சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Feb 2015

'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி!

'கத்தி' திரைப்பட பாணியில் களமிறங்கி போராடிவரும் திருச்சி சூரியூர் மக்களுக்கு முதல்கட்ட வெற்றி கிட்டியுள்ளது.

'
கத்தி' திரைப்படத்தில், எம்.என்.சி நிறுவனங்கள் குளிர்பான தயாரிப்பிற்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை எதிர்த்து, தன்னூத்து எனும் கிராம மக்கள் போராடுவதாக காட்டப்பட்டிருக்கும்.

அதேபோல். நிஜத்தில் திருச்சி அருகே சூரியூர் என்ற கிராம மக்கள், திருச்சி எல்.. பாட்டிலர்ஸ் எனும் பெப்சிக்கான தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக  பல வருடங்களாக போராடி வருகின்றனர்.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தின் பின்புறம், சூரியூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது எல்..பாட்டிலர்ஸ் எனும் பெப்சிக்கான நிறுவனம். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அடைக்கலராஜுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தை, தற்போது அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் மற்றும் அவரது சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

இந்த நிறுவனம் விவசாய நிலத்தில் ராட்சச போர் போட்டு தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துடன், இங்கு ஆரம்பித்தது. அப்போது மக்களிடம் கருத்துகேட்கும் கூட்டமோ, அறிவிப்போ எதுவும் நடத்தாமல் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த நிறுவனம் சூரியூர்  எல்லைக்குட்பட்ட கம்பெனி வளாகத்திற்குள் 6 போர்வெல்களையும், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் 5 போர்வெல்களையும் போட்டு ராட்சத போர்கள் மூலம் 24 மணி நேரமும் கணக்கில்லாமல் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கிட்டே இருப்பதாகவும், இதனால் அந்த பகுதி நிலத்தடி நீர் கிடைக்காமல் மக்கள் அவதிபடுவதாகவும், சூரியூர் மட்டுமல்லாமல் அந்த கிராமத்தை சுற்றியுள்ள சின்ன சூரியூர், கும்பகுடி, வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு காரணமான  கம்பெனியை மூடக்கோரி கடந்த  3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று எல்.. பாட்டிலர்ஸ் நிறுவனத்தை மூடமறுப்பதை கண்டித்து, அந்த கிராம பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளை திருப்பி ஒப்படைக்க வந்தபோது போராட்டக்காரர்கள், தண்ணீர் இயக்கத்தின் அமைப்பாளர் வினோத் சேஷன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து சூரியூரில் போராட்டங்கள், தொடர்ந்தது, இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்வழக்கறிஞர் பானுமதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப்படி அடுத்தடுத்து போராட்டங்கள் தொடரவே, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். 

பேச்சுவார்த்தையின்போது போராட்டக்காரர்கள், ''2000 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கு தேவையான கட்டட வரைபட அனுமதி மற்றும் கட்டடம் கட்ட அனுமதி நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) பெற வேண்டும். ஆனால் எல்.. பாட்டிலர்ஸ் நிறுவனம் சுமார் 1,00,000 சதுர அடி வரை தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஆனால், நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) இதுவரை எவ்வித அனுமதியும் பெறவில்லை. எல்.. பாட்டிலர்ஸ் நிறுவனம் முழுக்க சட்டவிரோதமாக செயல்படுகிறது.

மேலும், இந்நிறுவனம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 160ன்படி ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கோ, இயந்திரங்கள், தளவாடங்கள் நிறுவுவதற்கோ ஊராட்சி ஒன்றிய கவுன்சில் அனுமதி பெறப்படவில்லை. அதனை முன்னிட்டு திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மான எண். 194 நாள்: 06.05.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட நிறுவனத்தை தடை செய்ய சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் தமிழக அரசால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடமிருந்து பெப்சி (PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான எல்.. பாட்டிலர்ஸ் நிறுவனத்தின் உரிமம் புதுபிப்பதற்கான காலக்கெடு 31.03.2014 அன்றுடன் முடிந்துவிட்டது. இத்துறையிடமிருந்து இன்றுவரை உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

இப்பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழில். பெப்சி கம்பெனி வந்த பிறகு, சுற்றுவட்டாரத்துல் இருக்கிற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்குப் போய் விவசாயம் அழிந்தது வருகிறது. இந்த நிறுவனத்தால் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி ஏய்ப்பும், மக்களின் வாழ்வாதாரமான நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் அதனால் விவசாயம் அழிந்தும் வருகிறது.

இந்த நிறுவனத்தால் சூரியூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்ன சூரியூர், கும்பகுடி. வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட பல கிராமங்களும் பாதிக்கப்படைந்துள்ளன. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதிகளில், அதற்கு ஆதாரமாக விளங்கும் கிணற்று பாசனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது .

இப்படி எந்த அனுமதியும் பெறாத ஒரு நிறுவனம்  இயங்கிக் கொண்டு இருக்க, அதே நேரம் இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து வரும் விவசாயிகளும் பொது மக்களும், தண்ணீருக்காக தவிக்கிறோம்'' என்றார்கள்.

மேலும், ''கடந்த சில மாதங்களுக்கு முன் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுப் பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர், தீயணைப்பு கோட்ட அலுவலர், உள்ளாட்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து கம்பெனியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட இக்குழு, 24 ஏக்கரிலான இந்த இடத்தில் பெப்சி கம்பெனி அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து அறிக்கை வழங்கியது. ஆனாலும் அதிகாரிகள் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றும் கூறினர்.

இதையடுத்து, அதிகாரிகள் நேற்று மாலை  எல்..பாட்டிலர்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தற்பொழுது ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், ஆலையை நிரந்தரமாக மூடும் விசயத்தை தேர்தல் முடிந்து வைத்துக்கொள்ளலாம் என்றும், தற்போதைக்கு நீர் உறிஞ்சப்படும் போர் வெல் கிணறுகளை மட்டும் செயல்படாவண்ணம் சீல் வைத்தனர். மேலும் அந்த நிறுவனத்துக்கு செல்லும் மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடிய தண்ணீர் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் ''இது முதல்கட்ட வெற்றிதான், அந்த  பெப்சி நிறுவனத்தையும், அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள மற்ற தண்ணீரை விற்பனை செய்யும் கம்பெனிகளையும் நிரந்தரமாக மூடும் வரை விடமாட்டோம்'' என்கிறார்கள்.




No comments:

Post a Comment