சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Feb 2015

நம்பிக்கை நாயகன்! கெஜ்ரிவாலின் இன்னொரு பக்கம்

ந்தியாவின் அசைக்க முடியாத சக்தி நாங்கள்தான் என்று மார்தட்டிக்​கொண்டிருந்த பி.ஜே.பி தலைமை, இன்று டெல்லி தேர்தல் முடிவுகளால் அதிர்ந்துபோய் நிற்கிறது. காரணம், அரவிந்த் கெஜ்ரிவால். இந்தியாவில் கட்சி தொடங்குவது என்பது ஒன்றும் கடினமானதல்ல. ஆனால், ஆரம்பித்து சில மாதங்களிலேயே ஆட்சியில் அமர்வது அவ்வளவு எளிதானதா என்ன?


ஒரு மிடில் கிளாஸ் முகம்... அரசாங்க க்ளார் உடுப்பு... பேச்சில் மட்டும் தெளிவு... விமர்சனங்களை தீர்க்கமாக வைத்த புத்திக்கூர்மை... இவற்றை வைத்தே இந்தியா​வின் தலைமையிடமான டெல்லியைக் கைப்பற்றிவிட்டார் அரவிந்த். அதற்கு அவரது 'மிஸ்டர் க்ளீன்’ இமேஜ் கை கொடுத்தது.
யார் இந்த சாமானியன்?
அரவிந்த் கெஜ்ரிவாலின் தந்தை கோவிந்த் ராம் கெஜ்ரிவால்  தாய் கீதா தேவி. இந்தத் தம்பதியினரின் மூத்த மகனாக  1968ம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின் கரக்பூர் ஐ.ஐ.டியில் மெக்கானிக்கல் இன்ஜினீ​யரிங்கைத் தேர்ந்தெடுத்தார். படிப்பை முடித்தவுடன் டாடா இரும்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஒருகட்டத்தில் அந்த வேலை, போர் அடித்துவிட தனது வாழ்க்கையின் முதல் ராஜினாமா கடிதத்தை எழுதினார் கெஜ்ரிவால். பின்பு, அன்னை தெரசாவின் ஆசிரமத்தில் பணிபுரிந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டார். 95-ம் ஆண்டு இந்திய அரசின் வருவாய்த் துறைக்குத் தேர்வாகி டெல்லியில் வருமானவரித் துறையில் பணியில் சேர்ந்தார்.
வருமானவரி அலுவலக  ஊழல் முறைகேடுகளால் வெறுப்படைந்த அவர், தற்காலிக ஓய்வுபெற்று 'பரிவர்த்தன்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன்மூலம் ரேஷன் கார்டு ஊழல், குடிநீர், மின்சாரம் போன்றவற்றுக்காகப் போராடினார். அதன்பின்னர், 2003-ம் ஆண்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார். ஊழல் எதிர்ப்பு காரியங்களைச் செய்தார். ஆனால், முடியவில்லை. 18 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் தனது  வருவாய்த் துறை இணை ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மிகத் தீவிரமாகப் போராடினார். அரசின் செயல்பாடுகளில் ஒளிவு மறைவின்மை இருக்க வேண்டும். சாமானிய மக்களுக்கும் அனைத்து விவரங்களும் தெரிய வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். இந்தியாவின் தகவல் பெறும் சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும், ஏழைகளும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசை பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப் பண்புக்காக 2006-ம் ஆண்டுக்கான 'ரமோன் மகசேசே விருது’ இவருக்குக் கொடுக்கப்பட்டது.
அண்ணா ஹஜாரே தொடங்கிய 'ஊழலுக்கு எதிரான இயக்கத்தில்’ சேர்ந்து, ஜன் லோக்பால் மசோதா கொண்டு வர, போராட்டம் நடத்தினார். அப்போதுதான் இவரைப் பற்றி பலருக்கும் தெரியவந்தது. ஒருகட்டத்தில் அந்த இயக்கத்தைத் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை வைக்க அதை ஹஜாரே மறுத்ததால், அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து 'ஆம் ஆத்மி’ என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது இவரை அனைவரும் காமெடியனாகத்தான் பார்த்தனர். அண்ணா ஹஜாரேகூட இந்த முடிவு ஒன்றுக்கும் ஆகாதது என்று பேட்டி கொடுத்தார். 2013ம் ஆண்டு டில்லி சட்டசபைக்குத் தேர்தல் வந்தது. அதில் காங்கிரஸ், பி.ஜே.