சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Oct 2015

சபாஷ் சரியான போட்டி: விஷால் அணிக்கு கமல் ஆதரவு; ரஜினி ஆதரவு யாருக்கு?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடும் நிலையில், விஷால் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு என்று இதுவரை அறிவிக்கவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை பொதுச் செயலாளர் ராதாரவி அறிவித்தார். இதை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பின்னர் தடையை நீக்க கோரி, ராதாரவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், பார்வையாளராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.


இதன் பின்னர் நடிகர்கள் ராதாரவி, விஷால் தரப்பினரின் ஒப்புதலுடன் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் தேர்தலை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த மாதம் 2ஆம் தேதி தேர்தல் தொடர்பாக சரத்குமார், விஷால் தரப்பினருடன் நீதிபதி பத்மநாபன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி பத்பநாபன் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சரத்குமார் மற்றும் விஷால் தலைமையில் இரண்டு அணியினரும்,  ஒவ்வொரு மாவட்டங்களாக சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டினர். விஷால் அணியினர் நாளை சென்னையில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளனர். இரண்டு அணியினரும் வேட்பாளர்கள் பட்டியலை ஓரிரு நாளில் வெளியிட உள்ளனர். தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும், துணைத்தலைவர் பதவிக்கு சிம்பு, விஜயகுமார் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு மறைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் நிற்கிறார். நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், அஜய்ரத்னம் போன்றோரும் முக்கிய பதவிகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமாரும், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 3ஆம் தேதி ஆகும். வேட்புமனுக்கள் 4ஆம் தேதி காலை பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் 8ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வரும் 18ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட்எபாஸ் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

முன்னதாக, முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் ஆதரவு பெற சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் கடும் முயற்சி மேற்கொண்டு வந்தனர். ரஜினிகாந்த்தை ஏற்கனவே, விஷால் அணியினர் சந்தித்து ஆதரவை கோரினர். ஆனால், ரஜினிகாந்த் தரப்பில் எந்தவித பதிலும் இல்லை. இந்த சந்திப்பை தொடர்ந்து கமல்ஹாசனை விஷால் அணியினர் சந்தித்து பேசினர். அப்போது, கமல்ஹாசன் எந்தவித ஆதரவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சரத்குமார் தனியாக சந்தித்து பேசினார். அப்போதும், ரஜினி மவுனம் காத்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமார் தலைமையில் ராதாரவி, விஜயகுமார், தியாகு, பாத்திமாபாபு ஆகியோர் நேற்று ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் திடீரென சந்தித்து பேசினர். அப்போது, அவர்களுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி ஆதரவு எங்களுக்குதான் என்கின்றனர் சரத் அணியினர். 

இதனிடையே, விஷால் அணியிர் இன்று கமல்ஹாசனை சந்தித்து பேசினர். அப்போது, தலைவர் பதவிக்கு நாசரை களமிறக்கும் விண்ணப்பத்தில் கமல் முன்மொழிந்தார். அதனை நடிகை கவுதமி வழிமொழிந்தார். இதனால், தனது ஆதரவு விஷால் அணிக்கே என்று வெளிப்படையாக கூறிவிட்டார் கமல்ஹாசன். ஆனால், எந்த அணிக்கு ஆதரவு என்று ரஜினி இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

மொத்தத்தில் நடிகர் சங்கத் தேர்தல், தமிழக சட்டப்பேரவை தேர்தல் போல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த அணியை வெற்றி பெற வைப்பது என்பதை, தேர்தலில் வாக்கு உரிமை பெற்ற 3,139 பேரின் விரல் தீர்மானிக்கும்!

No comments:

Post a Comment