கிரானைட் ஊழலை விசாரிக்கச் சொல்லி என்றைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டதோ அன்றிலிருந்து இன்று வரை தொடர் சிக்கல்களுக்கு பஞ்சமில்லை சகாயம் குழுவுக்கு. லேட்டஸ்டாக பார்த்தசாரதியின் மரணம்!
சகாயம் குழுவுக்கு பறக்கும் விமானம் மூலம் படம் எடுத்துக் கொடுத்தவர் ‘பிளைட்’ பார்த்தசாரதி. கடந்த 10-ம் தேதி காலை சிவகங்கை சாலையில் தனது வீட்டுக்கு அருகே உள்ள வீரபாஞ்சான் என்ற இடத்தில் சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தில் கார் மோதியபடி ரத்தவெள்ளத்தில் கிடந்தார் பார்த்தசாரதி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பார்த்தசாரதி உயிர் பிரிந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களும் சகாயம் குழுவினரும் நினைக்கிறார்கள்.
பார்த்தசாரதியின் சகோதரர் ரெங்கராஜ், “எங்க சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் முப்பையூர் கிராமம். சென்னையில் டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் படித்தார் பார்த்தசாரதி. படித்து முடித்ததும் மதுரையில் பிலிப்ஸ் கம்பெனியில் சர்வீஸ் சென்டர் வைத்து வேலை செய்து வந்தார். வீட்டில் இருக்கும்போது ஏதாவது ஆராய்ச்சி செய்தபடியே இருப்பார். டி.வி ஓடும்போது வீட்டில் இருக்கும் தொலைபேசி ஒலித்தால் டி.வி தானாக மியூட் ஆகும் சர்க்யூட்டை கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்பை பிலிப்ஸ் நிறுவனம் இவரிடம் வாங்கி அவர்களின் டி.வி-க்களுக்குப் பொருத்தியது. அதன் பிறகு குட்டி ரக விமானங்களை வடிவமைக்கும் துறைக்குள் நுழைந்தார். ஏகப்பட்ட குட்டி விமானங்களை வடிவமைத்தார். விமானங்கள் மீது அவருக்கு அளவுகடந்த காதல் உண்டு. அதனால்தான் அவரின் மூத்த மகள் பூர்ணாவை விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்த்தார். இளைய மகள் ஆதிலட்சுமியை ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். அவரது மரணத்தை எங்களால் ஜீரணிக்க முடியவே இல்லை!’’ என்று கலங்கினார்.
பார்த்தசாரதியின் உறவினர்கள் நம்மிடம், ‘‘காரைக்குடியில் பொறியியல் படிக்கும் மாணவனுக்கு ஏரோ டைனமிக் குறித்த புராஜெக்ட் செய்து கொடுத்தார் பார்த்தசாரதி. விபத்து நடந்த இரவு விடிய விடிய தூங்காமல், வேலை செய்து கொடுத்துவிட்டு அதிகாலை ஐந்து மணிக்கு அந்த மாணவரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு வரும்போதுதான் விபத்து நடந்திருக்கிறது.
விபத்து நடந்த இடத்தில் இருந்த தனியார் பள்ளி கண்காணிப்பு கேமராவில் அவர் விபத்து நடந்த இடத்தை கடந்த நேரம் 5.21 மணி என்று பதிவாகி இருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கண்காணிப்பு கேமரா இருந்த இடம் சுமார் 50 மீட்டர் தூரம். அங்கிருந்து பார்த்தசாரதியின் வீடு சுமார் 200 மீட்டர் தூரம்தான். ஆனால், 5.25 மணிக்கு பார்த்தசாரதியின் வீட்டில் வந்து ஐந்து நபர்கள் விபத்து குறித்து தகவலை சொல்லியிருக்கிறார்கள்.
உடனடியாக அவரது மகள் பூர்ணா சம்பவ இடத்துக்கு ஓடிப்போய் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் விபத்து எப்படி நடந்து, என்ன நடந்தது என்று பூர்ணா கேட்க பார்த்தசாரதி எதுவும் சொல்லாமல் ‘வலிக்குதும்மா...’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார். அவருக்கு கார் ஓட்டுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் இல்லை. அதனால் எங்களுக்கு இது விபத்துதானா என்று சந்தேகமாக இருக்கிறது” என்கிறார்கள்.
மேலும் அவர்கள், “சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு வேகத்தடை போடப்பட்டு இருக்கிறது. கார் வலதுபுறம் உள்ள மரத்தில் திசை மாறிச்சென்று மோதியிருக்கிறது. கார் கண்ணாடி ஓர் இடத்தில் மட்டும் குறிவைத்து தாக்கியதுபோல உடைந்து இருக்கிறது. விபத்து நடந்தால் கார் கண்ணாடி முழுமையாகக் கீறல் விழுந்து உடையும் அல்லது சிதைந்து தொங்கும். அவரின் முன் தலை மோதி கண்ணாடியில் அவரது தலை முடி இருக்கிறது. அவருக்கு முன் வழுக்கை தலை என்பதால், கார் வேகமாகப் போய் மோதினாலும் முடி ஒட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. முதன் முதலில் விபத்து நடந்த தகவலை பார்த்தசாரதியின் வீட்டில் சொன்ன அந்த ஐந்து நபர்கள் யார்? விபத்து நடந்தால் அந்த இடத்தில் ஒருவர்கூட துணைக்கு இல்லாமல் ஒட்டுமொத்தமாகவா சென்று தகவல் சொல்லுவார்கள்? இதெல்லாம் நம்பும்படி இல்லை!’’ என்று சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள்.
பார்த்தசாரதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய சகாயம், விபத்து நடந்த இடத்துக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து, ‘‘காவல் துறை இந்த மரணம் பற்றித் தீவிரமாக விசாரிக்க வேண்டும்!’’ என்றார்.
இறந்த பார்த்தசாரதி கண்களை தானமாகக் கொடுத்து இருந்தார். அவரது மரணம் இருள் சூழ்ந்ததாக இருக்கிறது!
No comments:
Post a Comment