சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Oct 2015

வீரப்பன் போல ஆடியோ, வீடியோ ரிலீஸ் செய்யும் யுவராஜ்: கைது செய்ய காவல்துறைக்கு திராணியில்லையா?

முதலில் சமூக வலை தளங்களில் தன் கருத்துகளை பதிவு செய்தார்... பின்னர் கடிதம் எழுதினார்.. அதற்கும் பின்னர் காவல்துறை அதிகாரிகளிடம் போனில் பேசினார்... தொடர்ந்து தன் குரலை பதிவு செய்து வாட்ஸ் அப் மூலம் காவல்துறைக்கு சவால் விடுத்தார்.உச்சகட்டமாக தனியார் தொலைக்காட்சி நிருபரை அழைத்து அவருக்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார். இத்தனையும் செய்தது ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி.
பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் என்ற ஒற்றை மனிதர் தான் காவல்துறைக்கு எதிராக தொடர்ச்சியாக சவால்களை விடுத்து வருகிறார். அத்தனையையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது போலீஸ்.
 ஏன் ஓடி ஒளிய வேண்டும்?
சமூக வலை தளங்களில் யுவராஜ் எழுதிய போதும், கடிதம் எழுதியபோதும், வாட்ஸ் அப்பில் ஆடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்ட போதும் இது யுவராஜ்  தானா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது எனச்சொன்னது போலீஸ். அப்படி சொன்னதாலோ என்னவோ போலீசுக்காகவோ என்னவோ இப்போது அவர் தனியார் தொலைக்காட்சியை அழைத்து பேட்டியும் கொடுத்துள்ளார். 
போலீசாரால் தேடப்படுபவர் ஆடியோவை வெளியிடுவது, தொலைக்காட்சி மூலம் பேட்டியளிப்பது என்பது நாம் வெகுவாய் அறிந்த ஒன்று தான். 90களின் இறுதியில் வனத்தில் இருந்து கொண்டு இரு மாநில அரசுகளுக்கு சவால் விடுத்து வந்த சந்தன மர கடத்தல் வீரப்பன் அடுத்தடுத்து கேசட்டுகளை வெளியிட்டும், தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தும் பரபரப்பை கிளப்பி வந்தார். அதே பாணியில் தான் யுவராஜின் செயல்பாடுகளும் இருந்து வருகிறது. வீரப்பன் ஆடியோ வெளியிடவும், பேட்டி கொடுக்கவும் தேவையும் இருந்தது. செய்திகளும் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேல் யாரும் நெருங்க முடியாதபடி, ஆயுதங்களோடு, கூட்டாளிகளோடு வனத்தில் அவர் இருந்தார். ஆனால் தன்னந்தனி ஆளாக, பக்கத்து ஊர்களில் வசித்துக்கொன்டு இத்தனையும் செய்து வருகிறார் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் யுவராஜ். இவர் ஏன் ஒளிந்திருக்க வேண்டும்? எதற்காக இவையெல்லாம்? ஏன் போலீஸ் வேடிக்கை பார்க்கிறது? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

