வெ ற்றி பெறுவதற்குத் திறமை, விடாமுயற்சி, நம்பிக்கை இந்த மூன்றும் அத்தியாவசியமானவை என்பது நமக்குத் தெரியும். இவை எல்லாம் இருந்தும், நிம்மதியான மனம் இல்லையென்றால்..? அப்படி வாழ்ந்த ஒரு குத்துச்சண்டை வீரரின் உண்மைக் கதைதான் ‘Raging Bull’.
1964. ஒப்பனை செய்யும் அறையில் தனியாக நிற்கும் ஜேக் தனக்குள்ளாகப் பேசத் தொடங்குகிறார்... ‘‘அந்த மகிழ்ச்சி ஆரவாரம் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. பல வருஷங்களாக இன்னும் அது என் நினைவுகளில் இருக்கிறது. அதிலிருந்து நான் விலகியபிறகும்கூட என்னுடைய ஒவ்வொரு வெற்றிகளையும் வீழ்ச்சிகளையும் நினைத்துப் பார்க்கிறேன். என் வாழ்க்கை சுவாரஸ்யமில்லாத ஒன்றில்லை; உங்களுக்கே தெரியும். கயிறுகளுக்கு நடுவில் சண்டையிடுகையிலும் சரி, ஷேக்ஸ்பியரைப் பற்றிய உரை நிகழ்த்தும்போதும் சரி... என் உணர்வுகள் பீறிட்டு எழ, எனக்கு ஒரு மேடை வேண்டும். ஏனெனில் சண்டையிட்டாலும் உரை நிகழ்த்தினாலும் இரண்டும் பொழுதுபோக்குதானே...?’’ என்று மேடையில் பேசப்போவதை அவர் தனக்குத்தானே ஒத்திகை பார்த்துக்கொள்ள, ‘ஜேக் லமோட்டோ - 1941’ என்ற எழுத்துக்கள் தோன்ற... களத்தில் இளைஞனாக நிற்கும் அவனது முகத்தில் பலமாக விழும் ஒரு குத்துடன் அந்தக் குத்துச்சண்டை வீரனின் நினைவுகள் துவங்குகின்றன.
ஜேக் லமோட்டோவின் முகத்தில் விழுந்த குத்தில் நெற்றியருகே கிழிந்து ரத்தம் கொட்டத் துவங்குகிறது. ‘‘அடி வாங்குறதுக்கா இங்கே வந்தே? அவனை அடிச்சு நாக்அவுட் ஆக்கு!’’ என்று அவனது பயிற்சியாளர்கள், கொட்டும் அவனது வியர்வையையும் ரத்தத்தையும் துடைத்தபடியே சொல்ல சண்டை திரும்பவும் துவங்குகிறது. கடைசிச் சுற்றில், ஜேக் வெறியுடன் எதிரி ராபின்சனைக் குத்துகிறான். பார்வையாளர்கள் ஆரவாரிக்க, நடக்கும் சண்டையின் ஒவ்வொரு அடியையும் விவரிக்கிறார் வர்ணனையாளர். கடுமையான போட்டியின் இறுதியில், ஜேக் எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்தினாலும், முந்தைய சுற்றுக்களை வைத்து ராபின்சனே ஜெயித்ததாக அறிவிக்கப்படுகிறது. ஜெயித்தது ஜேக்தான் என்று ரசிகர்கள் கத்த, ஒரே கூச்சலும் குழப்பமுமாக ஜேக்கின் முதல் சண்டை தோல்வியில் முடிகிறது.
மறுநாள், வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் ஜேக் தன் மனைவியிடம், ‘‘நடுவர்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம். ஆனா, ரசிகர்களுக்குத் தெரியும் யார் சாம்பியன்னு..!’’ என்று சொல்லிக்கொண்டே, மனைவியின் சமையலைக் குறை சொல்கிறான். அவள் பதிலுக்குப் பேச, இருவருக்கும் சண்டை வருகிறது. அந்நேரம், ஜேக்கைத் தேடி வரும் அவன் தம்பி, ‘‘நடந்ததையே நினைச்சுட்டு இருக்காதே! இன்னும் நிறைய குத்துச்சண்டை இருக்கு...’’ என்று சொல்ல, அந்தப் பதிலில் சமாதானமாகாத ஜேக், ‘‘அப்ப எனக்காக ஒண்ணு செய். உன் பலத்தையெல்லாம் சேர்த்து என் முகத்துல குத்து’’ என்கிறான். தம்பி தயங்க, அவனை வற்புறுத்தி, குத்துச்சண்டையில் குத்துவது போல தன் முகத்தில் குத்தவைக்கிறான். ‘இன்னும் வேகமா குத்து’ என்று சொல்லி, தம்பியை அடிக்கிறான். அவன் குத்த, ‘இன்னும் வேகமா!’ என்று கத்துகிறான். ‘‘நீ என்ன பைத்தியமா? இப்பவே உன் முகத்துல இருக்கிற தையல் எல்லாம் விட்டுடுச்சு’’ என்று தம்பி சொல்ல, ஜேக், சிரித்தபடி அவனைக் கொஞ்சு கிறான்.
