சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Feb 2015

இன்ஸ்டாகிராமில் யோகா கற்றுத்தரும் ஆஸ்திரேலிய மாணவி!


இன்ஸ்டாகிராமில் கலக்கி கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய மாணவி எலிசா லேண்ட்கிரனின் புகைப்படங்களை பார்க்கும் எவருக்கும், இந்த பெண் எப்படிதான் இப்படி உடலை வில்லாக வளைத்து போஸ் கொடுக்கிறாரோ என்ற வியப்பு ஏற்படும். அப்படியே நாமும் அவரைப்போலவே யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படும். 

இந்த வியப்பையும் ஆர்வத்தையும் மூலதனமாக கொண்டு மாணவி எலிசா இப்போது யோகோ குருவாக உருவாகி இருக்கிறார். சட்டக்கல்லூரி மாணவியான அவர் படிப்பை இன்னும் முடிக்காத நிலையில் யோகா கற்றுத்தருவதையே தொழிலாக மேற்கொண்டு வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் ஆகியிருக்கிறார்.



புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர ஒரு ரசிகர் படையே இருக்கிறது ( 1.26 லட்சம் பாலோயர்கள்). அதில் பலரும் அவரைப்போலவே யோகா கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டு அவரிடமே மாணவியாக சேரத்தயாராக இருக்கின்றனர். விளைவு  எல்லிஃபிட் ஆக்டிவ் இணையதளம் அமைத்து யோகா கற்பதற்கான மின்னூல் மற்றும் போஸ்டர்களை விற்பனை செய்து வருகிறார். உலகின் 90 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த யோகா ஆர்வலர்கள் அவரது யோகா வழிகாட்டி மின்னூலை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆக, 23 வயதிலேயே எலிசா வெற்றிகரமான தொழில்முனைவாராகி விட்டார். இன்ஸ்டாகிராம் நட்சத்திரமாகவும் ஜொலிக்கிறார். இரண்டுக்கும் காரணம் யோகா தான். ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் , எலிசா சுயமாக யோகா கற்றுக்கொண்டவர் என்பதுதான். அதுவும் தன்னை வாட்டிய ஒரு பிரச்னைக்கு தீர்வாகதான் யோகா கற்றுக்கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதியில் வசிக்கும் எலிசா இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடும் முதுகு வலியால அவதிப்பட்டிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு யோகா செய்யும் எண்ணம் வந்தது, வலிக்கு தீர்வாக யோகா கற்றுக்கொள்ள விரும்பினாலும் , யோகா வகுப்புகளுக்கான கட்டணம் அதிகமாக இருந்ததால், அவர் தானே இண்டெர்நெட்டில் யோகா பற்றிய விவரங்களை பார்த்து கற்றுக்கொள்ளத்துவங்கினார்..
ஒவ்வொரு போஸாக கற்றுக்கொண்டு பயிற்சி பெறத்துவங்கியதும் முதுகு வலியும் குட்பை சொன்னது. உடலும் சொன்னபடி கேட்கத்துவங்கியது.
இரண்டும் சேர்ந்து அவருக்கு விடுதலை உணர்வை தர, மிகுந்த உற்சாகத்துடன், தான் யோகா செய்வதை படம் பிடித்து இஸ்டாகிராம் புகைப்பட சேவையில் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார்.


அவர் கடற்கரை மணலில், தனது வீட்டில் உள்ள ஸ்டூடியோவில் ரப்பர் போல உடலை வளைத்து பலவித யோகா போஸ்களில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காட்சிகளை அழகாக படம் பிடித்து தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஒரு ஜிமினாஸ்டிக் வீராங்கனை போல உடலை இஷ்டம் போல வளைத்து அவர் போஸ் கொடுத்த காட்சி, பலரை கவர்ந்தது.படிப்படியாக அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் சேர்ந்தனர். நூறு,ஆயிரமாகி, ஆயிரம் பல்லாயிரமாகி விரைவிலேயே ஃபாலோயர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்தது.

எலிசாவின் போஸ்கள் அட்டகாசமாக இருந்ததோடு அதன் பின்னே இருந்த யோகா பற்றியும் அவர் புகைப்பட குறிப்பு மூலம் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொண்டார். இந்த படங்களை பார்த்து ரசித்த பலரும் அவரை இமெயிலில் தொடர்பு கொண்டு அவரது யோகா போஸ் பற்றி விளக்குமாறு கேட்டுக்கொண்டனர். எலிசா ஆர்வத்தோடு பதில் அளிக்க கோரிக்கைகள் மேலும் அதிகரித்தன. 

இந்த ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ளவும், ஆர்வம் உள்ளவர்களுக்கு வழிகாட்டவும் உடலை ஸ்டிரெச் செய்வதற்காக யோகாவை எப்படி பயன்படுத்துவது என தான் கற்றுக்கொண்டதை விளக்கி மின்னூலாக வெளியிட்டார். யோகா போஸ்டர்களையும் உருவாக்கினார். யோகாவில் ஆர்வம் கொண்டவர்கள் தன்னை தொடர்பு கொள்வதற்காக என்றே http://www.ellefitactive.com/ இணையதளத்தை அமைத்து அதன் மூலம் தனது மின்னூலை விற்பனை செய்து வருகிறார். இந்த இணையதளம் தான் ஒரு மினி வர்த்தக நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.


இப்போது அவர் இரட்டிப்பு உற்சாகத்துடன் யோகா செய்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதில் அந்த போஸ் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதோடு அப்படியே தனது யோகா வழிகாட்டி புத்தகத்தையும் வாங்கி கொள்ளலாம் என வெகு இயல்பாக விளம்பரமும் தேடிக்கொள்கிறார்.

இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கென ரசிகர்களை தேடிக்கொண்டு ஆர்வத்தையே வெற்றிகரமான தொழில்வாய்ப்பாக மாற்றிக்கொண்ட இணைய நட்சத்திரங்கள் பட்டியலில் எலிசாவும் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கிறார்.

எலிசா லேண்ட்கிரேனின் இன்ஸ்டாகிராம் பக்கம்; http://instagram.com/elle_fit/




No comments:

Post a Comment