சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Apr 2015

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதில் தமிழக மற்றும் ஆந்திர முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.    

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகக்  கூறி சமீபத்தில் 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் சுட்டுக் கொன்றனர்.நாட்டையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவ த்திற்கு கண்டனங்கள் பெருகி வருகின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணை ஹைதராபாத்  உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.


இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் பதிவாகி இருந்த நம்பர்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த தொலைபேசி எண்கள் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழில் அதிபர்களின் எண்களாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து செம்மரம் வெட்ட தொழிலாளர்களை அழைத்து செல்லும் 16 ஏஜெண்டுகளை ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.


இவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது அவர்கள், ‘‘ஆந்திராவில் வெட்டப்படும் செம்மர கட்டைகள் சென்னை மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன’’ என்று திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்தனர். 

அதோடு செம்மர கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் தமிழக, ஆந்திர அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களின் பெயர்களை ஆதாரங்களுடன் வெளியிட்டனர். இதன் மூலம் செம்மரக்கடத்தலில் மிகப்பெரிய ‘‘நெட்வொர்க்’’ ஒன்று ரகசியமாக இயங்குவது தெரிய வந்தது.

இதற்கிடையே சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முனியாண்டி உள்பட சிலர் ஆந்திரா போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்கள் ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செம்மரக்கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கில் யார், யார் இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட முழு விபரங்களையும் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீவிர வேட்டையில் இறங்கிய ஆந்திர போலீசார்  நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு  தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் அதிரடி நடவடிக்கையைத்   தொடங்கினார்கள்.

சென்னைக்கு வந்திருந்த 40 போலீசார் 4 பிரிவாக பிரிக்கப்பட்டனர். தலா 10 போலீசாரை கொண்ட 4 படையினர் சோழவரம் அருகில் உள்ள எடப்பாளையம், ஆவடி காந்திநகர், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் மதுரவாயல் ஆகிய 4 இடங்களில் உள்ள குடோன்களை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர்.

இந்த 4 குடோன்களிலும் சுமார் 4.5 டன் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 4 குடோன்களிலும் நேற்று அதிகாலை 5 மணி வரை சோதனை நீடித்தது.

இந்த 4 குடோன்களிலும் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்ததாக சரவணன் என்பவரை ஆந்திரா போலீசார் கைது செய்தனர். இவருக்கு ‘‘மெட்ராஸ் சரவணன்’’ என்றொரு பெயரும் உண்டு. இவர் சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி வந்தார் என்று சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் 4 இடங்களில் ஆந்திரா போலீசார் சோதனை நடத்திய அதே சமயத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பூடான் எல்லைப் பகுதியையொட்டிய காட்டுப் பகுதிக்குள் இருந்த 2 குடோன்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். யானைகள் நடமாட்டம் மிகுந்த அந்த காட்டுப்பகுதியில் உள்ளூர் போலீசார் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 2 குடோன்களிலும் சுமார் 8 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இந்த செம்மரங்களை பதுக்கி வைத்த சவுந்தரராஜன் என்பவரையும் ஆந்திரா போலீசார் கைது செய்தனர். இந்த சவுந்தரராஜன் சென்னையை சேர்ந்தவர். பர்மா தலைநகர் ரங்கூனில் குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்.

திருப்பதியில் வெட்டப்படும் செம்மரங்களை சவுந்தர ராஜன் சென்னையில் உள்ள கடத்தல்காரர்கள் மூலம் பெற்று சீனா, பர்மா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். குறிப்பாக நிலக்கரி லாரிகள் மூலம் அவர் சீனாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இவருக்கும் சீனா, பர்மா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பெரிய கடத்தல்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எனவே பல ஆசிய நாடுகள் சவுந்தரராஜனை தேடி வந்தன. அவர் பிடிபட்டு இருப்பதை ஆந்திர மாநில போலீசார் மிகப்பெரிய திருப்பு முனையாக கருதுகிறார்கள்.

சென்னை மற்றும் மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு ரூ.10 கோடி முதல் ரூ.22 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் கைதான மெட்ராஸ் சரவணனை நேற்று ஆந்திரா போலீசார் சித்தூருக்கு அழைத்து சென்று விட்டனர்.

மேற்கு வங்கத்தில் பிடிபட்ட சவுந்தரராஜன் நேற்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு அவரை ஆந்திரா அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள். சித்தூரில் வைத்து அவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சரவணன், சவுந்தரராஜன் இருவரிடமும் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் பூடான் நாட்டின் எல்லையில் உள்ள ஹசீரா காட்டுக்குள் இருந்த 2 குடோன்களும் அந்த பகுதி எம்.எல்.ஏ.க்கு சொந்தமானது என்ற அதிர்ச்சி தகவலை சவுந்தரராஜன் வெளியிட்டார்.

அதுபோல சரவணனிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 2 பேருக்கு செம்மரங்கள் கடத்தலில் நேரடி தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதையடுத்து அந்த இரு முன்னாள் அமைச்சர்கள் பற்றி ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஒரு முன்னாள் மந்திரியிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.


தமிழ்நாட்டை சேர்ந்த அந்த முன்னாள் அமைச்சர் வட மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அவரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. ஆந்திர மாநில போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் செல்லும் போது அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

செம்மர கடத்தலில் தொடர்புடைய ஆந்திர முன்னாள் மந்திரியும் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளது. அவரது உதவியாளரை போலீசார் நேற்று கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

ராயலசீமா பகுதி போலீஸ் ஐ.ஜி. கோபாலகிருஷ்ணா இது பற்றி கூறுகையில், ‘‘செம்மரம் கடத்தலில் தொடர்புடைய நெட்வொர்க்கை கண்டு பிடித்து விட்டோம். இது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. விரைவில் இந்த கடத்தலுக்கு பின்னணியாக இருந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர் மீது ஆந்திர மாநில போலீசாரின் பார்வை திரும்பி இருப்பதால், சென்னையில் உள்ள செம்மர கடத்தல்காரர்கள் அனைவரும் மிகவும் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.




No comments:

Post a Comment