சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Apr 2015

கோடீஸ்வரர்களை உருவாக்கும் அரசின் சாதனை!

ன்ன ஏதோ ஆங்கிலப் புத்தக தமிழாக்கத் தலைப்புபோல இருக்கிறது  என்றோ, பெரிய முதலீடு திட்டம் என்றோ அல்லது சாமியாராகவோ, மந்திரியாகவோ மாறினால் கோடீஸ்வரர்  என்றோ நினைக்க வேண்டாம்.
ஜாதகத்தில் 'குரு பார்த்தால் கோடி நன்மை' என்ற ஜோதிட மொழி மாறி அரசியல்வாதியுடன், அரசு அதிகாரியும்  பார்க்க நீங்கள் சரியாக  அவர்களை  'கவனித்தால்'  கோடிகள்  கொட்டும் யோகம்தான். அரசு ஒப்பந்த வேலைகளை எடுத்தாலே உங்கள் பணம் பல கோடிக்கு பெருகும் என்பதே உண்மை. 

அட போன வாரம்தான் சாலை போட்டார்கள். அதற்குள் தார்ச் சாலையில் தாரைக்  காணவில்லையே? போடாத சாலைக்கு பணம் எடுக்கும் அரசு அதிகாரிகள்,   தூர்வாராத கண்மாய்க்கு கணக்கு எழுதும் அதிலும் அடைமழைக் காலத்தில்  களிமண் நிறைந்த கண்மாயில் ஆள் நடப்பதே சிரமம் இதில் எப்படி அரசு அதிகாரி கள் தூர் வாரியதாக, கரை கட்டியதாக ஒப்புதல் அளித்து பணம் கொடுக்கிறர்கள்? அரசு அதிகாரிகள்  நீந்திச் சென்று கரையை அளந்தார்களா?

அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நேர்மையை, மதுரை மேலூரில் காணாமல் போன கண்மாய்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரிந்து விடுமே? அரசு கட்டும் கட்டட தரத்தை சொல்லத் தேவையில்லை.....ஒப்பந்ததாரர் கட்டிக்கொடுக்கும்  அரசு கட்டடங்களின் தரத்தை திருவாரூர் விபத்து சொல்லி விட்டதே?


இங்குதான் இப்படி என்றால், மத்திய அரசு ஒப்பந்ததரகர்களின் நிலை அதைவிட மோசம். விமான நிலைய மேற்கூரை அமைத்தால் விமானம் பறக்கும் போதெல்லாம்  கூரையும் சேர்ந்து பறக்கும் மர்மம் என்ன?? தண்டவாளத்தில் ஓட வேண்டிய ரயில் தரையில் ஓடுவதேன்? பல கோடி ரயில்வே பொருட்கள் அனாதை யாக குப்பை போல கொட்டிக்கிடக்க வேண்டிய அவசியம் என்ன? .
ஆங்கிலேயர் வேண்டுமானால் நம்மை அடிமையாக்கி நம் பணத்தை  சுரண்டி இருக்கலாம்....ஆனால் அவர்கள் உள் கட்டமைப்பு வசதிக்காக கட்டிய  கட்டடத்தில், பாலத்தில், ஒப்பந்த வேலையில் நம்மை சுரண்டவில்லை. கண்கண்ட தெய்வமாக விளங்கிய பென்னி குக் கட்டிய  பெரியாறு அணை  இன்றும் நமக்காக வாழ்கிறது. 

எந்த ஒரு ஒப்பந்த வேலைக்கும் தனிப்பட்ட தர நிர்ணய குழு அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசு அதிகாரிகள் ஒப்பந்த வேலை செய்யும் இடத்திற்கு சென்று உறுதி தன்மையை சோதனை இடுவார்களா என்பதும் தெரியவில்லை. தர சோதனை அறிக்கையை யார் சான்று அளித்தார்கள்?? 

பல லட்சம் கொட்டப்படும் கட்டட வேலைக்கு யார் காப்பீடு  உறுதி அளித் துள்ளார்கள்?. பணத்திற்கு அரசு பொறுப்பு என்று சொல்லும் ஒப்பந்ததாரர்கள் அவர்கள் கட்டும் பாலம், சாலை,கட்டடத்தின் ஆயுளுக்கு யார் பொறுப்பு? 

