அதிகாலையில், அலாரம் வைத்து எழுந்து, அவசர அவசரமாகச் சமையல் முடித்து, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கும்... கணவரை அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டு, அரக்கப் பரக்க தனது அலுவலகத்துக்குக் கிளம்பிப் போய்ச் சேர்வதற்குள்ளாகவே... ஒருநாள் முழுமைக்குமான வேலைப் பளுவை அனுபவித்து விடுகிறாள் பெண்! அதன்பிறகும் அலுவலகத்தில் எட்டு மணிநேரம் சுற்றிச் சுழல்பவள்... மாலையில் வீடு திரும்பியதும் வீட்டைச் சுத்தம் செய்வது, இரவு சாப்பாடு தயாரிப்பது... என்று எல்லாம் முடித்து, 'அப்பாடா’ என்று படுக்கையில் சாயும்போதுதான் முதுகுவலி முறுக்கி எடுக்கும்!
'ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரையும் முதுகுவலி வாட்டி எடுத்தாலும்... பெரும்பாலும் அதிக வலியால் அவதிப்படுவது பெண்கள்தான்’ என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
'இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?' என்று தேடுபவர்களுக்காக பல்வேறு தகவல்களை இங்கே விளக்குகிறார் சென்னை எலும்பு மூட்டு நிபுணர் டாக்டர் எம்.பார்த்தசாரதி.
''மருத்துவ ரீதியாக முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலியைத்தான் முதுகுவலி என்கிறோம். இந்த வலியைப் பற்றி தெரிந்து கொள்வதற்குமுன் முதுகெலும்பைப் பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். பிற உயிரினங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவதும், அவன் நிமிர்ந்து நிற்க உதவுவதும் முதுகெலும்புதான். இது ஒரு தனி எலும்பு கிடையாது. 33-எலும்புகள், தசைகள், தசை நார்கள், நாண்கள், தண்டுவடம் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து மிகவும் நேர்த்தியுடன் அமைந்த ஒரு சங்கிலித் தொடர்! உடலின் பல பகுதிகளில் இருக்கும் முதுகெலும்பைச் சார்ந்த நரம்புகள், உணர்ச்சிகளை தண்டுவடம் மூலமாக மூளைக்கு எடுத்து செல்கின்றன.
நேராக நிமிர்ந்து நிற்பது, வளைவது, நெளிவது போன்ற செய்கைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு, முதுகெலும்பைச் சார்ந்த தசை, நார், ஜவ்வுகளே காரணம். இந்த ஜவ்வு, நரம்பு, எலும்புகளில் ஏற்படுகிற சின்னச் சின்னப் பிரச்னைகளால்தான் முதுகுவலியும் உண்டா கிறது.
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பெரும்பாலும் முதுகுவலி நோயாளிகளாக இருப்பார்கள். அந்தக் காலம் மலையேறி, இப்போது 20 வயது நிரம்பாத பெண்களும்கூட முதுகுவலியால் அவதிப்படுகின்றனர். ஹை ஹீல்ஸ் எனப்படும் குதிகால் செருப்புகள் அணிவதால் பின்புற எடை முன்னோக்கித் தள்ளப்படுகிறது. இந்த எடையை பேலன்ஸ் செய்தபடியே ஒழுங்கற்று நடப்பதாலும் பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். முதுகுவலிக்கும் உடல் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் முதுகுவலி வரலாம். உடலின் நடுப் பகுதியில் எடை அதிகரிப்பதால், முதுகுத் தண்டு வடத்தில் வலி உண்டாகும். கர்ப்பக் காலத்தில் பல பெண்களுக்கு முதுகுவலி வருவதற்கு இதுவே காரணம்.
முதுகெலும்புகளுக்கு நடுவில், ஜெல்லி போன்ற பிசுபிசுப்பு திசுக்களால் ஆன ஜவ்வுகள் அமைந்திருக்கும். எலும்புகள் உராய்வதைத் தடுக்க உதவும் இந்த ஜவ்வுகள், நாளடைவில் தேய்ந்து நரம்புகள் விலகுவதாலும் முதுகு வலி ஏற்படும். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளாமல் போவதாலும்கூட எலும்புகள் விரைவில் தேய்மானம் அடைந்து, முதுகு வலியை உண்டாக்கும். சட்டென குனிந்து அதிகமான எடையைத் தம் கட்டித் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தர தவறிவிடுகின்றன. இதனாலும் வலி ஏற்படலாம். தைலம், களிம்பு தடவுவது தற்காலிகத் தீர்வைத்தான் கொடுக்கும்.
முதுகுத் தண்டுவடத்தின் கீழ் பாகத்தில், ஏதேனும் பிரச்னை இருந்தால் தொடையிலிருந்து கால் வரை கொக்கி போட்டு இழுப்பது போன்ற வலி உணர்வு ஏற்படும். இந்த வலி கணுக்கால் வரையிலும் பரவும். முதுகை லேசாகத் திருப்பினாலோ, குனிந்து வேலை செய்தாலோ வலி அதிகமாகும். 'ஸயாடிகா’ (Sciatica) என்னும் இந்த வலி... தும்மல், இருமல் வரும்போது இன்னும் அதிகரிக்கும்'' என்றெல்லாம் விளக்கங்கள் தந்த டாக்டர் பார்த்தசாரதி, அடுத்து சிகிச்சை ஏரியாவுக்குள் நுழைந்தார்.
''மாத்திரைகள், பிசியோதெரபி மூலமாக இந்த வலியைக் குறைக்க முடியும். லேசான வலி இருந்தால் 'எபிடியுரல் ஸ்டீராய்ட்’ (Epidural steroid) எனும் ஊசி மருந்தை செலுத்தி கால் வலியைக் குறைக்க முடியும். உடம்பில் தேவை இல்லாமல் இருக்கும் ஊளைச் சதையை குறைத்தாலே சிலருக்கு முதுகுவலி தானாகவே சரியாகி விடும். வலி மிகவும் அதிகமாக இருந்தால்... முதலில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது நல்லது. அதிலும் தெளிவாகவில்லையெனில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யவேண்டும். இதில், முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு விலகி இருந்தாலோ, நரம்புகள் வெளியேறும் துவாரம் நெருக்கப்பட்டிருந்தாலோ எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அதன்பிறகு, முதுகெலும்பில் இருந்து குறிப்பிட்ட அந்த நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக் கும் திசுக்களை அகற்றி, துவாரத்தை சற்று பெரிதாக்குவதன் மூலம் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலியை முற்றிலும் குறைக்க முடியும்'' என்று முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டாக்டர் பார்த்தசாரதி!
வலியைக் குறைக்க வழி!
கம்ப்யூட்டர், டி.வி-யின் முன்பு முதுகை வளைத்த நிலையில் மணிக்கணக்கில் உட்காருவதை தவிர்க்கவும். ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காரும்போது, முதுகெலும்பை தாங்கும் தசைகள் பலவீனமாக வாய்ப்பு இருக்கிறது. இடையிடையே எழுந்து செல்வது நல்லது.
சேரில் உட்காரும்போது முதுகின் பின்புறம் சிறிய தலையணையை வைத்துக் கொள்ளலாம்.
முதுகெலும்பை ஒரே நேராக வைத்திருப்பது போல் படுக்கை அமைந்திருக்க வேண்டும்.
சக்திக்கு மீறிய சுமைகளைத் தூக்குவது, இறக்குவதைக் கட்டாயம் தவிர்க்கவும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே எளிய பயிற்சிகளை செய்து முதுகுவலியைப் போக்க முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment