சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Apr 2015

சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.ஆச்சார்யாவை கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞரான பவானி சிங் ஆஜராகி வந்தார். இதனிடையே, பவானி சிங்கை நீக்க கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என்று  அதிரடியாக தீர்ப்பளித்தது.


மேலும், கர்நாடக அரசு 28ஆம் தேதிக்குள் (இன்று) 50 பக்கங்களில் எழுத்துமூலம் வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். அன்பழகன் தரப்பும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு, அவரது வாதத்தை 90 பக்கங்களுக்கு மிகாமல் தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை பரிசீலித்த பின் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.ஆச்சார்யாவை நியமித்து கர்நாடக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது. அவருக்கு உதவியாக சந்தேஷ் சவுட்டாநியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அரசு தரப்பின் எழுத்துபூர்வ வாதங்களை மாலை 4 மணிக்கு ஆச்சார்யா தாக்கல் செய்ய உள்ளார்.
 
ஏற்கனவே ஆஜரானவர் ஆச்சார்யா
ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு,  விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர் ஆச்சார்யா.
அப்போது ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் வழக்கை இழுத்தடிப்பதாக பலமுறை குற்றம் சாட்டிய ஆச்சார்யா,  இவ்வழக்கு விசாரணை துரிதமாக  நடக்க ஆர்வம் காட்டினார். ஆனால் இழுத்தடிப்புகள் தொடர்ந்ததால் மனம் வெறுத்துபோன ஆச்சார்யா ஒருகட்டத்தில் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார்.
அதன் பின்னரே அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி
இந்நிலையில் ஆச்சார்யாவை மீண்டும் அரசு வழக்கறிஞராக கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது ஜெயலலிதா உள்ளிட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக முன்னர் ஆஜரான ஆச்சார்யா, அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகும் அளவுக்கு தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக 22.8.12 ல்  ஜூனியர் விகடனுக்கு அளித்த  பேட்டியில் கூறியிருந்தார். 
அந்த பேட்டி இங்கே...
 
ச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர். 
14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர். அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!
''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''
''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).
''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''
''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''
''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'
''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர். ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட். இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''
''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''
(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!''  
''அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''
''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''

''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''
''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''
''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''
''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''
''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''
''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''
''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''
''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''
''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''
''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''
''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''
''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''
''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''
''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''
''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''

''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.
'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’ என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!


No comments:

Post a Comment