ஷங்கர், விக்ரம் என்று பிரமாண்டக் கூட்டணியில் கைகோத்த சதாவுக்கு, ரொம்ப நாட்களாகத் தமிழில் வாய்ப்புகள் இல்லை. இப்போது வடிவேலுவின் ‘எலி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுகிறார் என்றதும் பலருக்கும் ‘அடடே மூணு ஆச்சர்யக்குறி!’.
‘‘என்னதான் ஆச்சு இந்த சதாவுக்கு. தமிழ் சினிமாவுல ஆறேழு வருடமா ஆளையே காணோமே?’’ “
‘உன்னாலே உன்னாலே’ படம் ரிலீஸானதைக் கணக்கு பண்ணி ஆறேழு வருடம்னு சொல்லிட்டீங்க போல? அடுத்து ஆர்.கே ஜோடியா ‘புலிவேஷம்’ படத்துல நடிச்சேன். (ஓ, அதெல்லாம் நீங்க ஞாபகம் வெச்சிருக்கீங்களா?) மாதவன் ஜோடியா ‘நான் அவள் அது’ படத்துல நடிச்சேன். ரிலீஸ் ஆகலை. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? இந்த இடைவெளியில சினிமா ரொம்ப மாறிடுச்சு. என்னைத் தேடி வந்தவங்க எல்லோருமே புதுமுக இயக்குநர், புதுமுக தயாரிப்பாளர், புதுமுக நடிகர். இப்படியே வந்தாங்க. ‘ஏதோ ஒரு படம். நடிச்சா போதும்’னு ரிஸ்க் எடுக்க நான் விரும்பலை. தவிர, நான் யார்கிட்டேயும் வாய்ப்புக்காக நிற்க மாட்டேன். என்னுடைய முதல் பட வாய்ப்பே தேடித்தான் வந்தது. சுருக்கமா சொல்லணும்னா, நான் எப்பவும் ஸ்கிரீன்ல தெரிஞ்சுக்கிட்டே இருக்கணும்னு விரும்புற நடிகை கிடையாது. கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி நான் நானாக இருந்தா போதும்.”
“அப்புறம் ஏன் ‘மதகஜராஜா’ படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ், இப்போ ‘எலி’யில... இனி இப்படித்தான்னு முடிவெடுத்துட்டீங்களோ?”
‘‘ ‘மதகஜராஜ’வுல ஒரு பாட்டுக்கு ஆடினேன், சரி. ‘எலி’ படத்துல நான் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். சொல்லப்போனா, அந்தப் படத்துல விரல்விட்டு எண்ணுற அளவுக்குதான் பெண்கள் கேரக்டர் இருக்கு. அதில் நான்தான் மெயின். படத்துல கிளப் டான்ஸரா நடிச்சிருக்கேன். இரண்டாம் பாதி முழுக்க எனக்கு முக்கியத்துவம் இருக்கு. 1960-களில் நடக்கும் கதை. இதுவரை இந்த மாதிரி படத்துல நான் நடிச்சதே இல்லை. அதனால, சில கண்டிஷன்களோட சம்மதிச்சேன்.”
‘‘அப்படினா ‘எலி’ உங்க ரீ என்ட்ரினு சொல்லலாமா?”
‘‘நான் நடிக்கிற எல்லாப் படத்தையும் நான் ரீ என்ட்ரியாதான் பார்க்கிறேன். இந்தப் படத்துக்குப் பிறகு 10 படங்களில் கமிட் ஆகிடுவேன், 10 விருது வாங்கிடுவேன்னு சொல்லலை. நல்ல படம். ‘சதா... ஹீரோயின்னு பெயர் வாங்குறதைவிட, பெர்ஃபார்மென்ஸ் நடிகை’னு பெயர் வாங்கினால் போதும்.”
‘‘ஹீரோக்களுடன் நடிச்ச அனுபவத்துக்கும், காமெடியன் ஒருத்தர் ஹீரோவா நடிக்கிற படத்துல நடிச்சதுக்கும் என்ன வித்தியாசம்?”
‘‘ஹீரோக்களோட நடிக்கும்போது ரொமான்ஸ், காமெடினு கலந்து கலந்து நடிக்கணும். ஆனா, ‘எலி’ முழுக்க முழுக்க காமெடிப் படம். வடிவேலு சார் பின்னியிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல நான் சிரிக்காத நிமிடமே கிடையாது.”
‘‘தமிழ் சினிமாவுல மறக்க முடியாத நபர்கள், நண்பர்கள்...?”
“இது எனக்கு ரொம்ப கஷ்டமான கேள்வியாச்சே? ஏன்னா, நான் யார்கூடவும் ரொம்ப நெருக்கமா இருக்க மாட்டேன். சொன்னா நம்ப மாட்டீங்க. தமிழ்ல விக்ரம், மாதவன், ஜெயம்ரவினு முக்கியமான ஹீரோக்களோட நடிச்சிருக்கேன். ஆனா, அவங்க போன் நம்பர்கூட என்கிட்ட இல்லை. நான் வேலை பார்த்தவங்கள்ல மறக்க முடியாத கேரக்டர்னா, டைரக்டர் ஷங்கர் சாரைச் சொல்லலாம். பெரிய நடிகைகள் எத்தனையோ பேர் இருந்தாலும் ‘அந்நியன்’ படத்துல என்னைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பு கொடுத்தார். மத்தபடி, எனக்கு சினிமா சாராத நண்பர்கள்தான் அதிகம்.”
‘‘படங்கள் எண்ணிக்கையில தெலுங்குதான் அதிகமா கண்ணுல படுது. ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கோ?”
‘‘தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்னு எனக்கு மொழி முக்கியம் கிடையாது. தெலுங்குல வாய்ப்புகள் அதிகம் வருது. மத்த மொழி ரசிகர்களைவிட தெலுங்குல என்னை அதிகமா ரசிக்கிறாங்கனு நினைக்கிறேன்.”
No comments:
Post a Comment