அப்பாச்சிக்குப் பிறகு சத்தம் இல்லாமல் அடங்கிப்போன டிவிஎஸ், மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தயாராகிவிட்டது. டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியின் முதல் பைக், கிட்டத்தட்ட ரெடி. தீபாவளி நெருக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த பைக் எப்படி இருக்கும் என பைக் ஆர்வலர்கள் மட்டும் அல்ல... பஜாஜ், ஹோண்டா, யமஹா ஆகிய போட்டி நிறுவனங்கள் அனைத்துமே ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
டிவிஎஸ்-ஸின் பங்கு என்ன?
பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க இருப்பதாக, 2013 ஏப்ரலில் அறிவித்தது டிவிஎஸ். இந்தியாவில் கூட்டணி முறையில் பைக் தயாரிக்கும் திட்டத்தைத் துவக்கிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, எல்லோரையுமே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தக் கூட்டணியில் டிவிஎஸ் நிறுவனத்தின் பங்கு என்பது, பைக்கைத் தயாரிப்பதற்கான அசெம்பிளி லைனையும், தனது தொழிற்சாலை வசதிகளையும் பிஎம்டபிள்யூவுக்குக் கொடுப்பதுதான். பைக் தயாரிப்புக்கான ஸ்பேர் பார்ட்ஸ், இன்ஜின் என 100 சதவிகித உதிரி பாகங்களும் பிஎம்டபிள்யூ நிறுவனமே கொண்டுவரும். இதில், டிவிஎஸ்-ஸின் பங்கு எதுவும் இல்லை.
கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிராக்கன் எனும் நேக்கட் பைக்கைக் காட்சிக்கு வைத்திருந்தது டிவிஎஸ். இதுதான் பிஎம்டபிள்யூ - டிவிஎஸ் கூட்டணியின் பைக் என்பதைச் சொல்லாமல் ரகசியம் காத்தது. இப்போது விற்பனைக்கு வரப்போகும் முதல் பைக் டிராக்கன்தான். K03 என்ற குறியீட்டு எண்ணில் அழைக்கப்படும் இந்த பைக், தற்போது டிவிஎஸ் நிறுவனத்தின் மைசூர் தொழிற்சாலையில் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.
இன்ஜின்
300 சிசி இன்ஜினுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ பைக். இதன் சக்தி, அதிகபட்சம் 40bhp கொண்டதாக இருக்கும். சிங்கிள் சிலிண்டர் வெர்ட்டிக்கிள் இன்ஜினைக்கொண்டிருக்கிறது டிவிஎஸ் டிராக்கன். ஒற்றை ப்ரொஜெக்டர் ஹெட்லைட் கொண்ட இந்த பைக், முழுக்க முழுக்க நேக்கட் பைக்காக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது.
வீல், ஸ்டீயரிங் க்ளாம்ப், ஃபுட்ரெஸ்ட், பின் பக்க ஸ்விங் ஆர்ம் என அனைத்துமே தரமான அலாயில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஃப்யூல் இன்ஜெக்டட், ஆயில் கூல்டு இன்ஜின்கொண்ட இதில், நமது தட்பவெப்ப நிலையைச் சமாளிக்க, பெரிய ரேடியேட்டர் வைக்கப்பட்டுள்ளது.
ஹேண்டில்பார் மிகவும் தாழ்வாக வைக்கப்படாமல், நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்டக்கூடிய வகையில் இருக்கிறது. பவர்ஃபுல் பைக்கான இதில், ஏபிஎஸ் பிரேக்ஸ் ஸ்டாண்டர்டாக இருக்கும்.
விலை?
3 லட்சம் ரூபாய்க்குள் இந்த பைக் விற்பனைக்கு வரவிருக்கிறது. டிவிஎஸ் தனியாகவும், பிஎம்டபிள்யூ நிறுவனம் தனியாகவும் இந்த பைக்கை இந்தியாவில் விற்பனை செய்யும்!
No comments:
Post a Comment