்பணிக்காக கொண்ட கொள்கைக்காக ஏற்ற தலைமைக்காக உழைக்க வந்த இடத்தில் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் குடும்பத்தாரின் கண்ணீருக்கும் கதறலுக்கும் பதில் சொல்லப்போவது யார்?No comments:

Post a Comment