பொழுதெல்லாம் குத்துச்சண்டைப் பயிற்சியிலேயே இருக்கும் ஜேக், ஒரு நாள் தன் தம்பியுடன் நீச்சல் குளத்துக்குப் போகிறான். அங்கே, விக்கி என்னும் அழகிய பெண்ணைப் பார்க்கிறான். ‘‘இவர் என் அண்ணன். குத்துச்சண்டையில் அடுத்த சாம்பியன்’’ என்று தம்பி, ஜேக்கை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அன்று முதல் ஜேக்கும் விக்கியும் நெருங்கிப் பழகத் துவங்குகிறார்கள்.
அடுத்த முறையும் குத்துச்சண்டை ஜேக்குக்கும் ராபின்சனுக்குமே நடக்கிறது. ஏற்கெனவே அவனிடம் தோற்றுப்போன வெறியில் இருந்த ஜேக், இம்முறை அவனை அடித்து நாக்வுட் செய்கிறான். சில நாட்களில் ஜேக், மீண்டும் ராபின்சனுடன் மூன்றாவது முறையாக மோதுகிறான். இருவரும் தலா ஒருமுறை வென்றிருப்பதால், போட்டி கடுமையாக இருக்கிறது. முடிவில் ஜேக் தோற்றதாக அறிவிக்கப்படுகிறான். இதனால் கோபமுறும் ஜேக் தொடர்ந்து குத்துச்சண்டைகளில் கலந்துகொண்டு, எல்லாப் போட்டிகளிலும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறான். இதற்கிடையில் விக்கியை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்கிறான்.
அதிக எடை கூடினால் ஹெவி வெயிட் சாம்பியன்களுடன் மோதலாம் என நினைத்து, எப்போதும் அளவுக்கு அதிகமான உணவைச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான் ஜேக். அவனது தம்பி அதைக் கண்டித்து, ‘ஒழுங்காக இருக்கிற உடல் எடையை வைத்து மிடில்வெயிட் சாம்பியனாகலாம்’ என்று யோசனை சொல்லி, தற்போதைய சாம்பியனைத் தோற்கடிக்கச் சொல்கிறான். அந்தச் சாம்பியனின் பெயரைக் கேட்டதும், விக்கி அந்த வீரனின் அழகைப் புகழ்கிறாள். அதைக் கேட்டுப் பொறாமை கொள்ளும் ஜேக், அவள் மீது சந்தேகப்படத் துவங்குகிறான். அவளைக் கண்காணிக்குமாறு தம்பியிடம் சொல்கிறான்.
ஒரு நாள் ஜேக், தன் மனைவி விக்கியுடன் இரவு விருந்துக்குப் போகிறான். அங்கே பலருடனும் சகஜமாகப் பேசும் விக்கியின் மீது ஜேக்குக்கு சந்தேகம் வலுக்கிறது. ஒரு நாள், தன் மனைவி அழகன் என்று சொன்ன அந்தச் சாம்பியனுடன் மோதும் ஜேக், இருக்கும் கோபத்தையெல்லாம் வைத்து, அந்த வீரனை முகம் கிழியுமாறு தாக்கி வீழ்த்துகிறான்.
இரண்டு வருடங்கள் கழித்து, சாம்பியன் பட்டத்தை வெல்கிறான் ஜேக். இத்தனை நாட்கள் கடந்தும் மனைவியின் மீது இருக்கும் சந்தேகம் மட்டும் அவனுக்கு மாறவில்லை. ஒரு நாள் தன் தம்பியுடன் பேசிக்கொண்டுஇருக்கும்போது, ‘‘அவளைப் பற்றி இனிமே ஏதாவது தவறாகக் கேள்விப்பட்டேன்... கொன்னுடுவேன்’’ என்கி றான். ‘‘கொல்லு! எல்லாரையும் கொல்லு! என்னையும் கொல்லு!’’ என்கிறான் தம்பி. ‘‘உன்னை எதுக்குக் கொல்லணும்? ஏன்... உனக்கும் அவளுக் கும் தொடர்பு இருக்கா?’’ என்று ஜேக் கேட்க, அதிர்ச்சியடைகிறான் தம்பி. அவன் அங்கிருந்து கிளம்பிப் போன தும், தன் மனைவியைத் தேடி வீட் டுக்குள் வரும் ஜேக், ‘‘உனக்கும் என் தம்பிக்கும் என்ன தொடர்பு?’’ என்று கேட்டு அவளை அடிக்கிறான். பின், அங்கிருந்து வேகமாக தம்பி வீட்டுக் குப் போய், அவனைக் கீழே தள்ளி, ‘‘இரண்டு பேருக்கும் என்னடா உறவு?’’ என்று கேட்டு அடிக்கிறான். அன்று இரவு, விக்கி கோபித்துக்கொண்டு கிளம்ப, ‘‘வீட்டை விட்டுப் போகாதே! நீயும் குழந்தைகளும் போயிட்டா, நான் உயிரோடு இருக்க மாட்டேன் ’’ என்று கெஞ்சுகிறான் ஜேக். விக்கி அவனுடன் இருக்கச் சம்மதிக்கிறாள்.