எங்கும் லஞ்சம்... எதிலும் லஞ்சம் எனத் திளைக்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்களால்  கோடீஸ்வரர் களை  உருவாக்கும்  இடமாக அரசு அலுவலகம் மாறி விட்டது என்பதே உண்மை. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரை கைது செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை, தரமற்ற ஒப்பந்தம் செய்வோரையும்  கைது செய்யும் அதிகாரத்தை நீதி மன்றம் வழங்கிட வேண்டும்.  
மக்களின் பணத்தை லஞ்சமாக வாங்கினால் குற்றம் என்றால், ஒப்பந்த வேலை என்ற பெயரில் மக்கள் பணத்தை கொள்ளை  அடிக்கும் நபரை கைது செய்யாதது ஏன்?. ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெற நான் சொல்வதெல்லாம் உண்மை என கையொப்பமிடச் சொல்லும் அரசு, பல கோடி பணத்திற்கு எந்த தர நிர்ணயமும், வேலையின் தர, ஆயுளுக்கு சான்று பெறாததும் ஏன் ?

அரசு அதிகாரிகள் தரச் சான்று வழங்கிய பின் ஒப்பந்ததாரர் பணம் பெறுகிறார்  என்றால் தரமற்ற வேலை என மீண்டும் அரசு அங்கு சாலை மேல் சாலை போட்டு பணத்தை கொட்டுவது ஏன் ?  

ஒவ்வொரு மழைக் காலத்திலும் தார்ச் சாலைகள் மிதப்பது எப்படி? நமது மாநிலத்தை விட அதிக மழை பொழியும் மாநிலம், நாடுகளில் எல்லாம் சாலை எப்படி போடப்படுகிறது? நீங்கள் கோடீஸ்வரனாக மக்கள் தரமற்ற சாலையால் ஏற்படும் உடல் வலி, வண்டியின் எரி பொருள் செலவும்,வாகனப் பராமரிப்புச் செலவையும் ஏற்க வேண்டுமா?
ஒவ்வொரு கட்சியும் பதவிக்கு போட்டி போட்டு அரசு ஒப்பந்த வேலை வாங்கி சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறதே தவிர மக்களுக்காக அல்ல என்பதே உண்மை. 

மக்களுக்காக இவர்கள் உழைத்திருந்தால் இது நாள் வரை சாலை போட்ட பணமும், விவசாய மேம்பாடு என்று செலவழிக்கப்படும் பணமும் மீண்டும் மீண்டும் கணக்கு காட்டப்படுவதேன் ? நாம் சாலை போட்ட பணத்திற்கு உலகிற்கே சாலை போட்டிருக்கலாம்.....நாம் இது வரை கண்மாய், ஏரிகள்  மேம்பாட்டிற்கு செலவு செய்த தொகையில் பல ஆயிரம் ஏக்கர் விலை நிலத்திற்கு நேரடியாகவே குழாய் மூலம் தண்ணீர் கொடுத்திருக்க முடியும். 

இதையும் தாண்டி கட்சியினர் சேர்ந்து திறப்பு விழா என்று பொது மக்களை இம்சித்து ஆடம்பரமாக விழா வேறு நடத்துவார்கள். 

ஏதோ இவர்கள் சொந்த உழைப்பால் சேர்த்த கைப்பணத்தில் இருந்து மக்களுக்கு செலவழித்தது போல திறப்பு விழா வேறு கொண்டாடி, அதற்கும் கணக்கு எழுதுவார்கள்.  சென்னை மாநகராட்சி, குப்பைக்கே பல கோடி கணக்கு காட்டிய பெருமை உடையது.
 
ஒப்பந்த வேலை மூலம் லஞ்சம் பெறவும், சொத்து சேர்க்கவுமே தேர்தலில் வெற்றி பெற பாடுபடுகின்றனர் என  மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.  பதவியில் இருக்கும்போது  பாதுகாப்பு படை போலீசுடன்  சிவப்பு சுழல் விளக்கில் வலம் வரும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஆட்சி, பதவி முடிந்தவுடன் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை  இவர்களது வீட்டில் முகாமிடுவதும், பத்திரிக்கை தலைப்பு செய்தியுடன் நீதிமன்ற வழக்கும் வருவது  ஏன்?. 

அரசின் சாதனை என்று திறப்பு விழா கல்வெட்டில் பொறித்தால்,   நம் வரிப்பணம் எத்தனை “கோடீஸ்வரர்களை” உருவாக்கியுள்ளதோ? என்று தான் நினைக்கத் தோன்றும். ஒவ்வொருமுறை சாலை, கட்டடத் திறப்பு  ஒப்பந்த வேலையைப் பார்க்கும் போதும் அரசின் “சாதனை”  என்று யாரவது சொன்னால் ஒப்பந்தம் மூலம்  கோடீஸ்வரர்களை  உருவாக்குவதும், கோடீஸ்வர அரசு ஊழியர்களை உருவாக்குவதுமே  அரசின் சாதனை என்றே சொல்லத் தோன்றும். 

கோடீஸ்வரனாக வாழ்வதைக்காட்டிலும் மக்களின் சாபத்தில் விழாமல் இருப்பதே மேல்.  

No comments:

Post a Comment