சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Apr 2015

இலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி? ராமதாஸ் ஐடியா!

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச காவல்துறை மூலம் இந்திய நடவடிக்கை மேற்கொள்வதன் மூலமே இலங்கையை வழிக்கு கொண்டு வர முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களை கைது செய்யவும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யவும் இலங்கை கடற்படைக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேன ஆணையிட்டிருக்கிறார். அதன்படி, வங்கக்கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் 33 பேரை  5 படகுகளுடன் சிங்களப்படை நேற்றிரவு கைது செய்துள்ளது.


வங்கக் கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்னை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்குப் பிறகு ஏற்பட்ட இச்சிக்கல் 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரம் அடைந்தது. இக்காலகட்டத்தில் வங்கக் கடலில் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி 800க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்; ஏராளமான மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இரு நாட்டு மீனவர் அமைப்புகளே இப்பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இரு நாட்டு மீனவர்களுக்கிடையே சென்னையில் கடந்த 24ஆம் தேதி நடந்த மூன்றாம் கட்ட பேச்சுக்களின் போது, இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 83 நாட்களுக்கு மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் விடுத்த கோரிக்கையை இலங்கை மீனவர்கள் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தான் உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை சமாளிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் இந்த அறிவிப்பை இலங்கை அதிபர் வெளியிட்டிருக்கிறார். 

இந்தியா- இலங்கையைப் பொறுத்தவரை கடல் எல்லையை பிரித்துப் பார்க்க முடியாது; அப்படிப் பிரித்துப் பார்த்தால் மீனவர்கள் பிழைப்பு நடத்த முடியாது என்பது தான் உண்மை. இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறுகியது. இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லை வந்து விடும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் தான் விசைப்படகுகள் மீன் பிடிக்க முடியும் என்பதால் பல நேரங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும் நுழைவது தவிர்க்க முடியாதது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எந்த அளவுக்கு கைது செய்யப்பட்டு இருக்கிறார்களோ, அதில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலங்கை மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற புள்ளிவிவரமே இதை உணர்த்தும்.

இந்த உண்மையை உணராமல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மிரட்டுவதும், வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கான தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை இலங்கை அதிபர் சிறிசேன மறுப்பதும், அதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 33 பேர் அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருப்பதும் ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. இது மீனவர்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்குமே தவிர தீர்க்க உதவாது. வங்கக்கடலில் காலம் காலமாக தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் நட்புடன் மீன்பிடித்து வந்துள்ளனர். சர்வதேச வழக்கச் சட்டங்களின்படி (Customary international laws) பாரம்பரிய உரிமைகள் சட்டப்படி செல்லும். அந்த அடிப்படையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள வங்கக்கடலில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. இதை இந்தியா வலியுறுத்திக் கேட்கும்போது அதை இலங்கை அதிபராலோ, இலங்கைப் பிரதமராலோ ஒருபோதும் மறுக்க முடியாது. ஆனால், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்திய அரசு மறுப்பது தான் வேதனையான உண்மை ஆகும்.


ஐக்கிய நாடுகள் அமைப்பால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும். மேலும்,  வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கைக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச காவல்துறை மூலம் மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்னையில் இலங்கையை வழிக்கு கொண்டு வர முடியும். எனவே, இலங்கை மீது கருணை பார்வை காட்டுவதை விடுத்து, அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான சட்டபூர்வ உரிமையை தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு  பெற்றுத் தர வேண்டும். அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுகளுடன் மீட்கவும் மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment