பாரபட்சமற்ற இணைய சேவையான 'நெட் நியூட்ராலிட்டிக்கு’ நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. யார் பக்கம் நிற்பது எனப் புரியாமல் தள்ளாடுகிறது மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'ட்ராய்.’
அது என்ன 'நெட் நியூட்ராலிட்டி?’ சமச்சீரான வேகத்தில், நியாயமான கட்டணத்தில் இணைய பக்கங்களைப் புரட்டுவதுதான் இந்தச் சேவை. இதற்குக் கிடுக்கிப்பிடி போட தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ஹைக், யூ டியூப் என்று இனி நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படும்.
'ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் வருகைக்குப் பின்னர் தொலைத்தொடர்பு என்பது அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஸ்கைப், வைபர், லைன், ஹைக், ஐ.எம்.ஓ... தற்போது வாட்ஸ் அப் வரை இலவசமாகப் பேசும் வசதி வந்துவிட்டதால், பைசா செலவில்லாமல் இணையம் மூலம் பேசிவிடலாம். இதன் வழியாக மெசேஜ்களையும் இலவசமாக அனுப்பிவிட முடியும். இந்த ஆப்ஸ்களின் வருகை, செல்போன் கம்பெனிகளின் வருவாய் வீழ்ச்சிக்கு வித்திட்டது. எஸ்.எம்.எஸ் மூலம் கிடைத்துக் கொண்டிருந்த வருவாயில் 42 சதவிகிதமும் வாய்ஸ் மூலம் கிடைத்துக்கொண்டிருந்த வருவாயில் 19 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்து, கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக செல்போன் சேவை நிறுவனங்கள் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
இந்த ஆப்ஸ்களைக் கட்டுப்படுத்தி அதற்கு சுருக்குக் கயிறு மாட்டும் விதமாகப் புதிய திட்டங்களை சேவை நிறுவனங்கள் அமைதியாக வகுக்கத் தொடங்கின. அதன் மூலம் ஒட்டுமொத்த இணையத்தையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவிடத் திட்டம் போட்டன. ஆனால், அது நடக்கவில்லை. இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி, திடீர் கிளர்ச்சி ஏற்பட 'ட்ராய்’ அமைப்பானது விழித்துக்கொண்டது. தற்போது சமச்சீர் இணையம் தொடர்பாக செல்போன் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுவிட்டு சில வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறது 'டிராய்.’ அந்த அறிக்கையைத்தான் ஒட்டுமொத்த நெட்டிசன்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்' என்று சொல்கிறார் வலைப்பதிவாளர் 'சைபர்’ சிம்மன்.
தொழில்நுட்ப வல்லுநரான ஆண்டன் பிரகாஷிடம் இதுபற்றி பேசினோம். ''இணைய சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைச் சுதந்திரமாக இயங்கவிடும் கான்செப்ட்தான், நெட் நியூட்ராலிட்டி. இதை இந்தியாவில் முறையாகச் செயல்படுத்தாவிட்டால், அதிக பாதிப்புக்கு உள்ளாகப் போவது இணைய நுகர்வோர்கள்தான். அதனால் நிச்சயம் அரசு நெட் நியூட்ராலிட்டி சிஸ்டத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
சீனா போன்ற நாடுகளில் இணையத்தின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் அரசின் கைகளில் இருப்பதால், சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அங்கே இணையத்தில் நினைத்தது எதையும் எழுதிவிட முடியாது. அதற்கென நிறைய கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்திருக்கிறது. நார்வே மற்றும் சுவீடன் நாடுகளில் இணையத்தின் கட்டுப்பாடு என்பது அரசாங்கம் சார்ந்தது மட்டுமல்ல.
இணையத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நாளில் வலை சமத்துவம் பெருமளவில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அந்த நாடுகளில் மட்டுமே. இந்தியர்களின் வாழ்வில் இணையம் அழுத்தமாக ஊடுருவிவிட்டது. இணையத்தின் சேவையை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார் தெளிவாக.
அநீதிக்கு எதிராகப் பொங்குவது என்றால், இணையவாசிகளிடம் கேட்கவா வேண்டும்? பொங்க ஆரம்பித்துவிட்டார்கள்!
No comments:
Post a Comment