நடந்தது என்ன?
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், பள்ளிபாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தற்கொலையா? கொலையா? என்ற விவாதத்துக்கிடையே, கல்லூரியில் உடன் படித்த சுவாதி எனும் இளம்பெண் தெரிவித்த தகவல்கள் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதை உணர்த்தியது. கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்த போது, தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் யுவராஜ் தலைமையில் அங்கு வந்தவர்கள், சுவாதியை விரட்டி விட்டு, கோகுல்ராஜை அழைத்து சென்றதாக சுவாதி கொடுத்த வாக்குமூலத்தில் உள்ளது. கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் தான் இந்த கொலை நடந்துள்ளது. பிரேத பரிசோதனை தகவல்களும் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தின. கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளில் யுவராஜ் இருப்பது, சுவாதியின் வாக்குமூலம் ஆகியவை யுவராஜூக்கு இந்த கொலையில் சம்பந்தமிருக்க கூடும் என்ற சந்தேகத்தை வலுவாக கிளப்பின. அதன் அடிப்படையில் விசாரித்த போலீஸ் 11 பேரை கைது செய்து, சிலரை குண்டர் சட்டத்திலும் அடைத்தது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக யுவராஜை அறிவித்தது. ஆனால் அவரை கைது செய்யவில்லை. தீவிரமாக தேடி வருகிறோம் என சொல்லி வந்தது காவல்துறை.
அடுத்தடுத்து வெளியான ஆடியோ
இதற்கிடையே தான் சமூக வலை தளங்களில் தன் கருத்தை வெளியிட துவங்கினார் யுவராஜ். போலீஸ் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசினார். கடிதம் எழுதினார். தனது பேச்சை பதிவு செய்து வாட்ஸ் அப்களில் தொடர்ச்சியாக வெளியிடவும் செய்தார். இந்த சூழலில் தான் கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்குதல் காரணம் என எல்லோரும் குற்றஞ்சாட்டினர். அதில் ஒருவராக தன்னையும் இணைத்துக் கொண்டார் யுவராஜ். விஷ்ணுபிரியாவுடன் தான் பேசிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.யுவராஜூக்கு எதிரான வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் விஷ்ணு பிரியா. யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தவரும் விஷ்ணு பிரியா தான். யுவராஜ் வெளியிட்ட ஆடியோவில் கூட ஏன் இப்படி ஓடி ஒளிகிறீர்கள் என கேட்டாரே தவிர, யுவராஜூக்கு ஆதரவாக எந்த கருத்தையும் விஷ்ணு பிரியா சொல்லவில்லை. இந்த சூழலில் விஷ்ணு பிரியா தற்கொலைக்கு போலீஸ் அதிகாரிகளே காரணம் எனச்சொல்லியும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு வருகிறார் யுவராஜ். அதன் தொடர்ச்சி தான் இந்த தொலைக்காட்சி பேட்டி.
எதற்காக இந்த பேட்டி?
யுவராஜின் தொலைக்காட்சி பேட்டியில் அகவனிக்கத்தக்க விஷயம் ஒன்று. 'கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸ் என்னை சந்தேகிப்பது சரி தான். ஏனென்றால் சிசிடிவி கேமரா பதிவில் நான் இருக்கிறேன். அந்த மாணவியும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்' எனச்சொல்லி இருக்கிறார். எனவே இந்த சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை ஏன் விசாரிக்க கூடாது?. போலீஸ் மேல் நம்பிக்கை இல்லை என்றாலோ அல்லது போலீஸ் விசாரணைக்கு அவர் உட்பட விரும்பாத பட்சத்திலோ அவர் நீதிமன்றத்தில் சரணடைந்து, தன்னிடம் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் ஆதாரங்களை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வெளியிடலாம். அதை விடுத்து தலைமறைவாக இருப்பது ஏன் என்பதும், கடிதம், ஆடியோ, வீடியோ என அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பி வருவது ஏன் என்பதும் புரியாத புதிர்.
இந்த விவகாரம் வெறுமனே ஒரு கொலை வழக்கு அல்ல. இது இரு சமூகத்தினருக்கிடையேயான பிரச்னையாகத்தான் வளர்ந்து வருகிறது. வளர்க்கப்பட்டும் வருகிறது. கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் 'கோகுல்ராஜ் - சுவாதியின் இருவரது சமூகமும் இருப்பது என்பது அனைவரும் அறிந்தது தான். கோகுல்ராஜூம், சுவாதியும் ஒரே சமூகத்தினராக இருந்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது. நடக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.
யுவராஜ் சரணடைய மறுப்பது ஏன்?
