சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Jul 2015

“இது சூப்பர் கிட்ஸ் சினிமா !”

'''படத்தோட ஒன்லைன் என்ன?’னு கேட்பீங்க. நான் அதை ஹைக்கூ போலவே சொல்லிடுறேன்... 
'உலகிலேயே சிறந்த வகுப்பறை தாயின் கருவறை’!''
- 'ஹைக்கூ’ படத்தின் கதையை, கவிதையாகச் சொல்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். குழந்தைகள் சினிமா, சூர்யாவின் '2டி புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் முதல் படம் என்ற சிறப்புகளோடு சூர்யாவும் நடிக்கும் படம் என்ற 'பிசினஸ் ப்ளஸ்’ சேர்ந்திருக்கிறது 'ஹைக்கூ’ படத்துக்கு!
''ஊர்ப்பக்கம் அரசுப் பள்ளிகளில் படித்த நம் வாழ்க்கைதான் 'பசங்க’. சிட்டியில் நம்ம குழந்தைகளின் ஸ்கூல் கதைதான் 'ஹைக்கூ’. நானும் கேமராமேன் பாலசுப்ரமணியெமும் சேர்ந்தே இந்தப் படத்தைப் பண்ணிடலாம்னு ஆரம்பிச்சோம். அப்போ, 'நல்ல விஷயம் சொல்றோம். சூர்யா மாதிரி மரியாதைக்குரிய மனிதர்கள் தயாரிச்சா நல்லா இருக்குமே’னு தோணுச்சு. அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். கதை கேட்டார். 'நல்லா இருக்கு... நல்லா இல்லை’னு சொல்றதுக்கு முன்னாடி, 'இந்தக் கதையை எத்தனை வருஷமா பண்ணிட்டு இருக்கீங்க?’னு ஆச்சர்யமாக் கேட்டார். '2டி-யில படம் பண்ண இதுக்கு முன்னாடி 95 பேருக்கும் மேல கதை கேட்டேன். எதுவும் செட் ஆகலை. இது சரியான படமா இருக்கும்னு தோணுது. இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்’னு உடனே ஓ.கே சொன்னார்!''

''அப்புறம் எப்படி அவரை நடிக்க வெச்சீங்க?''
''ஜப்பான் பள்ளிகளில், 'உன்னால் முடியாது என்றால், ஜப்பானால் முடியாது. ஜப்பானால் முடியாது என்றால், உலகத்தால் முடியாது. உன்னை நம்பு’னு எழுதிவெச்சிருப்பாங்களாம். அப்படி ஒரு கேரக்டர் படத்துல இருக்கும். பேர் தமிழ்நாடன். சூர்யா பேனர்ல படம் பண்ணலாம்னு முடிவானதும், 'நீங்க விருப்பப்பட்டா, அந்தத் தமிழ்நாடன் கேரக்டர்ல நடிக்கலாம்’னு சொன்னேன். படத்துக்குள்ள அவர் நடிகரா வந்த பிறகு, படம் வேற லெவலுக்குப் போயிடுச்சு. பீச் மணல்ல படுத்துப் புரண்டு, குழந்தைகளோடு விளையாடிக்கிட்டே மணல் வீடு கட்டணும். அப்போ ஒரு குழந்தை முதுகுல ஏறும்; இன்னொண்ணு அடிக்கும்; கிள்ளும்னு ஜாலி கலாட்டாவா இருக்கும். இது எந்த கமர்ஷியல் ஹீரோவும் பண்ண தயங்கிற கேரக்டர். அதை அவர் பண்ணினது பெரிய விஷயம்!''
''அமலா பால், பிந்துமாதவினு எல்லா ரோல்களுக்கும் ஸ்டார்களையே பிடிச்சுட்டீங்களே?''
''இந்தப் படத்துல குழந்தைகள்தான் ஹீரோ. குழந்தைகளைத் தவிர மத்த எல்லாருமே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்தான். நான் இத்தனை நாள் இவ்வளவு குழந்தைகளை வெச்சு ஷூட்டிங் பண்ண அனுபவத்துல சொல்றேன். 40 குழந்தைகளை ஒரு வகுப்பறையில் வெச்சு சமாளிக்கிறது ரொம்பப் பெரிய விஷயம். சம்பளம், சலுகைகள் பார்க்காம தியாக மனப்பான்மையோடு இருக்கிறவங்களாலதான் நல்ல டீச்சரா இருக்க முடியும். அப்படி ஒரு டீச்சரா 'வெண்பா’ங்கிற கேரக்டர் அமலா பாலுக்கு. பரபரப்பா கமர்ஷியலா நடிச்சுட்டு இருக்கிற நடிகைகள், அம்மாவா நடிக்க யோசிப்பாங்க. ஆனா, பிந்துமாதவி நான் என்ன சொன்னாலும் கேட்கத் தயாரா இருந்தாங்க. அதேபோலத்தான் கார்த்திக். இவங்க எல்லாரும் எனக்காக இல்லை... இந்தக் கதைக்காக இதில் கமிட் ஆனவங்க!''
''படத்துல என்ன விஷயத்தை ஹைலைட் பண்ணியிருக்கீங்க?''
''நாம 15 வயசுல பண்ணதை இந்தத் தலைமுறை குழந்தைங்க அஞ்சு வயசுல பண்ணிடுறாங்க. அவங்க கண்கள் பரபரனு எதையோ தேடிட்டே இருக்கு. ஒரே நேரத்துல ரெண்டு, மூணு வேலை பார்க்கிறாங்க. ஸ்கூல்ல, 'உங்க பிள்ளை சேட்டை தாங்கலை’னு அடிக்கடி புகார் வரும். 'ஐயோ... நம்ம பிள்ளைகிட்ட எதுவும் கோளாறா?’னு சில பெற்றோர்கள் பயப்படுவாங்க. பதறிப்போய் டாக்டர்கிட்ட காட்டுவாங்க. அப்போ, 'உங்க குழந்தைக்கு ஏ.டி.ஹெச்.டி’னு சொல்வாங்க. அதாவது, 'அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைப்பர் ஆக்ட்டிவ் டிஸ்ஆர்டர்’. அதுதான் படத்தின் பேசுபொருள். உடனே ஏதோ ஒரு நோயைப் பத்திப் பேசி போரடிக்கப்போறாங்கனு நினைச்சுராதீங்க. இது சிறப்புக் குழந்தைகள் பற்றின படம் கிடையாது. 'சூப்பர் கிட்ஸ்’ பற்றின படம்.
படத்துல மூணு குழந்தைகள்தான் ஹீரோ. ஒரு குழந்தை ஏழரை மாசத்துல பிறந்துடும்; இன்னொரு குழந்தை நல்ல நேரம், ராசி, லக்னம் பார்த்து சிசேரியன் மூலமா பிறக்கவைக்கப்படும்; இன்னொண்ணு அபிமன்யூ மாதிரி அவங்க அம்மா வயித்துக்குள்ள இருக்கும்போதே நல்ல நல்ல கதைகள் கேட்டு இயல்பா, இயற்கையா ஆரோக்கியமான சூழல்ல பிறக்கும். அந்த மூணு குழந்தைகளின் வாழ்க்கைப் பயணம்தான் படம்!''

