சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Apr 2015

ஐம்பது வயதில் அசத்தல் வெற்றி!

வா ழ்க்கையை ஓரளவாவது பிள்ளைகளுக்கு சொல்லித் தந்துவிட வேண்டும் என்றுதான் அம்மா, அப்பா, ஆசிரியர்கள்.. என்று அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு முயல்கிறார்கள். ஆனால், அந்த வாழ்க்கையே இறங்கி வந்து வகுப்பெடுக்கும்போதுதான் பலருக்கும் முற்றிலுமாக உறைக்கிறது.. தாங்கள் இன்னும் துவக்கப் பள்ளியையே துவங்காதது! வாழ்க்கை என்கிற வகுப்பறையில் பல பட்டங்களுக்கு நிகரான பட்டறிவைப் பெற்றிருப்பவர்தான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஜெயந்தி ராஜவேம்பு!

மிக மிக வசதியான குடும்பத்தில் பிறந்து, அதை விட வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, பெற்ற பெண்கள் இருவரையும் கரை சேர்த்து விட்டு, 'அக்கடா' என்று ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஜெயந்தியைத் துரத்தி வந்தது விதி. அத்தனை நாளும் சிறகுகளுக்குள் பொதிந்ததுபோல குடும்பத்தைக் காத்து வந்த கணவரின் மரணமாக விஸ்வரூபமெடுத்தது அது. பணக்கார பிசினஸ் மேனின் மரணம், உலகமே தெரியாத அவரின் மனைவியை எப்படியெல்லாம் சுழற்றி அடிக்கும்? அந்த துயரம் அவர் வார்த்தைகளிலேயே..
‘‘அதுவரைக்கும் பக்கத்துத் தெருவுக்குக்கூட தனியா போகாத என்னால, அப்படி ஒரு இழப்பைத் தாங்கிக்கவே முடியல. ஒரு வாரம் பித்துப் பிடிச்ச மாதிரி கிடந்தேன். 'பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி யாச்சு.. அவரும் போயிட்டார்.. இனி என்ன இருக்கு'னு நானும் யோசிச்சேன்தான். ஆனா, சில பொறுப்புகளை நெனச்சுப் பார்த்து என்னை நானே தேத்திக்கிட்டேன். ஒரு பொண்ணை என் தம்பிக்கே கல்யாணம் செய்து கொடுத்ததால, அவங்களும் எங்க கூடவேதான் இருக் காங்க.
என்னோட ரெண்டு தங்கச்சிகளுக்கும் கல்யாணம் பண்ணி வச்சதோட, அவங்க பசங்களையும் படிக்க வெச்சுக் கிட்டிருந்த நல்ல மனசு என் கணவருக்கு! அவருக்கு அப்புறம் அவங்களை நான்தானே பார்த்துக்கணும்..’’ என்கிற ஜெயந்தியின் வீடு, இப்போதும் அழகான கூட்டுக் குடும்பமாகத்தான் இருக்கிறது.
‘‘அவர் எனக்கு சொந்த மாமா பையன். முதல்ல எங்க அப்பா அவருக்கு ஹோட்டல்தான் வச்சுக் கொடுத்தார். ஆனா, அவரே ஆர்வத்தால தொடங்கின சிமென்ட் பிசினஸ்தான் அவருக்குப் பேர் வாங்கிக் கொடுத்தது. அப்படிப்பட்ட பிசினஸை அவருக்கு அப்புறம் திறமையா நடத்துறதுக்கு ஒரு ஆள்கூட எங்க குடும்பத்துல இல்லாம போனதுதான் பிரச்னையோட ஆரம்பம். கிட்டத்தட்ட ஒரு வருஷம்.. சரியான கவனிப்பு இல்லாததால கடை தடுமாறிடுச்சு. கடையில இருந்து வருமானம் வரலைன்னா வேற என்ன கதி? கார் உட்பட வீட்டுல இருந்த செல்வங்களெல்லாம் ஒவ்வொண்ணா எங்களை விட்டுப் போக ஆரம்பிச்சது. ஆசையா வாங்கி வெச்சிருந்த தங்கம், வெள்ளினு எல்லாமே கரைஞ்சுது. கடை ரொம்பவே நஷ்டத்துல ஓடினதால ஒரு கட்டத்துல கடையை மூடியாக வேண்டிய நிலைமை.
கடையை இழுத்து மூடின நாளை என் வாழ்க்கையில என்னால மறக்க முடியாது. அவர் பார்த்துப் பார்த்துக் கட்டமைச்ச கடைங்கறதால அதை நான் அவராவே பார்த்தேன். அந்தக் கடையைத் திரும்பவும் பழைய ஜோரோட வெற்றிகரமா நடத்தினாதான் அவரோட ஆத்மா சாந்தியடையும்னு முடிவு பண்ணினேன்’’ என்கிற ஜெயந்தி, அந்த முயற்சியில் சந்தித்த சவால்கள் கொஞ்ச நஞ்சமில்லை.
‘‘லட்சியம்னு ஒண்ணு மனசுக்குள்ள வந்துட்டா அது பெரிய பலத்தையும் உற்சாகத்தையும் குடுக்கும்தான். ஆனா, அதை எங்கயாவது ஆரம்பிக்கணுமே.. அதுக்கு நல்ல முதலீடு வேணுமே.. அது கிடைக்குறவரைக்கும் குடும்பத்தை நடத்த ஏதாவது ஒரு தொழில் செய்யலாம்னு முடிவு பண்ணினேன்.
உலகமே தெரியாத ஒருத்தி புதுசா ஒரு தொழில் பண்ணனும்னா எப்படி.. பல பேர்கிட்ட ஆலோசனை கேட்டு, அதோட அடிப்படையில, புடவை பிசினஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். அதுக்கு இருபத்தை யாயிரம் ரூபா தேவைப்பட்டது. அந்தச் சூழ்நிலையிலயும் என் கணவர் சம்பாதிச்சு வெச்சிருந்த நல்ல பேரால தெரிஞ்சவங்க அந்தத் தொகையை கடனா கொடுத்தாங்க. அந்த பிசினஸை ஆரம்பிச்சேன்..'' என்கிறவருக்கு அதில் பெரிதாக ஒன்றும் லாபம் கிடைத்து விடவில்லை.
''எல்லா இடத்துக்கும் கார்ல போய் வந்து, சொகுசா இருந்த எனக்கு அந்தப் புடவை வியாபாரம் பெரிய அனுபவப் பாடமா இருந்துச்சு. வெறுமனே புடவையை வாங்கி, அதை நாலு வீடுகள்ல கொண்டு போய்க் கொடுத்திட்டா அதுக்குப் பேர் புடவை வியாபார மாகிடாதே! எனக்கு அதோட மத்த சூட்சுமங்கள் தெரியல.
பசினா எப்பிடி இருக்கும்னு பக்கம் பக்கமா பேசினாலும் உணர்த்த முடியாது. பட்டினியா இருந்து அதை உணர்ந்தேன். 'புடவை வியாபாரம்னா பரவால்ல.. மத்த வியாபாரம் செய்தா ரொம்ப மட்டமா தெரிவோமோ'னு எனக்குள்ள இருந்த உணர்வைத் தூக்கி எறிய வெச்சுது பசி. 'உண்மையாவும் நேர்மை யாவும் உழைக்கிறதா இருந்தா, எந்த வேலை செய்யறதும் அவமானம் இல்லை'ங்கிற பாடத்தை அது சொல்லிக் கொடுத் துச்சு.
ஒரு பக்கம் புடவை வித்துட்டு, மறு பக்கம் ஊறுகா போட்டேன். எனக்குத் தெரிஞ்ச எல்லா பிசினஸையும் செஞ்சேன்.
எங்க அப்பா ஹோட்டல் தொழில்ல இருந்தவர்ங்கறதால என்னையும் அந்தத் தொழிலையே செய்யச் சொல்லி நிறைய பேர் வற்புறுத்தினாங்க. ‘சரி.. அதையும் பார்த்துடலாமே’னு முயற்சி பண்ணினேன். ஆழம் தெரியாம எதுலயும் இறங்கக்கூடாதுங்கற மிகப் பெரிய பாடத்தை நான் கத்துக்கிட்டது அப்போதான்.

கடை திறந்து மூணாவது நாளே, காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும் ஒருத்தரும் சாப்பிட வரல. எனக்குக் காரணமும் தெரியல. போகப் போக சரியா யிடும்னு பார்த்தா, கடைசியில கடையை இழுத்து மூட வேண்டிய நிலைமை. அதுல பயங்கர அடி எனக்கு! அந்தத் தோல்வியில நான் உடைஞ்சு போய் உட்கார்ந் திருந்தப்ப, 'இனிமே இவ அவ்வளவுதான்.. இவ எங்க அந்த சிமென்ட் கடையைத் திறக்கப் போறா?'னு என் காதுபடவே பேசினாங்க என் சொந்தக்காரங்க.
அத்தனை துயரங்களையும் தாங்கிக்கிட்ட என்னால, அந்த வார்த்தைகளைத்தாங்க சகிச்சுக்கவே முடியல. அப்பதான் உக்காந்து நிறைய யோசிச்சேன். 'எங்க குடும்பத்தை வாழ வெச்ச அந்த பிசினஸ் எப்படியும் எங்களைக் கைவிட்டுடாது'ங்கிற தைரியத்துல, எங்களோட கடைசி சொத்தா இருந்த ப்ளாட்டை வித்து, அதுல வந்த ஒன்றரை லட்ச ரூபாயை வெச்சு எங்க கடையைத் திறந்தேன்..'' சொல்லும்போதே கண்களிலிருந்து கரகரவென வழிகிறது ஆனந்தக் கண்ணீர். புன்னகையோடு கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர் தொடர்ந்தார்..
''கடையைத் திறந்துட்டேனே ஒழிய, ஆரம்பத்துல ரொம்ப சிரமப்பட்டுட்டேன். ரொம்ப நாள் கடையை மூடி இருந்ததால, வழக்கமா நாங்க சிமென்ட் மூட்டை வாங்குற டீலர்ஸ்லாம் மறுபடியும் என்னை நம்பி தர மறுத்துட்டாங்க. அவங்க கிட்ட மறுபடியும் நடையா நடந்து பேசினதுல சில பேர் மட்டும் தர சம்மதிச்சாங்க. அப்போ தொடங்கினதுதான். இதோ.. இந்தப் பத்து மாசமா கடவுள் அனுக் ரஹத்துல நல்லபடியா போய்க்கிட்டிருக்கு..’’ என்றவரின் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி!
''இந்த பிஸினஸை எப்படி கற்றுக் கொண் டீர்கள்?'' என்றால் சிரிக்கிறார்.
‘‘உண்மையைச் சொல்லணும்னா, ஆரம்பத்துல சிமென்ட் பத்தி எனக்கு ஏபிசிடி கூடத் தெரியாது. ஆனா, போகப் போக தொழிற்சாலைக்குப் பயன் படுத்துறது ஃப்ளாக் சிமென்ட், கான்கிரீட் போடணும்னா அதுக்கு 53 கிரேட் சிமென்ட், பூச்சு வேலைக்குனா 43 கிரேட் சிமென்ட்..னு பல விஷயங்களை கத்துக்க ஆரம்பிச்சேன்.
இதெல்லாம் மந்திரத்தால மாங்காய் காய்ச்ச மாதிரி உடனடியா நடந்துடலை. என் கணவர் மேல இருந்த மதிப்பால எங்க ஏரியாவைச் சேர்ந்த ஒரு சிமென்ட் கடையோட பிராஞ்ச் மேனேஜர் இதையெல்லாம் எனக்கு கத்துக் கொடுத்தார்.
முன்னாடியெல்லாம் லோடு அனுப்பினதுக்கு அப்புறம் போய்ப் பணம் வாங்குவேன். ஆனா இப்போ, பணம் கொடுத்த பிறகுதான் லோடு அனுப்புறேன். இந்த மாதிரி சின்னச் சின்ன நெளிவு சுளிவுகள்தான் வியாபாரத்துல பெரிய பெரிய ஓட்டைகளை அடைக்கும். ஓரளவு பிசினஸை புரிஞ்சுக்கிட்டே வர்றதால, இப்போ மாசம் பத்தாயிரம் ரூபா வரைக்கும் வருமானம் வருது..'' என்றவரின் குரலில் இப்போது கூடுதல் மெருகு!

'' 'அம்பத்திரண்டு வயசுல இவளுக்கு என்னடா லட்சியம்'னு சிலர் சொல்றாங்க. ஆனா, ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் பாருங்க.. அவர் இருக்கும்போது கடை எப்படி இருந்ததோ அதே மாதிரி, ஏன்.. அதை விடவும் சூப்பரா இந்தக் கடையை நான் கொண்டு வருவேன்..’’ என்கிற ஜெயந்தியின் கண்களில் மின்னுகிறது சாதிக்கத் துடிக்கும் அக்கினிக் குஞ்சு.


No comments:

Post a Comment