சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Feb 2015

ராணிப்பேட்டை: செத்துக்கொண்டிருக்கும் 10 லட்சம் உயிர்கள்!

ணவு,உடை,இருப்பிடம் என்று மனிதத் தேவைகளை கால நேரம் பாராமல் கடும் உழைப்பைக்கொட்டி நிறைவேற்றி வைக்கும் தொழிலாளர்களுக்கு அடிக்கடி திடீர் மரணம் மட்டுமே பரிசாகக்  கிடைப்பது எவ்வளவு பெரிய கொடுமை.
இந்தக் கொடுமையில் இனம், மொழி, மதம், நாடு, ஆண்பெண் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் லாப வேட்டைக்காரர்களின் செயல்பாடு ஒரே மாதிரியாக உள்ளது.

கிடைக்கும் வேலையைச் செய்யும் தினக் கூலிகள் ,விவசாயக் கூலி வேலை செய்வோர் ,ஆலைத் தொழிலாளர்கள்,உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட  எத்தனைப் பிரிவுகள் இருந்தாலும்  அவர்களுக்கு கூலியாகவும், சம்பளமாகவும்  பணம் வழங்கப் பட்டாலும்பணி நெருக்கடியால், பாதுகாப்பு இன்மையால்  பரிதாப மரணங்கள் வந்து சேர்வது வாடிக்கையாக உள்ளது.


அது போன்ற ஒரு மரண நிகழ்வுதான்  ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் 10 தொழிலாளர்கள் தொட்டிச் சுவர் இடிந்து உறக்கத்திலேயே பரிதாபமாக இறந்து போனது. நெஞ்சைக் கனக்கவைக்கும் இந்த மரணம் நாகரீக சமுதாயத்தின் முன்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.


இறந்தவர்களில் 9 பேர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலார்கள். ஒருவர் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். பலியானவர்கள் மேற்கு வங்க தொழிலாளர்கள்வேற்று மொழிப் பேசுவோர் என்பதாலேயே இப்பிரச்னை பெரிதாக கவனம் பெறவில்லை. அதேப்போன்று அரசியல் கட்சிகளும் சுத்திகரிப்பு மையத்தில் இணைவு பெற்றுள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும் என்று மட்டும் கூறி அடங்கி விட்டன அரசியல் கட்சிகள்.

ராணிப்பேட்டை பொது சுத்திகரிப்பு நிலைய திடக்கழிவின் நெடி தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.மாநிலம் முழுக்க  பல்வேறு தொழிற்கூடங்களில் தனியாகவும், கூட்டாகவும் இயங்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும், சாயப் பட்டறைகளும்  இதே தரத்திலானவைதான் என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையங்களை ஆண்டுதோறும் முறையாக சோதனை செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உண்டு. அந்த அதிகாரிகள் முறையாக சோதனை செய்தார்களா? என்பது முதல் கேள்வியாக  முந்திக் கொண்டு வருகிறது. 

இதற்கான பதிலைத் தேடினால், ராணிப்பேட்டை மரணம்  நடைபெற்ற பொது சுத்திகரிப்பு நிலையத்தில், அனுமதி பெறாமல் 1,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட திடக்கழிவு சேமிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும்மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரியாமல்  இப்படியொரு தொட்டி கட்டப்பட்டிருக்க முடியாது என்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் சாயப் பட்டறைக்  கழிவுகளைப் போல  பல மடங்கு தீமை விளைவிக்கக்கூடியவைதான்  தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகள். இருந்தும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததற்கு காரணம்- துறைசார்ந்த அதிகாரிகளின் உடந்தையும், வேலூர் மாவட்டத்தின் கட்சிப் பாகுபாடு அற்ற அரசியல்வாதிகளின் தலையீடும்தான் என்கிற போது பகீர் என்கிறது.
இந்தக் கழிவுகள் தொடர்ந்து பாலாறு நதியில் கலக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதிலும், அவை  அனுமதிக்கப்பட்ட அளவோடுதான் கலக்கப்படுகிறது என்று தொடர்ந்து கூறி ` நற்சான்று` வழங்கி வந்த வேலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும்தான் இந்த மரணங்களுக்குக்  காரணம். இந்த மா பாதகத்தில் இவர்களுக்கு இருக்கும் பங்கை மறைத்து  தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது மட்டும் சட்டம் பாய்வது விநோதமானது.

தோல் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, எனப் பல்வேறு தொழிற்சாலைகளிலும், அவர்கள் உருவாக்கும் ரசாயனக் கழிவுகளை அங்கேயே வடிகட்டி, வேதிப் பொருட்கள்  கலந்து நச்சுத்தன்மையை அகற்றி, ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் நன்னீராக்கி, சூரிய ஒளியில் காயவைத்து, பிறகுதான் வெளியேற்ற வேண்டும். இதுதான் வழிமுறை என்பது புத்தகங்களில் மட்டுமே உள்ளது என்பதுதான் இன்று நாடு முழுவதிலும் நடந்து கொண்டு இருக்கிறது. இதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தடுத்து நிறுத்துவதில்லை.
ஆலைகளின்  நிர்வாகத்துக்கு செலவு அதிகரிக்கும் என்பதாலும், வரும் கொள்ளை லாபத்தில் துண்டு விழும் என்பதாலும் இயற்கை வளத்தின் மீது அக்கறையில்லாத பணவெறி பிடித்த சுயநலமே இது போன்ற விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதுதான் 21 ஆம் நூற்றாண்டின் இமாலாயப் பிரச்னை 


சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஜவ்வரிசி தயாரிப்பு ஆலைகள்,ஈரோடு,நாமக்கல்,திருப்பூர்,கடலூர்  மாவட்டங்களின் சாயப்பட்டறைகள், ஜீவ நதிகளை சாகடித்து  இருப்பதை  போலத்தான்  வேலூர் மாவட்ட தோல் பதனிடும் ஆலைகளும் பாலாற்றை  தோல் கழிவு ஆறாக மாற்றியுள்ளன என்பது முகத்தில் அறையும் உண்மை.
தோல் கழிவுகளைச் சுத்தப்படுத்த  பல படிநிலைகளைத் தாண்டவேண்டும் என்பதாலும் தூய்மை செய்ய பல நாள்களாகும் என்பதாலும்  அன்றன்றைக்கு அவற்றை சுத்திகரிப்பு செய்யாமல் நள்ளிரவில் பாலாற்றில்   கொட்டி விடுகிறார்கள்.

இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாய வாழ்க்கை அழிந்து போயுள்ளது  என்பது அரசுக்கும்  அரசியல்வாதிகளுக்கும்நன்றாகவே தெரியும். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆலை ரசாயனக் கழிவுகளை ஆற்றில் கலக்கவிடுவதில் அவர்களுக்கு எந்தவிதமான கவலையோ, வருத்தமோ கிடையாது என்பது எத்தகைய கொடுமையானது? 

பாலாற்றில் கலக்கப்படும் தோல் கழிவுகளின் நஞ்சு கலந்த  நீரைப்  பயன்படுத்தும் மக்கள், தோல் புற்றுநோய் தொடங்கி பல்வேறு கொடிய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது இந்த விபத்தில் இறந்திருப்பவர்கள் 10 பேர் மட்டுமே.        
                                     
ஆனால், நாள்தோறும் நச்சுக் கழிவுகளின் பாதிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் ராணிப்பேட்டை சுற்றுவட்டார மக்கள், ஏறத்தாழ 10 லட்சம் பேர். இந்த உண்மை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கண்களில் படுமா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா?.

விபத்தில் மரணம் அடைந்தால் சில லட்ச ரூபாய்கள் இழப்பீடு வழங்கினால் மட்டும் போதாது. மீண்டும் அது போன்ற கொடிய விபத்துகள் மனித உயிர்களைக்  காவு வாங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்
முன்வருமா அரசு?

No comments:

Post a Comment