சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Apr 2015

திருவண்ணாமலை டு பாளையங்கோட்டை

ப்பாடா!
முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தில் ஒருவழியாக முன்னாள் அமைச்சரும் கலசப்பாக்கம் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுமான ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியை கைதுசெய்துவிட்டது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.
அவரோடு வேளாண்மை பொறியியல் துறை முதன்மைப் பொறியாளர் (பொறுப்பு) செந்திலும் கைதாகி உள்ளார். முத்துக்குமாரசாமி மரணத்துக்கு நீதிகேட்டு போராடி வந்தவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இப்போதுதான் நிம்மதி பிறந்துள்ளது!
தற்கொலையும் தமிழக அமைச்சரும்!
நெல்லை வேளாண்மைத் துறையில் காலியாக இருந்த 7 தற்காலிக ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களை வேளாண் பொறியாளரான முத்துக்குமாரசாமி தேர்வு செய்து பணி நியமன ஆணைகளை அனுப்பினார். ஆனால், ஒவ்வொரு பணி நியமனத்துக்கும் மூன்று லட்சம் ரூபாய் வீதம் சிலர் பணம் பெற்றுக்கொண்டனர். அவர்கள் தாங்கள் விரும்பிய நபர்களை வேலையில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நேர்மையான அதிகாரியான முத்துக்குமாரசாமி மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் உயர் அதிகாரிகளிடம் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. உள்ளூர் பிரமுகர்கள் சிலரும் தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்தனர். தொடர்ந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக தனது வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஆறரை லட்சம் ரூபாயை எடுத்து அதனை கொடுத்து பிரச்னைக்குத் தீர்வு காண அவர் முயன்றுள்ளார். அதனையும் ஏற்க மறுத்ததுடன் உள்ளூர் ஆளும் கட்சியினரை வைத்து, அவரை அடித்து அசிங்கப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்த முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி 20-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தை சாதாரண தற்கொலை என மூடி மறைக்கும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டது. நேர்மையான அதிகாரிக்கு ஏற்பட்ட இந்த துர்பாக்கிய நிலைமையை வெளிப்படையாக அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

ஜூ.வி வெளியிட்ட தொடர் கட்டுரைகள்!
முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன, அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்று இந்த விவகாரத்தை முழுமையாக அலசி கடந்த 04-03-2015 தேதியிட்ட இதழில், ‘அதிகாரி தற்கொலை.. அமைச்சரைச் சுற்றும் சந்தேக வலைகள்?’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக ஜூ.வி-யில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன் பின்னரே, இந்த வழக்கு அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன் பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்தார். அதனால், அ.தி.மு.க-வில் அவர் வகித்துவந்த திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. மறுநாளே வேளாண்மைத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி 11-03-2015 தேதியிட்ட இதழில், ‘அக்ரி’ கல்தா... சாட்டை எடுத்த ஜெ.’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டோம்.

‘அக்ரி’ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி இருந்தோம். இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தவே திணறியது. அதனால் முத்துக்குமாரசாமி மரணத்தின் பின்னணியில் இருப்பவர்கள் தப்பும் நிலைமை உருவானது.  
15-03-2015 தேதியிட்ட இதழில், ‘மறைக்கப்பட்டதா அதிகாரிகள் மரணங்கள்?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டோம்.

முத்துக்குமாரசாமி ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்த பின்னர், அவரது பைக்கை வழக்கில் ஆவணமாக சேர்ப்பதற்குப் பதிலாக, பைக் காணாமல் போய் விட்டது’ என போலீஸார் அவரது குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு பைக்கை மறைத்துவிட்டனர். இதுகுறித்தும், முத்துக்குமாரசாமியுடன் செல்போனில் உரையாடியவர்கள் பட்டியலையும் அவருடன் அடிக்கடி பேசியவர்கள் பற்றியும் 18-03-2015 தேதியிட்ட இதழில் ‘மர்மமான பைக்.. டெலிபோன் சீக்ரெட்.. தடுமாறும் சி.பி.சி.ஐ.டி போலீஸ்!’ என்கிற தலைப்பில் எழுதினோம். நாம் தொலைபேசி பட்டியலை வெளியிட்ட பின்னரும் போலீஸார் விசாரணையில் அக்கறை காட்டவில்லை. இதனை அடுத்து, 22-03-2015 தேதியிட்ட இதழில் ‘காட்டிக் கொடுக்குமா பிப்ரவரி அழைப்புகள்? சிக்கலில் நெல்லை பிரமுகர்!’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். தொடர்ந்து, 25-03-2015 தேதியிட்ட இதழில் ‘தப்புகிறார்களா நிஜக் குற்றவாளிகள்? - திணறும் சி.பி.சி.ஐ.டி’ என்று எழுதியிருந்தோம்.
29-03-2015 தேதியிட்ட இதழில், ‘என்னை தப்பு செய்யச் சொல்றாங்க! மனைவியிடம் கலங்கிய முத்துக்குமாரசாமி!’ என்ற தலைப்பில் அவரது மனைவி சரஸ்வதியின் கருத்தை வெளியிட்டு இருந்தோம். முத்துக்குமாரசாமி முறைகேடாக பணம் சேர்த்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாகவும் அது சம்பந்தமாக வருமானவரித் துறை விசாரித்ததாகவும் செய்தி பரப்பப்பட்டது. இதில் உள்ள உண்மையை அம்பலப்படுத்தி ஏப்ரல் 1-ம் தேதியிட்ட இதழில் ‘தற்கொலையை திசைதிருப்பும் தந்திரங்களைச் செய்வது யார்? - விமர்சன வளையத்தில் சி.பி.சி.ஐ.டி!’ என கட்டுரை வெளியிட்டோம். இந்த நிலையில், நெல்லையில் நடந்த உண்ணாவிரதத்தின்போது உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் இந்த வழக்கை திசைதிருப்பும் எண்ணத்துடன் ஒரு கடிதத்தை கூட்டத்தில் வீசிவிட்டுச் சென்றனர். அதுபற்றி ஏப்ரல் 5-ம் தேதியிட்ட இதழில், ‘பால்பாக்யா நகர் வீட்டில் வைத்து அடித்தார்கள்!’ -முத்துக்குமாரசாமி சம்பவத்தைச் சொல்லும் மர்மக் கடிதம்!’ என்கிற தலைப்பில் விரிவாகவே எழுதி இருந்தோம்.

அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில், ‘ஒரு தற்கொலை சம்பவத்தை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இழுத்தடிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்!’ என ஆதங்கமாகக் குறிப்பிட்டு இருந்தோம். அத்துடன், இதுவரையிலும் இந்த வழக்கில் பல ஆதாரங்களை நாம் அம்பலப்படுத்தியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரையின் முடிவில், ‘இதில் தொடர்புடைய அந்த நபரையும் பத்திரிகைகள்தான் கண்டுபிடித்து தர வேண்டுமா?’ எனக் கேட்டிருந்தோம். உஷாரானது போலீஸ். உண்மையான நபரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது!
கூட்டுச்சதியும் ஊழலும்!
வேளாண்மைத் துறையின் முன்னாள் அமைச்சர் ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியும் அந்தத் துறையின் தலைமைப் பொறியாளர் செந்திலும் ஏப்ரல் 5-ம் தேதி இரவில் போலீஸ் விசாரணைக்குள் வந்தார்கள். இந்த செந்திலைப் பற்றியும் நாம் ஏற்கெனவே எழுதி உள்ளோம். ‘கடைசி போன் செய்தது செந்திலா?’ என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டது. நெல்லையில் இருந்து முத்துக்குமாரசாமியை  சென்னைக்கு வரவைத்து மிரட்டியது இவர்தான் என்றும் சந்தேக ரேகை பரவி வருவதைச் சொல்லியிருந்தோம். அந்த செந்திலைத்தான் சி.பி.சி.ஐ.டி முதலில் அமுக்கியது. ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி நெருக்கடி கொடுத்ததை செந்தில் வாக்குமூலமாகச் சொல்லிவிட்டார் என்று சொல்கிறார்கள். அதன் பிறகு ‘அக்ரி’ அழைக்கப்பட்டார். இரவுவரை இருவரையும் விசாரித்துவிட்டு பின்பு, அதிகாலை ஒரு மணிக்கு கைதுசெய்ததாக அறிவித்தனர். அதே சூட்டோடு இருவரையும் நெல்லைக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருவரையும் தனித்தனி வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சி.பி.சி.ஐ.டி போலீஸார் சென்னையில் இருந்து புறப்பட்டனர். வழி நெடுகிலும் போலீஸார் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் தூக்கம் வருவதாகத் தெரிவிக்கவே, வாகனத்தில் அமர்ந்தபடியே தூங்கியுள்ளார். மதியம் 1.35 மணிக்கு நெல்லை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவர் வருவது தெரிந்திருந்தும் உள்ளூர் கட்சிக்காரர்களோ அல்லது கட்சி வக்கீலோ அங்கு வரவே இல்லை.
நீதிமன்றத்தில் அவர் சார்பாக மனுத் தாக்கல் செய்த வழக்கறிஞர் ரிஸ்வானா, ‘‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு பிளட் பிரஷர் இருக்கிறது. டென்ஷன் உள்ளது. அவரது உடல்நிலை தற்போது சரியில்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்’’ என்று சொன்னார். அதை நிராகரித்த நீதிபதி, ‘சிறையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் சிறை நிர்வாகம் அது பற்றி முடிவு செய்துகொள்ளலாம்’ என தெரிவித்துவிட்டார்.
பின்னர் நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் அமைச்சர். தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அத்துடன் அவர் வழக்கறிஞருக்கு படித்துள்ளார். அதனால் அவருக்கு சிறையில் சிறப்பு வகுப்பு ஒதுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். அதனை நீதிபதி செந்தில்குமார் ஏற்றுக்கொண்டார். இதனால் 2.05 மணிக்கு அவரையும் பொறியாளர் செந்திலையும் சிறையில் அடைத்தனர்.
முத்துக்குமாரசாமியை தற்கொலைக்குத் தூண்டியதாக (306), கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக (120பி) மற்றும் லஞ்ச ஊழல் தண்டனை சட்டப்பிரிவு 7 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இருவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இருவரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மட்டுமே இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்பதால், அதற்கான நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் இறங்கி உள்ளனர்.
‘‘தினமும் நாங்க செத்துட்டு இருக்கோம்!”
 ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி கைதானது பற்றி முத்துக்குமாரசாமியின் மகன் சேதுராமனிடம் கேட்டோம். ‘‘யார் மீது இனி நடவடிக்கை எடுத்தாலும் இழந்துவிட்ட எனது தந்தையைத் திருப்பி கொடுக்கப் போவதில்லை. நாங்கள் அன்பான குடும்பமாக இருந்தோம். இப்போது எங்களது குடும்பத்தின் நிம்மதியே போய்விட்டது என தந்தை கடன் வாங்கி ஒரு சிறிய வீட்டை பார்த்துப்பார்த்து ஆசையாகக் கட்டினார். அந்த வீட்டில் அவரும் நீண்ட காலம் இருக்கவில்லை. எங்களாலும் இருக்க முடியவில்லை. நெல்லையில் எங்களுக்கு நிம்மதி இல்லை. அச்சத்துடனேயே வாழ வேண்டியிருக்கிறது. நானும் எனது அண்ணனும் சென்னையில் வேலை செய்கிறோம். நாங்களும் அதிக நாட்கள் விடுப்பு எடுக்க முடியாது. அதனால் நான் சென்னைக்கு வந்துவிட்டேன். எனது அம்மாவும் அண்ணனும் தூத்துக்குடியில் எங்கள் மாமா வீட்டில் இருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் அவர்களும் சென்னைக்கு வந்துவிடுவார்கள்.

