சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Apr 2015

ஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்...

சினிமா என்னும் மொழியின் திரை நாயகன் சத்யஜித் ரேவின் நினைவு தினம் இன்று! அவரின் படைப்புகள் உணர முடியாத உணர்ச்சிகளையும், காட்சிகளின் மூலம் உணரவைக்கும் மந்திர திறவுகோல். திறக்க முடியாத மனக்கதவிலும் மாறுதலை ஏற்படுத்தும் மகா சக்தி. இந்திய சினிமாவின் மாறுதலுக்கு இவர் எடுத்த முப்பத்தி ஆறு படங்கள்தான் காரணம்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர், தாயின் குறைவான சம்பளத்தில் வாழ்க்கையைக் கழித்தவர். தாகூரின் சாந்தி நிகேதனில் ஓவியம் கற்றுத் தேறினார். மாதம் எண்பது ரூபாய்க்கு ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராகப் பணிபுரிய ஆரம்பித்தார். வேலையில் பிடிப்பில்லாமல் அடுத்தடுத்து பல வேலைகள் மாறினார். புத்தக நிறுவனம் ஒன்றில் அட்டைப் படம் வரையும் வேலையில் சேர்ந்தார். நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா நூலிற்காககூட ஓவியங்கள் வரைந்தார்.

திரையில் மவுனத்தின் ஆழத்தில் கேமராவை பயணிக்கச் செய்தவர் ஐரோப்பாவில் சினிமாவின் புதிய அடையாளத்தை நிறுவியவருமான ழான் ரெனுவார், தன்னுடைய ரிவர் படத்திற்காக 1948-ல் கல்கத்தா வந்திறங்கினார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு தவறாமல் ஆஜரான சத்யஜித் ரே, தான் அட்டைப்படம் வடிவமைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாவலின் கதையை படமாக்க ஆசைப்படுவதாக சொல்லி, அக்கதையை ழான் ரெனுவாருக்கு கூறினார். அந்தக் கதையை கேட்டு தட்டி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் ழான் ரெனுவர். ஜந்து வருடங்கள் கழித்து அதுதான் பிரமாண்டமான படைப்பாக 'பதேர்பாஞ்சாலி' எனும் படமாக வெளீயானது.
இந்திய சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் ராஜாக்களின் கதையையும், ராஜா செட்டுகளையும், நாடகத்தை ஒத்த நீள படங்களை மட்டுமே எடுத்து வந்த சமயம். இதில் பிமல் ராய், ரித்விக் கட்டாக், சேத்தன் ஆனந்த் ஆகியோர் சற்று மாறுபட்டு நின்றார்கள். ஆனால், அவர்களின் படங்களும்கூட இந்தியாவை விட்டு வெளியே செல்லவில்லை. அந்த சமயத்தில், சத்தியஜித்ரே வேலை நிமித்தமாக லண்டன் சென்றிருந்தார். அவர் பார்த்த "தி  பை சைக்கிள் திஃப்" திரைப்படம் அவரின் கண்களில் தங்கிவிட்டது. அந்த படத்தில் வரும் சிறுவன் கதாபாத்திரமாக, இவர் படமாக்க நினைத்த நாவலின் கதாபாத்திரமான அபு நின்றான். அந்தத் திரைப்படம் மேலும் அவரின் வலுவை ஊட்டியது. இந்தியா திரும்பினார் 1952-ல் பதேர்பாஞ்சாலி படப்பிடிப்பும் தொடங்கியது.

தன்னுடைய மனைவியின் நகை, இருந்த பணத்தைப் போட்டு படத்தைத் தொடர்ந்தார் ரே. பொருளாதாரச் சிக்கலினால் படம் பாதியிலேயே நின்றது. வருடமும் கடந்தது. பின் அன்றைய வங்க முதல்வர் பி.சி.ராய்க்கு மனு அளிக்கப்பட்டு படம் காண்பிக்கப்பட்டது. படம் அவருக்குப் பிடித்துபோக,  போக்குவரத்துத் துறை மூலம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. இறுதியாக 1955-ல் படம் முடிவடைந்து வெளியானது. படம் வெளியானபோது ரே கூறிய வார்த்தை, "இந்த மூன்று வருடத்தில் மூன்று  நன்மைகள் எனக்கு நடந்திருக்கிறது. படத்தின் முக்கிய பாத்திரங்களான அபு மற்றும் துர்க்கா வளரவில்லை, மேலும் இந்திர் பாட்டியும் இறக்கவில்லை. இதில் ஏதேனும் ஒன்று நிகழ்திருந்தால்கூட பதேர்பாஞ்சாலி எனும் பெரும் பொக்கிஷம் நம் கண்ணில் நிழலாடாமலேயே போயிருக்கும்.''

படம் வெளியானதும் பதேர்பாஞ்சாலியை கொண்டாட ஆரம்பித்தனர். தேசிய விருது முதல் பல விருதுகள் குவிய ஆரம்பித்தன. உலக அரங்கில் தலை நிமிர்ந்து நின்றது. பெரும்பாலும் நாவல்களை மையமாக்கியே படங்களை இயக்கினார். அவரின் படைப்புகளில் இந்தியாவின் நடைமுறை வாழ்க்கை, வறுமை, சோகம், அழுகை என்று உண்மையை காட்சிப்பிழையில்லாமல் காட்டியவர். வறுமையைப் பேசியே இவர் பாராட்டுகளை அள்ளுகிறார் என்று விமர்சனங்களும் வரத்தான் செய்தன. எதையுமே பொருட்படுத்தாமல் இவரின் பாதையில் தெளிவாக இருந்தார்.

Ghare Baire என்னும் தாகூரின் கதையைப் படமாக்கிக் கொண்டிருந்தபோது இரண்டு முறை ரேவுக்கு மாரடைப்பு வந்தது. மரணத்தின் வாசலுக்கே சென்று திரும்பியவர், இனி படமெடுக்க மாட்டார் என்றே ரசிகர்கள் எண்ணினர். மீண்டு வந்தவரின் ஓய்வு நேரத்தில் அவர் செய்தது என்ன தெரியுமா? ஓயாமல் மூன்று படங்களை இயக்கி முடித்தார். படப்பிடிப்பு நேரத்தில் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் எல்லாம் தயாராக இருக்கும். இப்படித்தான் மூன்று படங்களை இயக்கி முடித்தார்.

இந்தியாவின் முதல் ஆஸ்கார் நாயகனும் இவரே. மரணப்படுக்கையில் இருக்கும்போது ஆஸ்காரின் வாழ்நாள் சாதனையாளர் விருது இவரைத் தேடி வந்தது. இந்திய சினிமாவை உலகத் தரத்தில் உயர்த்தியதில் ரே மிகமிக முக்கியமானவர்!



No comments:

Post a Comment