''பசங்களை படப்பிடிப்பில் சமாளிக்கிறது பெரிய வேலையா இருந்திருக்குமே?''
''என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் பாவம். படத்துல கிட்டத்தட்ட 50 குழந்தைகள் நடிச்சிருக்காங்க. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நினைப்புல இருக்கும். 'இன்னைக்கு என்ன புதுப் பிரச்னை வரப்போகுதோ?’னு எதிர்பார்த்துட்டேதான் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் போவோம். தூங்குற சீன் எடுக்கிறப்ப தூங்கவே தூங்காம ஆட்டம் போடுவாங்க. விளையாட வேண்டிய சமயம் அசந்து நல்லா தூங்கிட்டு இருப்பாங்க. சூர்யாவே, 'இவங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியலை. சீக்கிரம் ஷாட் ஓ.கே பண்ணி, என்னைக் காப்பாத்துங்க’னு சிரிப்பார்.
படத்துல 'நயனா’ங்கிற கேரக்டர்ல ஒரு பெண்குழந்தை நடிச்சாங்க. அவங்கதான் கிட்டத்தட்ட படத்தின் ஹீரோயின். கதைப்படி அந்தப் பொண்ணு செம சேட்டை பண்ணணும். ரெண்டு நாள் பொறுமையா இருந்துச்சு. மூணாவது நாள், 'நான் பேட் கேர்ளா அங்கிள்? ஏன் என்னை பேட் கேர்ள் மாதிரியே நடிக்கச் சொல்றீங்க. எனக்கு அழறதே பிடிக்காது. ஆனா, என்னை அடிக்கடி அழச் சொல்றீங்க. அது எவ்ளோ கெட்டப் பழக்கம் தெரியுமா? உங்களுக்கு அழற சீன் தவிர வேற சீன் எடுக்கவே தெரியாதா?’னு கேட்டுச்சு. என்ன சொல்றதுனு தெரியாம, 'இல்லடா செல்லம்... உன் கேரக்டர் மூலமா இப்படி எல்லாம் பண்றது தப்புனு மத்தவங்களுக்குச் சொல்றோம்’னு ஒருமாதிரி சமாளிச்சா, 'அதை ஏன் என்னை வெச்சு சொல்றீங்க. உண்மையிலயே யாராவது அழுற குழந்தைகளை வெச்சு சொல்லலாமே?’னு சொல்லிட்டு நிஜமாவே அழ ஆரம்பிச்சுட்டா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை வெச்சு 'ஹைக்கூ’ வரிசையில் இன்னும் நாலு சினிமா எடுக்கலாம்.''
''அந்த அனுபவத்துலயே சொல்லுங்க... இன்னைக்கு குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்னவா இருக்கு?''
''ஒவ்வொரு குழந்தைக்குள்ளயும் ரெண்டு உலகங்கள் இருக்கு. ஒண்ணு, நம்ம கண்ணு முன்னால அவங்க நடந்துக்கிற உலகம்; இரண்டாவது நாம இல்லாதபோது அவங்க நடந்துக்கிற உலகம். அந்த ரெண்டாவது உலகத்துக்குள்ள நாம நுழைஞ்சு, நல்லது கெட்டது சொல்லி அவங்களை வழிநடத்தினா, அவங்களுக்கும் நமக்குமான இடைவெளி குறையும். இதுக்கு வேற எந்த வழியும் கிடையாது. இதை நல்லா புரிஞ்சுக்கிட்டேன்!''



No comments:

Post a Comment