சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Apr 2015

சிக்கனத்தின் விலை பயணிகள் உயிரா?

'மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்களிலிருந்து தினமும் 22,617 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.'- இவையெல்லாம் போக்குவரத்து கழகங்களாலும், ஆளுங்கட்சியினராலும் பறைசாற்றப்படும் பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்று. அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பிரச்னைகளை பட்டியலிட்டால், ஊழியர்கள் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் பற்றாக்குறை, 'டப்பா' (பழுதடைந்த) பஸ்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் உள்ளூருக்கும், புறநகர் பகுதிக்கும் இயக்கப்படும் பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள் என இருவர் பணியாற்றுகிறார்கள். டிக்கெட்டுகளை விநியோகிக்க தனியாக கண்டக்டர்கள் இருந்தும், ஓசி பயணத்தை மேற்கொள்பவர்களை கட்டுப்படுத்த முடியாதது தனிக்கதை. டிக்கெட் எடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பஸ் நிறுத்தங்களில் செக்கிங் இன்ஸ்பெக்டர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கி அபராதம் கட்டுபவர்களும் உண்டு. இவ்வாறு வருவாயை அதிகரிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

நீண்டதூர வெளியூர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் தொடக்கக் காலத்தில் இரண்டு டிரைவர்கள், ஒரு கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஒரே பஸ்சுக்கு மூன்று பேர் என்றால் சம்பளம் அதிகமாகுவதாக கருதி 'டிரைவர் கம் கண்டக்டர்' என்ற அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அதாவது, நீண்ட தூர விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் கண்டக்டராக பணியாற்றுபவர்கள் டிரைவராகவும் பஸ்சை ஓட்டிச் செல்ல வேண்டும். இதற்காகத்தான் டிரைவர், கண்டக்டர் பயிற்சி இரண்டையும் முடித்தவர்கள் விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியமர்த்தப்பட்டனர். இதன் மூலம் ஒரு டிரைவர் பணியிடம் குறைக்கப்பட்டது. இதன்பிறகு டிரைவர், கண்டக்டர்கள் மாறி, மாறி பஸ்களை ஓட்டுவதால் அவர்களுக்கு ஓய்வு இல்லாத காரணத்தால் விபத்துகள் அதிகளவில் நடந்தன. ஆனால், அதைப்பற்றி எல்லாம் விரைவு போக்குவரத்து கழகமும், அரசும் கண்டுகொள்ளவில்லை. 

தமிழகத்தில் இந்த நிலைமை என்றால், அண்டை மாநிலமான ஆந்திராவில் நிலைமை அதை விட மோசம். நீண்ட தூரங்களுக்கு செல்லும் ஆந்திர அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஒரே ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார். பஸ்சை ஓட்டுவதற்கு முன்பு அவர் கண்டக்டர் பணியை செய்கிறார். அனைத்துப் பயணிகளுக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு, பஸ்சை ஓட்டுகிறார். பஸ்சில் இருக்கைகள் காலியாக இருந்தால் நடுவழியிலும் பஸ்சை நிறுத்தி அவர்களுக்கு டிக்கெட் கொடுத்து மீண்டும் பஸ்சை இயக்குகிறார் அந்த ஒன்மேன் ஆர்மி டிரைவர். இதன் மூலம் கண்டக்டருக்கான சம்பளத்தை ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் மிச்சப்படுத்தியுள்ளது. சம்பளம் மிச்சப்படுவது என்பது ஒருவிதத்தில் லாபம் என்றாலும், விலை மதிப்புமிக்க பயணிகள் உயிரோடு ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் விளையாடுகிறது என்பது உண்மை.

கண்டக்டர் பணியையும் டிரைவரே மேற்கொள்வதால், அவருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் நடுவழியில் ஏறும் பயணிகளுக்கு பஸ்சை நிறுத்தாமலேயே டிக்கெட் விநியோகிக்கிறார் டிரைவர். இது மிகவும் ஆபத்தானது. பைபாஸ் சாலையில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்து கொண்டு இருக்கிற நேரத்தில் டிக்கெட்களை கொடுக்கும்போது, நிச்சயம் அந்த டிரைவருக்கு கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விபத்து ஏற்படலாம் என்று பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த நடைமுறையை மாற்ற ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இல்லையெனில் நடுவழியில் பயணிகளை ஏற்றாமல் பாயிண்ட் டூ பாயிண்டாக எங்கேயும் நிற்காமல் பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு செய்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு குறைவு.
இதுகுறித்து ஆந்திர பஸ் டிரைவர் கூறுகையில், "எங்கள் போக்குவரத்துக் கழகத்தில் சில பஸ்களில் இந்த நடைமுறைதான் உள்ளது. டிரைவராக இருந்து கொண்டு கண்டக்டர் பணியையும் செய்வது சிரமம்தான். தொடர்ந்து செய்வதால் பழகிவிட்டது. நடுவழியில் ஏறும் பயணிகளுக்கு பஸ்சை நிறுத்தி டிக்கெட் கொடுத்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு சேர முடியாது. எனவேதான் பஸ்சை ஒட்டிக் கொண்டே டிக்கெட்டுகளை கொடுக்க வேண்டியதுள்ளது. காலியாக சென்று வசூல் இல்லையென்றால் அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது" என்றார்.

தமிழக போக்குவரத்துக் கழக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "முன்பெல்லாம் கண்டக்டர்கள் கையால் டிக்கெட்களை எழுதி கொடுத்தார்கள். இதன்பிறகு அச்சடிக்கப்பட்ட டிக்கெட்களை கிழித்துக் கொடுத்தார்கள். இப்போது டிக்கெட் இயந்திரம் மூலம் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு கண்டக்டரின் பணி சுலபமாகி விட்டது. நீண்ட தூர பஸ்களில் புறப்படும் நேரத்தில்தான் கண்டக்டர் டிக்கெட் கொடுக்க வேண்டும். இதன்பிறகு அவர் சும்மாதான் இருக்க வேண்டியதுள்ளது. இதையெல்லாம் யோசித்துதான் டிரைவர் கம் கண்டக்டர் என்று விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் ஆந்திராவில் நம்மை விட மோசம்" என்றார்.


அரசு போக்குவரத்துக் கழகங்களில் சிக்கனத்துக்கு பல வழிகள் இருக்கின்றன. விலைமதிப்பு மிக்க உயிரோடு விளையாடாலாமா?


No comments:

Post a Comment