சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Apr 2015

45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி: திருச்சி சிவா சாதனை

கடந்த 45 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நபர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று முதன்முறையாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்தவர் திமுக எம்பி திருச்சி சிவா.
 
மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதம், திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தாக்கல் செய்தார். அதில், "சமூகத்தில் சுமுகமான முறையில் திருநங்கைகளும் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும்"  என்று குறிப்பிட்டிருந்தார். 


திருநங்கைகளின் வாழ்க்கைக்கான உரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்தல், உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கவுரவமான வசிப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கான குடும்பங்களை அமைப்பதற்கான உரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. 

இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய திருச்சி சிவா, ‘இது தான் சரியான நேரம். இந்த மசோதாவை நிறைவேற்ற இதைத் தவிர வேறு வழியில்லை என்றே நான் கருதுகிறேன். எனவே அரசு பெருந்தன்மையுடன் இதனை ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இந்த மசோதாவை ஆதரித்து பல உறுப்பினர்களும் பேசினர். பின்னர் இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ‘திருநங்கைகள் உரிமை சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்த சட்டம் இனிமேல் நாடாளுமன்றத்துக்கு விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்திலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதி ஒப்புதலுடன் இச்சட்டம் அமலுக்கு வரும்.

இது குறித்து செய்தியாளர்களிடம் திருச்சி சிவா கூறுகையில், ‘‘சமூகத்தில் திருநங்கைகள் புறக்கணிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் கருத்து ரீதியான வன்முறைகள் அதிகரித்த நிலையில் இது போன்றதொரு மசோதாவை தாக்கல் செய்யும் முடிவுக்கு வந்தேன். இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற ஒத்துழைத்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

இதற்கு முன்பு 1970ஆம் ஆண்டு தான் ஒரு தனிநபர் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அது உச்ச நீதிமன்றம் (கிரிமினல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துதல்) தொடர்பானது ஆகும். அதன் பின்னர் 45 ஆண்டுகளில் இப்போது ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் பெருமிதம்


இது தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தனி நபர் தீர்மானம் மூலம் கொண்டு வந்த "திருநங்கையர்களின் உரிமைகள் தொடர்பான மசோதா 2014" ராஜ்ய சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்நாள் வரலாற்றில் மிக முக்கிய நாள். கடந்த 45 வருடங்களுக்குப் பிறகு தனி நபர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று இப்படி நிறைவேற்றப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. 

வேறுபட்ட அரசியல் நிலவும் இந்த சூழ்நிலையில், இது போன்ற முக்கியமான மசோதாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதுடன் செயல்பட்டிருப்பது இதயத்திற்கு இனிமையான செய்தியாக அமைந்திருக்கிறது. திருநங்கையரின் முன்னேற்றத் திட்டங்களுக்கு தேசிய அளவிலான கொள்கை உருவாக்கவும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கவும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

அவர்களின் நல் வாழ்விற்காகவும், இந்த சமுதாயத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கும் தி.மு.க என்றும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு திருநங்கைகள் என பெயர் சூட்டி,வாரியம் அமைத்து, தொழில் துவங்க வழி வகுத்து, பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்ற காரணமாக இருந்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே வேளையில், இது மக்களவையிலும் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.



No comments:

Post a Comment