இந்த சூழலில் இந்த இரு சமூகத்தினரிடையேயான பிரச்னையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வேலையாகத்தான் யுவராஜின் ஆடியோ, வீடியோக்கள் இருக்கின்றன. தனது பேட்டியில் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். "கோகுல்ராஜ் நல்லவனல்ல. அவன் சுவாதியைப்போலவே இன்னும் சில பெண்களுடன் பழகி வந்துள்ளான்' என்கிறார். அதேபோல் குறிப்பிட்ட சமூகத்தலைவர்கள் பற்றியும் குற்றம்சாட்டுகிறார். 'கோகுல்ராஜ் இறந்த உடனே அதை கொலை என்று அவர்கள் ஏன் சொல்ல வேண்டும். அவர்கள் இதை அரசியலாக்காமல் இருந்திருக்க வேண்டும்' என்கிறார்.  இந்த ஆடியோவும், வீடியோவும் வெளியானது எல்லாம் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை போலீசார் அறிந்திருக்கவில்லையா? அல்லது இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா என்பது தெரியவில்லை.
ஒரு கொலை குற்றத்தில் முதல் குற்றவாளி. 'தன்னை இந்த கொலை வழக்கில் சேர்க்க அத்தனை முகாந்திரங்களும் இருக்கின்றன' என தனக்கு தானே விளக்கம் சொல்லிக்கொள்பவர், இந்த பேட்டியின் மூலம் என்ன சொல்ல வருகிறார்?. போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டுகிறார். ஆதாரங்கள் இருப்பதாக சொல்கிறார். தொலைக்காட்சி நிருபரை அழைத்து பேட்டி கொடுப்பவர், அதற்கான ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? தன்னுடைய பேட்டியில் சொல்வதைப்போல தான் குற்றமற்றவர் என்றால் நீதித்துறை முன் ஆஜராகி தன் ஆதாரங்களை வெளியிட அவருக்கு என்ன தயக்கம்?.
வேடிக்கை மட்டுமே பார்க்கிறது போலீஸ்
அடுத்தடுத்த இந்த சம்பவங்களின் மூலம் தன்னை ஏதோ தியாகி போல நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறார் யுவராஜ். அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அதை நியாயப்படுத்தவும் செய்கிறது' என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. உற்றுநோக்கினால் அது உண்மையாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுவதை தடுக்க முடியவில்லை.
ஒரு வழக்கில் தேடப்பட்டு வருபவர், போன், இணையம் என அறிவியல் சாதனங்களை தெரியாமல் பயன்படுத்தினால் கூட, அவன் இருப்பிடத்தை அறிந்து கைது செய்யும் காவல்துறை, இணையத்தில் வலம் வருபவரை, போலீஸ் அதிகாரியையே போனில் அழைத்து பேசுபவரை, தொலைக்காட்சி நிருபரை அழைத்து தில்லாக பேட்டி அளிப்பவரை கைது செய்ய முடியாதது ஏன்? அல்லது கைது செய்ய விடாமல்
தடுப்பது என்ன?
இந்த சம்பவம் சாதாரண குற்ற சம்பவம் இல்லை. இதற்கு பின்னால் சமுதாயத்தை பாழ்படுத்தும் ஒரு சாதிப்பிரச்னை வேகமாய் வளர்ந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் அரசும், காவல்துறையும் உணர்ந்து கொள்ள மறுப்பது அல்லது உணர்ந்து கொள்ளாதது போல நடிப்பது என்பது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.
ஆடியோ மூலம் அரசியல் செய்கிறார்
இந்த சம்பவத்தில் எல்லோருக்கும் லாபம். இதுவரை யாரென்றே தெரியாமல் இருந்த யுவராஜ், இன்று ஒரு சமூகத்தின். ஒரு சாதியின் காவலாளியாக சித்தரிக்கப்படுகிறார். சாதியை மையப்படுத்தி இயங்கும் அரசியல் கட்சிகள் தங்களது வாக்கு வங்கியை இதன் மூலம் அதிகரித்துக்கொள்ள முடியுமா  எனப்பார்க்கிறார்கள்.  எந்த சமூகத்தையும் சாராத, சாராதவர்கள் என சொல்லிக்கொள்கிற பொதுவான அரசியல் கட்சிகள் கூட இதைப்பற்றி பேசினால் வாக்குகள் சிதறிவிடும் என அஞ்சி அமைதி காக்கின்றன.  இதில் அமைதியை இழந்து, இனி என்னவெல்லாம் நடக்குமோ என அஞ்சி நடுங்குபவர்கள் கொங்கு மாவட்ட மக்கள் தான். குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த மக்கள். இனி வேறு சமூகத்தைச் சேர்ந்த எந்த பெண்ணுடனாவது பேசினால் கூட கொலை செய்வார்களோ என்ற அச்சத்தை விதைக்க ஆசைப்படுகிறார்கள் யுவராஜ் போன்றவர்கள். அதை நடத்திக்காட்ட முயல்கிறது காவல்துறை.
யுவராஜ் காவல்துறை மீது குற்றஞ்சாட்டுகிறார். காவல்துறைக்கு சவால் விடுக்கிறார். ஆனால் அதையெல்லாம் காவல்துறை கொஞ்சம் கூட கண்டுகொண்டதாய் தெரியவில்லை. அப்படியென்றால் என்ன நடக்கிறது. ஏன் காவல்துறை இதில் மவுனம் காக்க வேண்டும். கோகுல்ராஜ் கொலையில் யுவராஜூக்கு தொடர்பு உள்ளது என அறிவித்து, அவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்த விஷ்ணுபிரியா இப்போது  உயிருடன் இல்லை. விஷ்ணு பிரியாவின் மரணத்துக்கு பின்னர் அடுத்தடுத்து ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் யுவராஜ். விஷ்ணு பிரியா நேர்மையான அதிகாரி என சான்று கொடுக்கிறார். விஷ்ணு பிரியாவுடன் தான் பேசிய ஆடியோவை வெளியிட்டு ஆதாயம் தேடிக்கொள்ள பார்க்கிறார். உண்மையில் விஷ்ணு பிரியா அந்த ஆடியோவில் யுவராஜூக்கு ஆதரவாக எதையும் பேசிவிடவில்லை. இருப்பினும் அதை வைத்து அரசியல் செய்கிறார் யுவராஜ்.

ஒரு கொலை வழக்கு, டி.எஸ்.பி. தற்கொலை மூலம் அடுத்த மரணத்தை நிகழ்த்தி விட்டது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? ஆனால் நடக்கும் அத்தனையையும் வேடிக்கை மட்டுமே பார்ப்போம் என காவல்துறை உள்ளது தான் வேடிக்கை.

No comments:

Post a Comment