சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Apr 2015

தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒரு ஆச்சரிய சர்வே!

தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் யார்? என்ற கேள்வியுடன் விகடன் டாட் காம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அதிக வாக்குகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 

திமுகவும் சரி...அக்கட்சித்தலைவர் கருணாநிதியும் சரி... ஆளும் கட்சியாக இருக்கும்போது செயல்படுவதைவிட, எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற பெயர் கடந்த காலங்களில் உண்டு. அதிலும் எம்.ஜி.ஆரிடம் ஆட்சியை இழந்து தொடர்ந்து சுமார்  10 ஆண்டுகளுக்கும் மேலாக வனவாசம் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியாக திமுகவை சிறப்பாக செயல்படவைத்து, கட்சியை துடிப்புடன் கருணாநிதி வைத்திருந்தது, தமிழக அரசியல் வரலாற்றில் இன்னமும் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் 1989 ல் ஆட்சியை பிடித்து, 1991 - 1996 மற்றும் 2001 - 2006 ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் சிறப்பான எதிர்க்கட்சித் தலைவராகவே செயல்பட்டு, ஆளும் கட்சியை திமுக திணறடித்த வரலாறுகள் உண்டு. 

ஆனால் 2009 ல் இருந்துதான் திமுக கொள்கை ரீதியாக தடம் புரள தொடங்கியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கின. அதிலும் விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி, தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய முள்ளிவாய்க்கால் படுகொலையை, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் செல்வாக்குடன் திகழ்ந்த திமுக தடுக்க தவறிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள், அதனைத் தொடர்ந்து கூறப்பட்ட 2 ஜி ஊழல் குற்றச்சாட்டுக்கள்தான் திமுகவை இன்னமும் தலை நிமிர விடாமல் செய்வதாகவும், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் தோல்விக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகின்றன. 


இதோ அடுத்த சட்டசபை தேர்தலும் நெருங்குகிறது. வழக்கமாக இதுபோன்று திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் காலங்களில் அடுத்த நிலையில் இருக்கும் எதிர்க்கட்சிகள் பல, திமுக தலைமையில் ஓரணியில் திரண்டு விடும். திமுகவும் ஆளும் கட்சிக்கு எதிராக தேர்தலில் தெம்பாக களமிறங்கும். 

ஆனால் இந்தமுறை கட்சித் தலைவர் கருணாநிதி கூவி கூவி அழைத்தும், எந்த ஒரு கட்சியும் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான அறிகுறி இல்லை. அதிலும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை  அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என கருணாநிதி பகிரங்கமாக அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, அதன்பின்னரும் கூட அவரின் வேண்டுகோளை எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை. போதாதற்கு விட்டகுறை தொட்டகுறையாக ஒட்டிக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் கூட அவர் பக்கம் நிற்கவில்லை. தற்போது அவர் காங்கிரஸ் பக்கம் போகலாமா அல்லது அதிமுக பக்கம் போகலாமா...? என யோசித்துக்கொண்டிருக்கிறார். 

ஒரு காலத்தில் அதிமுகவிடம் அவமானப்பட்டு அல்லது விரட்டிவிடப்பட்டபோதெல்லாம் திமுகவிடம் தஞ்சமடைந்த பாமக கூட இன்று, திமுகவை தீண்டத்தகாத கட்சியாக பார்க்கிறது. திமுக - அதிமுக தவிர்த்து எந்த கட்சியும் எங்களுடன் வரும் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் அதன் தலைவர் ராமதாஸ்.
இந்நிலையில் மீத்தேன் திட்ட பிரச்னை, தேனி நியூட்ரினோ ஆய்வு திட்ட எதிர்ப்பு, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிரான குரல்கள், தமிழக மின்வாரியத்தில் நடைபெறுவதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள், உடன்குடி மின் திட்டம் ரத்தான பிரச்னை என எந்த பிரச்னையாக இருந்தாலும், முதல் அறிக்கை ராமதாஸிடமிருந்துதான் வருகிறது. 

அதிலும் மின்வாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்த பாமக, அடுத்ததாக தமிழக அரசு இணைய தளங்களில் ஜெயலலிதா இன்னமும் முதல்வராகவே சித்தரிக்கப்பட்டு, அவரது புகைப்படம் இருப்பதையும், தமிழக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், நிதி நிலையின் அறிக்கையின் ஒவ்வொரு வார்த்தையும், சொல்லும் 'அம்மா'வின் ( ஜெயலலிதா) ஆலோசனையின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டி, பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கு மாறாக நடந்துகொண்டதாக கூறி அதிமுக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் ஒரு மனுவை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கு மனு அனுப்பி உள்ளது. 

தற்போது உடன்குடி மின் திட்டம் ரத்தான பிரச்னையையும் பாமக தீவிரமாக எடுத்துக்கொண்டு கொடுக்கும் குடைச்சல்தான் அதிமுக அரசுக்கு தீரா தலைவலியாக உருவெடுத்துள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதியும் இத்தகைய பிரச்னைகளை கையில் எடுத்தாலும், கடந்த காலங்களை போன்று முதல் குரலாக வரவில்லை. போராட்டக்களத்திலும் முன்னணியில் இல்லை. அதிலும் மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சி காலத்தில்தான் ஒப்புதல் கொடுக்கப்பட்டது என்பதால், இந்த பிரச்னையில் திமுகவின் எதிர்ப்பு சுரத்தில்லாமல் போனது மட்டுமல்லாது, 'உங்கள் ஆட்சி காலத்தில்தானே ஒப்புதல் அளித்தீர்கள்' என்று எதிர்ப்பு, அக்கட்சிக்கு எதிராகவே பூமராங்காக திரும்பியது. 

திமுகவின் இந்த மந்த நிலைக்கு கருணாநிதியின் இரு மகன்களால் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்னை மற்றும் 2ஜி ஊழல் வழக்கால் மக்களின் நம்பிக்கையை இழந்தது, பலவீனமடைந்துள்ள தலைமை போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

இது ஒருபுறம் இருக்க அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான தேமுதிக தலைவர் 
விஜயகாந்தின்செயல்பாடுகளோ, " நான் ஒரு மாதமாகவே பத்திரிகைகளை படிக்கவோ, 
தொலைக்காட்சியில் செய்திகள் எதனையும் பார்க்கவோ இல்லை. எனது மகனின் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருந்தேன்" என்று சொல்லக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது. 
இந்நிலையில்தான் தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் யார்? கருணாநிதியா, ராமதாஸா அல்லது  விஜயகாந்தா என்ற கேள்வியுடன், விகடன் டாட் காம், வாசகர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. 


இதில் ஆச்சரியப்படும் விதமாக ராமதாஸ் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். ராமதாஸுக்கு ஆதரவாக 48 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. அவருக்கு அடுத்தபடியாகத்தான் திமுக தலைவர் கருணாநிதி 42 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், 10 சதவீதம் வாக்குகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், பெரிய கட்சிகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது!


No comments:

Post a Comment