சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Apr 2015

'பிரஷர்' ஏற்றும் ப்ளெக்ஸ் போர்டு தேவையா?

யாருக்காவது ரத்த அழுத்தக் குறைபாடு இருந்தால் தென் மாவட்டங்களுக்கு வரச் சொல்ல வேண்டும். பணம் தேவை இல்லை, மருத்துவ வசதி தேவை இல்லை, மாத்திரைகள் தேவை இல்லை. ப்ளெக்ஸ் போர்டு பார்த்தாலே போதும். பிரஷர் தானாக உயர் அழுத்தமாக மாறும். அந்த அளவிற்கு ப்ளெக்ஸ் போர்டு விளம்பரங்கள் இருக்கும்.

திரும்பிய இடமெல்லாம் ப்ளெக்ஸ் போர்டு. தலைவர்  வருகிறார்  என்றாலும், போனார் என்றாலும் ப்ளெக்ஸ் போர்டு வைத்தால் தான் தொண்டர்களின் அன்றைய பொழுது முடியும் என்ற அளவிற்கு  ப்ளெக்ஸ் போர்டு கலாச்சாரம் பெருகி விட்டது. பொழுது முடிவதற்குள் ப்ளெக்ஸ் போர்டு மூலம் சண்டையும், ஜாதி வன்முறையும் வெடித்து போலீஸ் குவிக்கப்படும் செய்தி சர்வ சாதா'ரணமாகி'  மக்களின் அன்றாட வாழ்வை பதிக்கிறது. சாதி வளர்க்கும் ப்ளெக்ஸ் போர்டு கலாச்சாரம் இதுவரை யாரையும் வாழ  விட்டதாக சரித்திரம் இல்லை.

ஏற்கனவே நாட்டிற்கு உழைத்த தலைவர்களை எல்லாம் ஜாதி வளையத்தில் கொண்டு வந்து, கூண்டுக்குள் அடைத்து போலீஸ் பாதுகாப்பு தரும் அவல நிலையில் ப்ளெக்ஸ் போர்டுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் நிலை வெகு தொலைவில் இல்லை.

அதிலும் ப்ளெக்ஸ் போர்டு படங்களைப் பார்த்தால் கோழையாக இருப்பவருக்கும் சிறைக்கு செல்லும் அளவிற்கு வன்முறை எண்ணம் தோன்றும். அப்படி ஒரு வீர வசனமும், மீசை முறுக்கும் படமும், அரிவாளோடு நிற்கும் நடிகர் படமும் கட்டாயம் இடம் பெறும். அந்த நடிகர்களே வேறு சாதியில் திருமணம் முடித்து எல்லா ஜாதியும் ஒன்று தான் நமது உழைப்பே வாழ்க்கை என்று அனைத்து சமூக மக்களிடமும் இணக்கமாக இருக்கும் போது... எங்க சாதி நடிகர் என்று, அவர்கள் பின்னால் ஓடுவது, இந்த மக்கள் என்றைக்குத் தான் சுய அறிவை உபயோகப்படுத்துவார்களோ என கேட்க வைக்கிறது.

ஏற்கனவே உள்ள சாதி நெருப்பால் பலரும் நீதிமன்றத்தில் வாய்தா கேட்டு அலைந்து வரும் நிலையில் நிறுத்தி வைக்கப்படும் ஒவ்வொரு ப்ளெக்ஸ் போர்டு பலகை, பல அப்பாவிகளை நீதிமன்ற வாசலில்    நிறுத்தும் என்றே சொல்லத் தோன்றுகிறது. மறியல் செய்வதும், போலீஸ் தடி அடியும் வாங்கவா ப்ளெக்ஸ் போர்டு வைக்கிறார்கள்? இதில் போதாக்குறைக்கு சம்பந்தப்பட்ட ஜாதி கட்சி தலைவர்களின் சூடான அறிக்கை, துப்பாக்கி சூடு வரை அப்பாவிகளை அழைத்துச் செல்லும்.

ஒரு ஊரை அழிக்க அணுகுண்டு தேவை இல்லை... ஒரு ப்ளெக்ஸ் போர்டு போதுமே. ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் ஜாதி தலைவர்கள் வேண்டுமானால் செல்வாக்கு இருப்பதாக கூறிக்கொண்டு, தேர்தலில் 'சீட் பேரம்' பேசலாம். ஆனால், அப்பாவிகளின் குடும்பங்கள் போலீஸ் தடியடிக்கு ஆளாகி,  வழக்கிற்கு அலைந்து, பொருளாதரத்தில் பின்னோக்கி செல்லுமே அப்போது எந்த ஜாதி அவர்களோடு வருமா?

அரசின் கடமை:

1. ப்ளெக்ஸ் போர்டு வைப்பவர்கள் போலீஸ் அனுமதி இல்லாமல் வைக்க கூடாது என சட்டம் வேண்டும்.

2. ப்ளெக்ஸ் போர்டு வன்முறையை தூண்டும் வாசகம், படங்கள்  இருக்க கூடாது.

3. ஆபாசமான, அடி தடி உண்டாக்கும் படங்கள் வைக்க கூடாது.

4. பொது இடங்களில் ப்ளெக்ஸ் போர்டு வைக்க கூடாது. அவரவர் சொந்த  இடத்தில் ப்ளெக்ஸ் போர்டு வைத்து மாலை போட்டு பாலாபிஷேகம் கூட செய்யலாம்.

5. ப்ளெக்ஸ் போர்டு தயாரிப்பு  நிறுவனத்தின் பெயர், அலை பேசி எண் கட்டாயம் போர்டில் பதிவு செய்ய வேண்டும்.

6. நடிகர்கள் தங்களது படத்தை எக்காரணம் கொண்டும் ஜாதி ரீதியில் பயன்படுத்த அனுமதிக்க கூடாது.

ப்ளெக்ஸ் போர்டு வைப்பதால் நம் குடும்பம் முன்னேறாது. மாறாக,  ப்ளெக்ஸ் போர்டு தயாரிப்பு நிறுவனமும், அடிதடி வழக்கிற்காக ஆஜராகும் வக்கீல்களும், வழக்கிற்காக காவல் நிலையம் வரும் போதெல்லாம் லஞ்சம் பெறும் காவலர்களும் தான் முன்னேறுவார்கள்.

ஒரு விளம்பரப் பலகை விழுந்ததற்கு பல உயிர்கள் விழ வேண்டுமா? பேருந்து எரிய வேண்டுமா? சிறை நிரம்ப வேண்டுமா என்பதை  மக்களுக்கு யார் தான் புரிய வைப்பதோ? ஜாதி கூட்டத்திற்கு ஆள் சேர்க்க  வரும் போது சோறு போடும் கட்சித் தலைமை வேறு நாளில் நமக்கு சோறு போடுமா என்பதை நினைத்துப் பார்த்தல் புரியும், உழைப்பு மட்டுமே நமக்கு தேவை என்று.

கண்மாயில் தண்ணீர் இல்லை, சாலை வசதி சரியில்லை, ஊழல் பெருகி விட்டது என்ற போதெல்லாம் போராட்டம் நடத்தாத கூட்டம், ஒரு ஜாதி விளம்பர பலகை சாய்ந்தவுடன் கூடி வருகிறது என்றால், நம்மை அரசியல்வாதி ஏமாற்றுகிறார் என்று சொல்வதை விட நாம் ஏமாறப் பிறந்தவர்கள் என்பதே உண்மை.

எந்த மத, ஜாதி மக்களும் உயர்வானவர்கள் தான், எண்ணங்கள் உயர்வாக இருக்கும் போது. நாம் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று சொல்வதை விட, நம்மால் எத்தனை பேர் உதவி பெற்று, அவர்கள் வாழ்வில் உயர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்ப்பதே மேல். நான் தான் உயர்ந்த ஜாதி என்று சொல்பவரிடம் கேளுங்கள், எத்தனை பேருக்கு கல்வி, உணவு, பணம் போன்ற தான, தர்ம காரியங்கள் செய்தீர்கள் என்று. நான் தான ஜாதிக்கு பாடுபவன் என்று சொல்பவரிடம் கேளுங்கள். ஜாதியில் கஷ்டப்படுபவர்களுக்கு என்ன உதவி செய்து சாதித்தீர்கள்  என்று. மனித நேயம் வளர்ப்பதே உண்மையான மனித ஜாதி.

வெள்ளி விழாவும், பொன் விழாவும் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் இருக்கட்டும். ப்ளெக்ஸ் போர்டு வைப்பதால் அனைவருக்கும் பொருளாதார வளம் கிடைக்குமா? கஷ்டப்படுபவர்கள் எந்த சாதி, மதமானாலும் அவர்களது உழைப்பால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உண்மை புரியாதவரை, பிரஷர்  ஏற்றும் ப்ளெக்ஸ் போர்டு தேவையா என்பதை மக்களும், அரசும், மக்களுக்காக குரல் கொடுக்கும் நீதிமன்றங்களும் தான் முடிவு செய்ய வேண்டும்.



No comments:

Post a Comment