சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Apr 2015

பாராட்டுங்கள், கேலி செய்யாதீர்கள், மன்னிப்புக் கேளுங்கள்!


'யிரம் காலத்து பயிர்' என்று சொல்லப்படும் திருமணத்தின் ஆயுள் ஆறு வாரங்களை கூட தாண்டுவதில்லை. அடிச்சாலும் புடிச்சாலும் ஒண்ணா சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை மறைந்து, ஒரிரு வார்த்தைகளால் கூட ​‌விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறுபவர்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். 
குடும்பம் என்ற சூழல் மறைந்து, தனிமையான வாழ்க்கையில் தள்ளப்படுபவர்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே வருகிறது. பிடிக்கவில்லை எனில், ஒரே அடியாக உதறிவிட்டு செல்வதற்கான காரணங்கள், தீர்வுகள் பற்றிய அனுபவங்களை அலசுகிறார் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் தலைமை மனநல மருத்துவர் அசோகன்.

"இருவர் இணைவதற்கும், பிரிவதற்கும் காரணங்கள் அற்புதமானதாகவோ, அற்பமானதாகவோ இருக்கக் கூடும்" - இப்படி சொன்னது எழுத்தாளர் ஜெயகாந்தன்.  மனம் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று. 'நல்லா சிரிச்சுட்டு இருந்தார். திடீர்னு ஏன் கோபப்படுக்கிறார்னு தெரியலையே' என்று சொல்வோம் இல்லையா..? அப்படி நொடிக்கு நொடிக்கு மாறக் கூடியது மனம்.
 

விவாகரத்து கேட்பவர்களில் காதலித்து திருமணம் செய்தவர்களே அதிகம்


நமக்கு பிடிக்காத எந்த குணமும் நாம் காதலிக்கும் நபரிடம் இல்லை. அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் எல்லாமும் நாம் காதலிப்பவரிடம் இருக்கிறது. இவற்றைதான் காதலிக்க காரணம் என்று அநேக பேர் சொல்வார்கள். காதல் என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்டது. அதில் காதலிப்பவர், எண்ணத்துக்குகூட மதிப்பு தர தேவையில்லை. ஆனால் கல்யாணம், சூழல், சமூகம், கலாச்சாரம், குடும்பம் என்று பலவற்றுடன் சம்பந்தப்பட்டது. அதில் பிறர் எண்ணங்களுக்கு மதிப்பளித்தே ஆகவேண்டும்.

'என் விருப்பத்துக்கு ஏற்பதான் நான் உடை அணிவேன், யாருக்கும் அடிபணிய மாட்டேன், தினமும் குடித்துவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவேன்' என்றெல்லாம் அடம்பிடிக்ககூடாது. காதலிக்கும்போது எதிர்பாலினத்தை ஈர்க்க, குஷிப்படுத்த எல்லா வித்தையையும் இறக்குவோம். அதற்கு அவர்களை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற மன துடிப்பே காரணம். அதை கல்யாணத்துக்கு பிறகும் எதிர்பார்க்கக்கூடாது. 'அன்று எனக்காக என்னவெல்லாம் செய்தாய் இப்போது இப்படி இருக்கிறாயே' என்று கேட்பது மிகவும் தவறு. அது நினைவுகள். அவற்றை எண்ணி மகிழ்ந்திருக்கலாம். 

அதுபோல், தினம் தினம் நடக்க வேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். இந்த தவறான எண்ணங்கள் தலைதூக்கும் போதே அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது. சிலர் காதலிக்கும் போது நிறைய பொய்களை சொல்லியிருப்பார்கள். அது திருமணத்துக்கு பிறகு வெளிப்பட்டால் நிச்சயம் தர்மசங்கடம்தான். ஆகையால் நிறைகளைப் பேசுவதற்கு முன், குறைகளைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக பேசிவிடுவது நல்லது.
 
நேரம் ஒதுக்குங்கள்: 

கவுன்சலிங்கின்போது, ஒரு பெண் ''என் கணவர் என்னுடன் அதிக நேரம் செலவழிக்க மாட்டேன்கிறார்'' என்று கவலை தெரிவித்தார். கணவரிடம் விசாரித்தால், ''எல்லா ஞாயிறுகளிலும் குடும்பத்துடன் ஹோட்டல்கள் செல்வோம், சினிமா செல்வோம்'' என்றார். இவர்களுக்குள் பிரச்னை என்னவெனில் வெளியில் செல்லும்போது அங்கு இருப்பவர்களோடு  பேசுவதைவிட இவர்களுக்குள் பேசுவது குறைவு. 

