என்ன தான் ஆச்சு சிம்புவுக்கு என்னும் பாணியில் ‘வாலு’ ரிலீஸ் ஆகாமலேயே தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் ‘வாலு’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதையொட்டி பலரும் மீம்ஸ்கள், காமெடிகள் என இணையத்தில் வெளியிடத்துவங்கிவிட்டனர். எனினும் தடைகளை மீறி இந்த வாரம் வெள்ளியன்று ஜுலை 17ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்து அதற்கான டிரெய்லரும் கூட வெளியானது குறிப்பிடத்தக்கது.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாராகி வரும் வாலு படத்திற்கு அடுத்தடுத்து பல பிரச்னைகள் நீடித்தவண்ணம் இருந்தன. இறுதியில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியீட்டில் ஜூலை 17ல் உறுதியாக வெளிவரும் என்று அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து மேஜிக் ரேஸ் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
அதன்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் வெளியீட்டு உரிமையை 2013ல் மேஜிக் ரேஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். தற்பொழுது வேறு நபர் மூலம் இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எங்களைத் தவிர வேறு எந்த நிறுவனம் மூலமாகவும் வாலு படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று மேஜிக் ரேஸ் நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது. சிம்புவுக்கு இது சற்றே சிக்கலான தருணம் என்றே கூற வேண்டும். அந்த வகையில் பல நடிகர்களும் சிம்புவுக்கு தைரியம் சொல்லி இருக்கிறார்கள் போலும் . சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயம், ரவி, விஷ்ணு விஷால், விவேக், பாடகர் க்ரிஷ் மற்றும் தனுஷுக்கு தனது நன்றிகளை கூறியுள்ளார். மேலும் தனுஷின் ‘மாரி’ படத்திற்கு ஆல் த பெஸ்ட் கூறி ‘கலக்குங்க’ என ட்வீட் செய்துள்ளார் சிம்பு.
அதேபோல் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சிம்புவிடம் போனில் பேசினேன். அவர் ஒரு நல்ல ஆத்மா, எல்லா பிரச்னைகளையும் பாஸிட்டிவாக எடுத்துக் கொள்கிறார். எல்லாம் நன்மையாக அமைய வாழ்த்துகள், கடவுளின் ஆசீர்வாதம்’ எனக் கூறியுள்ளார் தனுஷ்.
சிம்பு அடுத்த ட்வீட்டில் நன்றிகளை சொல்லியதோடு, மேலும் இன்னொரு ட்வீட்டில் ”என்னவேண்டுமானாலும் நான் சொல்லி அது சரியாகவோ, அல்லது தவறாகவோ எடுத்துக்கொள்ளப்படலாம்,ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிகொள்ள விரும்புகிறேன். நான் மன்னித்துவிட்டேன்...ஆனால் மறக்க மாட்டேன்..கடவுள் ஆசீர்வாதம்” என கூறியுள்ளார் சிம்பு.
No comments:
Post a Comment