பி என்று இரு பெரும் கட்சிகளை எதிர்த்துப் போட்டியிட்டார். தேர்தல் சின்னமாக 'துடைப்பம்’ கொடுக்கப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகளைப் போலன்றி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் சில யுக்திகளை ஆம் ஆத்மி கட்சி கையாண்டது. அதன்படி, தேர்தலில் போட்டியிட சமூக நலனில் அக்கறை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதில் தகுதி வாய்ந்தவர்கள் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அவர்களின் விவரம் ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதைப் பார்க்கும் பொதுமக்கள் வேட்பாளராக விண்ணப்பித்தவர்கள் குறித்து ஆட்சேபம் இருந்தால், அதை ஆம் ஆத்மி தலைமைக்கு மின்னஞ்சல், தொலைபேசி அல்லது நேரில் தெரிவிக்கலாம். அதைப் பரிசீலித்து சர்ச்சைகள், குற்றப் பின்னணி இல்லாத தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள். அதில் ஆட்டோ ஓட்டுநர், ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள், பத்திரிகையாளர், ராணுவ வீரர் என பலதரப்பட்ட சாதாரண மக்களைத்தான் முன்னிறுத்தினார்.
அந்தத் தேர்தலில் 28 இடங்களைப் பெற்று 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் அரவிந்த். அதில், பி.ஜே.பி 31 இடங்களைப் பெற்றது. அதன் பின்னர் தங்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க​மாட்டோம் என்று காங்கிரஸ் உறுதியளித்ததால், அவர்கள் ஆதரவுடன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தார். ஆனால், காங்கிரஸ் மறைமுகமாக அவருக்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது. அப்படியும் மின்சாரம், குடிநீர் பிரச்னைகளைச் சிறப்பாகக் கையாண்டார். டெல்லியில் உள்ள வீடுகளுக்கு மாதம் 700 லிட்டர் தண்ணீர் இலவசம், 400 யூனிட்களுக்கு குறைவாக மின்சாரம் உபயோகித்தவர்களுக்கு மின்கட்டணக் குறைப்பு, டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு 90 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒதுக்கியது போன்றவை மக்களிடையே அவருக்கு மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்தன. சட்டசபையில் ஜன் லோக்பால் மசோதாவைக் கொண்டுவர முயன்றபோது, அதற்குச் சரியான முறையில் உறுப்பினர்கள் ஆதரவளிக்காததால், 49 நாட்களில் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
இதனால் ஊடகங்கள் முன்னிலையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவரது இந்தச் செயல்கள் விமர்சனத்துக்குள்ளானது. சில இடங்களில் தாக்கப்பட்டார். கறுப்பு மையை வீசினார்கள். சமூக வலைதளங்கள், ஊடகங்கள் ஆகியவற்றால் காமெடியனாக சித்திரிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்துத் துணிச்சலாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இனி அவரது அரசியல் முடிந்தது என்றே கணிக்கப்பட்டது. அது உண்மைதான் என்பதைப்போல இவரும் அமைதியாகிவிட்டார். இரண்டாவது முறையாக டில்லியில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதுதான், ஆம் ஆத்மிக்கான ஆதரவு மறைமுகமாக புதைந்திருந்தது தெரிந்தது. இவருடன் சேர்ந்து ஊழலுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த கிரண் பேடியை பி.ஜே.பி வளைத்துக்கொண்டது. ஆனால், இதுவரை நடந்த தேர்தல்களில்
பி.ஜே.பி பயன்படுத்திய எந்த அஸ்திரமும் இதில் பயனளிக்கவில்லை. இந்த முறையும் எளிய மக்களையே வேட்பாளராக அறிவித்திருந்த ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ், பி.ஜே.பியின் ஸ்டார் வேட்பாளர்கள் ஆயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் தோற்றனர். இளைஞர்கள் பெருமளவில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளனர். இது எதிர்காலத் தலைமுறையினரின் எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவருடைய நம்பிக்கைக்கும் போராட்டத்துக்கும் கடைசி வரை தோள் கொடுத்தவர் அவரின் காதல் மனைவி சுனிதா. காங்கிரஸ்  பி.ஜே.பிக்கு மாற்று இல்லையா என்று நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில், இப்படி திடீரென புயலாக மாறி இருக்கிறது ஆம் ஆத்மி. எப்படியோ கடந்தத் தேர்தலில் காங்கிரஸை காலி செய்த ஆம் ஆத்மி, இந்த முறை பி.ஜே.பியை ஒட்டுமொத்தமாகப் பந்தாடிவிட்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் என்ன செய்யப் போகிறார் கெஜ்ரிவால்?



No comments:

Post a Comment