நாம் நம் துணைக்காக எவ்வளவு நேரம் செலவிடுக்கிறோம் என்பதைவிட எந்த வகையில் அந்த நேரத்தை செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம். இருவருக்கும் பிடித்தமான விஷயங்களைப் பற்றி அதிகம் உரையாடுங்கள். அந்த பிடித்தமான விஷயம் புத்தகம், நாடகம், தொழில்நுட்பம், சினிமா என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி, இன்று என்ன வேலைச் செய்தேன் என்பதில் தொடங்கி மேனேஜரிடம் என்ன திட்டு வாங்கினேன் என்பது வரை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தூங்குவதற்கு முன் கொஞ்ச நேரம் ஒதுக்கி, உரையாடுவதற்காக மட்டுமே செலவிடுங்கள். (அப்போது சண்டைகள் எதுவும் வேண்டாம்) சில பெண்கள் "நான் முக்கியமா இல்லை... வேலை முக்கியமா?" என்று சண்டை பிடிப்பார்கள். அவர்கள் யாரும் வேலையில்லாத ஆணோடு நிச்சயம் வாழ மாட்டார்கள். '' நான் உனக்காக, நம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகதான் வேலை செய்கிறேன்''  என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துசொல்லுங்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, எவ்வளவு வயது கடந்திருந்தாலும் சரி, தினமும் தூங்க போவதற்கு முன்பு  மனைவிக்கென நேரம் ஒதுக்குவதை குறைத்துவிடாதீர்கள்.
 
  பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் வரும் பிரச்னை

பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் பிரச்னை வருவதற்கு முக்கிய காரணம் எதிர்பார்ப்புகளும், கனவுகளும்தான். நான் டாக்டருக்கு படித்தவன். எனக்கு பத்தாவது வரை படித்த பெண்ணை திருமணம் செய்துவிட்டார்கள் என்பார்கள் சிலர். 'எனக்கு கணவராக வருபவர் நன்றாக ஆங்கிலம் பேசுவார், நன்றாக கார், பைக் ஓட்டுவார், பெண்களிடம் அதிகம் பேச மாட்டார் என்று நினைத்திருந்தேன்' என்பார்கள் சிலர். 'குண்டாக இருக்கிறார், பல்லு எடுப்பாக இருக்கிறது, கருப்பாக இருக்கிறார் இவரோடு வெளியில் செல்லவே அசிங்கமாக இருக்கிறது' என்பார்கள் சிலர். இவை, சமூகம் நம்மைப் பார்த்து என்ன சொல்லும் என்பதை மனதில் கொள்வதால் ஏற்படும் பிரச்னை.  

நாம் நமக்காக வாழ்கிறோம். சமூகம் என்ன நினைக்கும் என்பதை கவனத்தில் கொள்வதற்கு முன் உங்களை கல்யாணம் செய்து கொண்டவரின் மனநிலை பற்றி யோசியுங்கள். நாம் அழகாக இருக்கிறோம், நம்மிடம் இவ்வளவு திறமையிருக்கிறது என்பது நினைவில் இருப்பது போல் நாம் பட்ட அவமானங்களையும் நினைவில் கொள்வது நல்லது. அது, நம் கால்களை எப்போதும் தரையில் வைத்துகொள்ள உதவும். எவ்வளவு பெரிய சண்டையானலும் சரி அதை தீர்த்து வைக்க, மூன்றாம் நபரின் துணையை நாடாதீர்கள். அது பெற்றோராக இருந்தாலும் சரி. உங்களைப் பற்றிய ரகசியங்கள் உங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும்.
மீறி வெளியில் தெரிந்தால் அது உங்கள் மீதான நம்பிக்கையை குறைத்துவிடும். மகிழ்ச்சி, கோபம் இவையெல்லாம் மற்றவர்களால் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் திருப்தி நம் மனதில் இருந்து வந்தால்தான் உண்டு.
 
சினிமாக்கள் உண்மையில்லை


எனக்கு ஷாரூக்கான் போல் கணவன் வேண்டும், பிரியங்கா சோப்ரா போல் மனைவி வேண்டும், அலைபாயுதே படத்தில் வருவது போல் எங்கள் திருமண வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நினைப்பது எல்லாம் சுத்த முட்டாள்தனம். பிறர் வாழும் வாழ்க்கை எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். ஷாரூக்கான் மனைவியிடம் கேட்டால்தான் தெரியும் அவரிடம் எவ்வளவு குறைகள் இருக்கிறது என்று. 

உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ராஜா, ராணி. சினிமாவில் நடப்பதெல்லாம் யதார்த்த வாழ்க்கையிலும் நடக்கும் என்று எண்ணுவது தவறு. உங்கள் கனவுகளோடு சினிமாக்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாதீர் கள். யதார்த்தம் என்பது சினிமாக்களில் வருவதைக் காட்டிலும் நிறைய மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.  
 