‘‘தம்பியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவித் துப் பேசுங்கள்’’ என்று விக்கி சொல்ல, ஜேக் அவன் எண்ணுக்கு போன் செய்தபோதும், ஏதும் பேசாமல் வைத்துவிடுகிறான். எப்போதும் உடனிருக்கும் தம்பி இல்லாமல் ஜேக்கின் அடுத்த குத்துச்சண்டை அவனது பரம எதிரியான ராபின்சனுடன் துவங்குகிறது. நிம்மதியற்ற மனநிலையில் இருக்கும் ஜேக்கால் எதிர்த்துத் தாக்க முடியாமல், ராபின்சனின் தாக்குதலில் முகம் கிழிந்து ரத்தம் பீரிடுகிறது. அப்போதும் ஜேக், ‘‘அடிடா, அடி! நீ என்னை அடிச்சாலும் வீழ்த்த முடியாது!’’ என்று ஆவேசமாகக் கத்துகிறான். இதை டி.வி-யில் பார்க்கும் ஜேக்கின் தம்பி வருந்துகிறான். சண்டை யின் முடிவில் தற்போதைய சாம்பியனான ஜேக் தோற்கிறான்.
1956. ஒரு நீச்சல் குளம் அருகில் அமர்ந்திருக்கும் ஜேக், நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக் கிறார். ‘‘இனிமே நான் சண்டையிடப் போறதில்லை. குத்துச்சண்டையைத் தாண்டி, வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கு. அழகான குடும்பம், குழந்தைகள்... இது போதும் எனக்கு!’’ என்று சொல்லி, குத்துச்சண்டையிலிருந்து தன் ஓய்வை அறிவிக்கிறார் ஜேக். பிறகு, தன் பெயரில் மதுபான விடுதியுடன் கூடிய இரவு விடுதி ஒன்றைத் துவங்குகிறார். அங்கே குடிக்க வருபவர்களை மகிழ்வித்து உரைநிகழ்த்துபவராகப் புது வாழ்க்கையைத் துவக்குகிறார். இரவெல்லாம் அங்கு நேரத்தைக் கழிப்பதால் மனம் வருந்தும் அவரது மனைவி, விவாகரத்துப் பெறுகிறாள். வாழ்க்கையில் மாற்றங்கள் வேகமாக நடைபெறுகின்றன. விடுதியில் பெண் கள் சம்பந்தமான ஒரு பிரச்னையில் ஜேக் கைது செய்யப்படுகிறார்.
1958. நன்றாக உடல் பருத்த ஜேக் இரவு விடுதியில் நடனமாடும் பெண்ணை அறிமுகப்படுத்தி, எல்லோரையும் சிரிக்கவைத்துப் பேசிக்கொண்டுஇருக்கிறார். அன்று இரவு நடனம் முடிந்து, வீடு திரும்ப வாடகை காருக்காகக் காத்திருக்கும்போது வழியில் தன் தம்பியைப் பார்க்கிறார். பார்த்து வெகு நாளானதால், ஓடிப் போய்க் கட்டிக்கொள்கிறார். ‘‘என்னை மன்னிச்சிடு தம்பி! நடந்ததையெல்லாம் மறந்துடு. திரும்ப நாம எல்லாம் ஒண்ணா இருக்கலாம்’’ என்று சொல்ல, அவர் தம்பி எதுவும் பேசாமல் இருக்கிறார். ‘‘என்னை மறந்துடாதே!’’ என்று தம்பியிடம் சொல்ல, ‘‘நான் கிளம்பணும். அப்புறம் பேசறேன்’’ என்று சொல்லி, தம்பி காரில் கிளம்பிச் செல்கிறார்.