எங்களுக்கு எந்த அரசியலும் கிடையாது. ஆனாலும், நிறைய அரசியல் கட்சியினர் எங்களுக்காகப் பேசுகிறார்கள். அவர்களுக்கும் உங்களை மாதிரியான நேர்மையான ஊடகங்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஒரு குடும்பத்தில் இதுமாதிரியான அச்சம், பதற்றம் ஏற்படுமானால், எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை அனுபவத்தில் தினமும் உணர்கிறோம். மனம் வலியெடுக்கிறது. எங்கள் நிம்மதியே சீர்குலைந்துவிட்டது. இதற்கு யார் காரணம் எனபதெல்லாம் எனக்குத் தெரியாது. ரணமும் வலியும் மட்டும் ஆறாமல் அப்படியே மனதில் இருக்கிறது. எனது அம்மா இந்த வேதனைமிக்க சம்பவத்தில் இருந்து மீளவே இல்லை. அவரை எப்படித் தேற்றப் போகிறோம் என நினைத்தாலே அழுகை வருகிறது. தினமும் நாங்க செத்துக்கிட்டு இருக்கோம். இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் சம்மதமே!’’ என்றபடியே கதறி அழுதார்.
அடுத்து யார்?
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் நெல்லையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரபலங்கள் பலரும் தங்களை இந்த வழக்கில் இருந்து இனி விடுவித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். அதனால், தண்ணீர்ப் பந்தல் திறப்பது உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் வழக்கம்போலவே செயல்படுகின்றனர். இதுபற்றி உள்ளூர் கட்சிக்காரர் ஒருவர் நம்மிடம், ‘‘முத்துக்குமாரசாமி வழக்கு விசாரணையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோருக்கு இணையாக உள்ளூர் அ.தி.மு.க-வினர் சிலருக்கும் தொடர்பு இருக்கிறது. நெல்லை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உள்ள பெண் அலுவலர் ஒருவர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவர் மூலமாக அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு முத்துக்குமாரசாமியின் நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 7 டிரைவர்கள் நியமனத்தை ஒரு மாதமாக ஆர்டர் போட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட அந்த பெண் அலுவலரும் காரணம். உள்ளூர் அ.தி.மு.க-வினர் சிலருடனும் அந்த அலுவலருக்கும் தொடர்பு இருந்தது. கட்சிக்காரர்கள் சிலர், அலுவலகத்துக்கே நேரில் சென்று மிரட்டிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இதை எல்லாம் சி.பி.சி.ஐ.டி விசாரித்தால், மேலும் பல அதிர்ச்சித் தகவல் வெளிவரும்’’ என்றார்.
அடுத்தது யார் என்பதே அனைவரின் கேள்வி?

‘அக்ரி’ ஜாதகம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எலத்தூர் கிராமம்தான் `அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊர். அப்பா சுந்தரேச உடையார் தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி ஆரம்பித்தபோது அ.தி.மு.க-வில் ஐக்கியமானவர். எம்.ஜி.ஆர் அவருக்கு ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்ததுடன், எம்.எல்.ஏ சீட்டும் கொடுத்தார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. 1978 முதல் 1982-ம் ஆண்டு வரை  கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (அக்ரி) முடித்துவிட்டு, 1983-ம் ஆண்டு வேளாண்மைத் துறையில் வேளாண்மை அலுவலராக வேலையில் சேர்ந்தார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பல பிரிவுகளில் 88-ம் ஆண்டு வரை வேலை பார்த்தார். கடைசியாக புதுப்பாளையத்தில் எண்ணெய் வித்துப் பிரிவில் வேலை பார்க்கும்போது, கடலை விதை கொள்முதலில் ஊழல் எனப் பிரச்னைகள் கிளம்பவும் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு அரசியலுக்கு வந்தார்.அரசியலில் நுழைந்த அடுத்த ஆண்டே அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. ஜெ. அணி சார்பில் சேவல் சின்னத்தில் போளூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அடுத்து 91-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு முதலில் கவுன்சிலர் ஆனார். பின்னர் கலசப்பாக்கம் யூனியன் சேர்மனாக இருந்தார்.

2006-ம் ஆண்டு கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார். 2011-ம் ஆண்டு தேர்தலில் கலசப்பாக்கம் தொகுதியில்  வெற்றி பெற்றதன் மூலமாக அமைச்சரானார். உணவுத் துறை அமைச்சர், கல்வித் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர் பதவிகளில் 8 மாத காலம்  இருந்தவரின் பதவி பிடுங்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் எம்.எல்.ஏ-வாக மட்டும் இருந்தவருக்கு,  மீண்டும் அமைச்சர் பதவி தரப்பட்டது.  வேளாண்மைத் துறை அமைச்சராக்கப்பட்டார்.

அதுவும் அர்ப்ப காலத்தில் பறிபோய்விட்டது!


No comments:

Post a Comment