சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Apr 2015

சீரியல் இயக்குனர் தற்கொலைக்கு காரணம் என்ன? பின்னணி தகவல்!

உறவுகள், அரசி உள்ளிட்ட பல்வேறு தொடர்களை இயக்கிய பிரபல தமிழ் சின்னத்திரை இயக்குனர் பாலாஜி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு, பிறமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் அதிகரிப்பே காரணம் என்று தெரியவந்துள்ளது.

சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல சின்னத்திரை தொடர்கள் இயக்குனரான பாலாஜி யாதவ் (45). லட்சுமி, துளசி, பயணம், பந்தம், உறவுகள், அரசி, காயத்ரி, புகுந்த வீடு, செல்வி, ரோஜா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலையில் பூட்டிய அறையில் பாலாஜி தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி கிருஷ்ணவேணி, விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கணவரின் தற்கொலை குறித்து கிருஷ்ணவேணி கூறுகையில், "எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஹர்சிதாவை 2 மாத கைக்குழந்தையாக வடபழனி கோயிலில் தத்தெடுத்தோம். ஹர்சிதா மீது அவர் மிகுந்த பாசம் வைத்திருந்தார். சமீபத்தில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றை வாங்கினோம். பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட நெடுந்தொடர்கள் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் அதிகளவில் ஒளிபரப்பாகிறது. இதனால் அவருக்கு நேரடி தமிழ் தொடர்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. கடந்த 6 மாத காலமாக வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் வீட்டிற்கான கடன் தவணை தொகையை செலுத்த முடியாமல் தவித்தோம். சில தினங்களுக்கு முன்பு கூட வங்கியில் இருந்து வீட்டிற்கான கடன் தொகையை செலுத்துங்கள் இல்லை என்றால் ஜப்தி செய்துவிடுவோம் என்று அவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை என்னிடம் காண்பித்து மிகவும் வேதனைப்பட்டார்.

நேற்றிரவு ஹர்சிதாவை யாரிடம் இருந்து தத்தெடுத்தோமோ, அவர்களிடம் நீங்கள் வளர்த்துக்கொளுங்கள் என்று என் கணவர் கொடுத்துவிட்டார். ஆனால் எங்கள் பாசத்தை அறிந்த அவர்கள், காலையில் வந்து குழந்தையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார்கள். குழந்தை மீது அதிக பாசம் வைத்திருந்ததால் எப்போது விடியும் என்று காத்திருந்தேன். காலையில் பங்குனி உத்திரம் என்பதால் குழந்தையுடன் முருகன் கோயிலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் இந்த சோக முடிவை எடுத்துவிட்டாரே" என்றார் கண்ணீர் மல்க.

பாலாஜியின் உடல் இறுதிச்சடங்குகளுக்காக சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பாலாஜி யாதவ் உடலுக்கு சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் உள்பட நடிகர்-நடிகைகள் மற்றும், இயக்குனர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் கவிதா பாரதி கூறுகையில், “பாலாஜி யாதவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. சமீப காலமாகவே பிறமொழி தொடர்கள் காரணமாக வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஆகவே தொலைக்காட்சிகள் மொழிமாற்றம் செய்யும் தொடர்களை ஒளிபரப்பக்கூடாது” என்றார்.


No comments:

Post a Comment