இன்னொரு நாள் இரவு. இன்னொரு ஓட்டல். அங்கிருக்கும் மதுபான விடுதியில் பேசுவதற்காக ஒப்பனை செய்யும் அறையில் கண்ணாடி முன் தனியாகப் பேசுகிறார் ஜேக். ‘‘நீ என் தம்பி! என்னைக் கவனிச்சுக்கணும். கிடைக்கிற கொஞ்ச பணத்துக்காக கண்ட வேலையும் பார்க்கவிடாம, என்னை நல்லாப் பார்த்துக்கணும். நான் சாதாரண ஆள் இல்லை. ஒரு காலத்தில் எனக்குன்னு ஒரு தகுதி இருந்துச்சு. நான் ஒரு குத்துசண்டை வீரனா இருந்தேன்...’’ என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ஓட்டல் ஊழியர் வந்து, ‘‘தயாராயிட்டீங்களா?’’ என்று கேட்க, ‘‘இதோ, அஞ்சே நிமிஷம்! வந்துர்றேன்’’ என்கிறார்.
அவன் செல்ல, ஜேக் எழுந்து தன் உடைகளைச் சரி செய்துகொள்கிறார். கிளம்பும் முன், கண்ணாடி முன் நின்று தனக்குத்தானே பேசுகிறார்... ‘‘கிளம்பு சாம்பியன்! போ! அவங்களை வசப்படுத்து!’’ என்று சொல்லிக்கொண்டே குத்துச்சண்டை செய்வது போல இரண்டு கைகளால் குத்திப் பார்க்கிறார். ‘‘நான்தான் பாஸ். நான்தான் பாஸ்’’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டே அவர் அந்த அறையிலிருந்து வெளியேற, யாருமற்ற அறையிலிருக்கும் அந்த வெற்றுக் கண்ணாடியில் ‘நான் பாஸ்’ எனும் குரல் தேய்ந்து ஒலிக்க, திரை இருள, எழுத்துக்கள் தோன்றுகின்றன...
ஆதலால், அவர்கள் குருடனாக இருந்த மனுஷனை இரண்டாம் தரம் அழைத்து, ‘உண்மையைச் சொல். இந்த மனுஷன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்’ என்றார்கள். அவன் பதிலாக, ‘அவர் பாவி என்று எனக்குத் தெரியாது. நான் குருடனாக இருந்தேன். இப்போது காண்கிறேன். இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்’ என்றான்.
வேதாகமத்தில் உள்ள இவ்வசனங்கள் திரையில் தோன்ற, படம் துவங்கிய இடத்திலேயே நிறைகிறது.
ஒரு குத்துச்சண்டை வீரனின் வாழ்க்கையின் ஏற்றத்தையும் இறக்கத் தையும் நுணுக்கமாகப் பதிவு செய்து இருக்கிறது இப்படம். கறுப்பு வெள்ளைப் படமான இதில், ஜேக் தன் மனைவி விக்கியுடன் இருந்த மகிழ்ச்சியான நாட்களை மட்டும் வண்ணத்தில் காட்டும் உத்தியும், குத்துச்சண்டைக் காட்சிகள் படமாக் கப்பட்ட விதமும், அவை தொகுக் கப்பட்ட விதமும் புதுமையானவை. அசல் குத்துச்சண்டை வீரனைப் போலவே சிறுசிறு முக அசைவுகளைச் சன்டையில் காட்டுவதும், பின்னர் உடல் பெருத்துத் தோன்றும்போதும், ஒரு நடிகராக ராபர்ட் டி நீரோவின் அர்ப்பணிப்பும் திறமையும் படம் முழுக்க வெளிப்படுகிறது. சிறந்த நடிப்பு, படத்தொகுப்பு என இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற இந்த அமெரிக்க நாட்டுப் படம், 1980-ல் வெளியானது. இதன் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸசி.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பழமொழி. பெண் என்பவள் குடும்பத்தையும், தனி மனித ஒழுக்கத் தையும் சேர்த்துக் குறிக்கிறாள். வெற்றி அடைந்த பெரும்பாலோர் ஒரு கட்டத்தில் தோல்வி அடைகிறார்கள். ஏன்? யாரும் தனக்கு நிகரில்லை என்கிற அதீதமான நம்பிக்கையையும், போலியான அதிகாரங்களையும் வெற்றி தருகிறது. ஜேக்கைப் போல சிகரத்தை அடைந்தவன், பின் அதன் அடிவாரத்தையும் அடைகிறான். உண்மை இப்படி இருக்கையில், வெற்றியை நிரந்தரம் என்று எண்ணும் மனித மனம் எத்தனை பரிதாபமானது!
|
|
No comments:
Post a Comment