பாராட்டுங்கள், கேலி செய்யாதீர்கள், மன்னிப்புக் கேளுங்கள்


உங்கள் துணையைப் பிறர் முன் கேலி செய்ய வேண்டாம். அது அவர்களுக்கு பெரும் வலியைத் தரும். பல தம்பதிகள் பிரிய இதுவே காரணம். அவர்களை யாரிடமும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர். எல்லாருடைய மனமும், சின்ன பாராட்டுக்குதான் ஏங்கி கிடக்கிறது. அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயத்தையும் பாராட்டத் தவறாதீர்கள். 'எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகிறது. இன்னும் என்ன பாராட்டிக்கிட்டு?' என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.

நான்கு வயது சிறுவன் தொலைக்காட்சியில் நன்றாக பாடினால் பாராட்டுக்களை குவிக்கின்றோம். நம்முடன் இவ்வளவு காலம் வாழ்பவர்களை திரும்பி கூடப் பார்ப்பதில்லை. தொலைக்காட்சியில் வருபவர்களை பாராட்ட நிறைய பேர் இருக்கிறார்கள். நம்முடன் வாழ்பவரை நாம்தான் பாராட்ட வேண்டும். பேருந்தில் பயணிக்கும்போது தெரியாமல் யாராவது காலை மிதித்துவிட்டால் உடனடியாக மன்னிப்பு கேட்டுகிறோம். ஆனால் தவறு என தெரிந்தும் கணவன் மனைவிக்குள் ஏன் மன்னிப்பு கேட்க தவறுகிறோம். மன்னிப்பு கேட்பதால் யாருடைய மரியாதையும் குறைந்துவிடாது. மாறாக அதிகரிக்கும்.   
 
சமூக வலைத்தளங்களை முறையாக பயன்படுத்தவும்
சமீபத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி மருத்துவமனைக்கு வந்தார். ஃபேஸ்புக் சாட்டில் ஒருவரிடம் மயங்கி தன் கணவனை விவாகரத்து செய்யும் அளவு சென்றதாக சொல்லி படபடத்தார். எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அவரிடம், 'அப்படி என்ன பேசினார்' என்று கேட்டேன். தினமும் 'என்ன சமையல், இப்போது என்ன செய்கிறாய்' என தொடங்கி அந்தரங்க விஷயங்கள் வரை ஒருநாளைக்கு கிட்டதட்ட 300 குறுஞ்செய்தி வரை அனுப்புவாராம். 

உடனே, அந்த பெண்மணியும், என் மேல் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறானே, இவ்வளவு கரிசனத்துடன் இருப்பவனுக்காக நாம் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. நல்ல வேளையாக  விபரீதம் ஏதும் நடக்கும் முன்பு, அந்த பெண்னின் தோழி கண்டித்து என்னிடம் அழைத்து வந்தாள். சமூக வலைத்தளங்களில் இதற்காகவே பல போலி ஆசாமிகள் திரிகிறார்கள். முன் பின் தெரியாத யாருடனும் அதிகம் பழக வேண்டாம். நீங்கள் பதியும் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி உங்கள் குடும்ப வாழ்க்கையே கெடுக்கவும் சிலர் தயங்க மாட்டார்கள்


பல பேர்,  தங்கள் புகைப்படம், ஸ்டேடஸ்களுக்கு லைக்ஸ், கமென்ட்ஸ் விழவில்லை என்றால் அன்றைய நாளே ஓடவில்லை என்கிறார்கள்.  இவையெல்லாம் மன வியாதி. அந்த எண்ணம் இருந்தால் ஸ்டேடஸ், புகைப்படங்களைப் பதிவிடுவதை தவிர்க்கவும். ஃபேஸ்புக்குக்கு என்று ஒதுக்கும் நேரத்தில் விளையாடுவது, இசை கேட்பது, வெளியில் வாக்கிங் போவது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி கொள்ளலாம்.

யாரோ மூன்றாம் நபருடன் சாட் செய்ததை உங்கள் துணையின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள். இன்றைய இணையம் தூரத்தில் இருப்பவர்களை சேர்த்துவிட்டு பக்கத்தில் இருப்பவர்களை பிரித்துவிடுகிறது.
 
விட்டுக் கொடுங்கள்

'விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை' விட்டுகொடுப்பதன் மூலம் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடமுடியும்.  அனை வரிடமும் சில நிறை, குறைகள் இருக்கிறது. அதனை அதன் போக் கில் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். வானத்தில் இருந்து யாரும் வந்துவிடவில்லை. நம் விருப்பு, வெறுப்பு மாறி கொண் டே இருக்கும். எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு உறவுகளை சிதைத்துக் கொள்ள வேண்டாம். திருத்திக் கொண்டே ஆக வேண்டிய விஷயத்தை கோபமாக சொல்லி சண்டைப் போடாமல் அன்பாக எடுத்து சொல்லுங்கள். அன்பாகச் சொன்னால் அனைவரும் கேட்பார்கள். 


No comments:

Post a Comment