சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Apr 2015

சத்தமில்லாத சாராய என்கவுன்டர்கள்!

தீவிரவாதிகளை ராணுவம் என்கவுன்ட்டர் செய்தது, தமிழர்களை ஆந்திர போலீசார் என்கவுன்ட்டர் செய்தது என்ற வரிசையில் தமிழர்களை தமிழக டாஸ்மாக் சரக்கு மூலம் சத்தமில்லாமல்  என்கவுன்ட்டர் செய்து வருகிறது தமிழக அரசு. இந்த என்கவுன்டரில்  சாவு மெதுவாக  வரும். முதலில்  இதயம், மூளை, சிறுநீரகம் என படிப்படியாக உறுப்புகள் செயல் இழந்து சாவு உறுதியாகும்.

எதிர்பாராத சம்பவங்களின்போது, அபாயம் விளைவிக்கக் கூடிய வகையில் எதிராளி செயல்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவார் என்பது தெரியவந்தால், அப்போது அவர்களை கொல்லும் முடிவுக்கு வருவது என்கவுன்டர் எனச்சொல்லப்படுகிறது. ஆனால் தமிழக அரசின் என்கவுன்டர் என்பது, தன்னை அரசும் அரசாட்சி செய்வோரும் தங்கள் துயரத்திலிருந்து காத்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தருவார்கள் என நம்பி அவர்களுக்கு வாக்களித்தவர்கள் மீதான என்கவுன்டர். அந்த வகையில் முந்தைய என்கவுன்டரைவிட இது கொடூரமானது. 


புற்றுநோய்க்கு இந்தியாவில் 4 ஆண்டுகளில் 40 லட்சம் பேர் பலி என சுகாதாரத் துறை  தெரிவித்தாலும் "அரசு ஆதரவு பெற்ற மதுவும், புகையும்" இணை பிரியாத நண்பர்களாக மக்களை மண்ணுக்குள் புதைக்கும் எம தூதர்களாக  சுற்றி வருகிறது. இந்த " சுடுகாட்டிற்கு அனுப்பிய  சாதனைப் புள்ளி விபரங்களில்"    தமிழகத்தின் பங்கு எவ்வளவு என்பது சரியாகத் தெரியவில்லை. குடும்பத்தினருடன், உறவுகளுடன் கொண்டாடிய தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், திருமணம் போன்ற சுப காரியங்கள் எல்லாம் தற்போது டாஸ்மாக் கடையில் கொண்டாடப்படுகிறது. இன்றைய கள்ளக் காதல் கொலைகள், குடும்ப வன்முறைகளுக்கு துவக்கப் புள்ளியாக இருப்பது மதுதான் என்றால் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று அரசு சொல்வது  கேலிக்குரியதாக இருக்கிறது. பணம் இருந்தால் திருடத்தான் செய்வார்கள் எனவே மக்கள் பிச்சை எடுக்க வேண்டும் எனச் சொல்வது போல அமைச்சர் பேச்சு இருக்கிறது. மதுக்கடையை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் என்றால் சட்டம் ஒழுங்கு, மது ஒழிப்பு போலீசாருக்கு எதற்கு அரசு வேலை?? எங்கே  குடியால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்று அரசால்  நிருபிக்க முடியுமா?? 

யாரவது குடியால் பாதிக்கப்பட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள் என்று அரசு சொல்லிப் பார்க்கட்டும். மக்களின்  கண்ணீர் வெள்ளத்தில் ஆட்சியர் அலுவலகம் கரைந்து போகும். தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் வாகன விபத்து, பாலியல் வன்கொடுமைகள், பள்ளி மாணவர்களின் ஒழுக்க கேடு போன்றவற்றுக்கும் டாஸ்மாக் சரக்கின் "சாதனை" தான். கொடிய நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய் விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருவதும் டாஸ்மாக் மூலம் தான்.
அரசுக்கு ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடிகள்  கொட்ட வேண்டும் என்பதற்காக அப்பாவி ஏழைகள் சாம்பலாக வேண்டுமா? இலவசத் தாலி கொடுக்க இளம்பெண்கள் தாலி அறுக்க வேண்டுமா? ஆந்திராவில் இலவச மிக்சி , கிரைண்டர்  சுற்ற  தமிழன் பல்வேறு நோயால் வீட்டில் முடங்க வேண்டுமா?? . அரசு டாஸ்மாக் மூலம் எடுக்கும்  வருமானத்தை விட மக்களுக்கு செலவழிக்கப்படும்/மக்களால் செலவழிக்கப்படும்   மருத்துவ செலவு  இரு மடங்கு அதிகம்.

குடிபோதை கலாசாரம் ஒழிக்க திரையரங்குகளில் திரைப்படம் துவங்கும் முன் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் திரைப்படம் முழுவதும் குடி போதைக்காட்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு படம் முடிந்ததும் நேராக டாஸ்மாக் கடை செல்லும் அளவிற்கு டாஸ்மாக் காட்சிகளே நிரம்பிவழிகிறது. 

இது போன்ற குடி போதைக் காட்சிகள் உள்ள படத்தை தடை செய்ய வேண்டும். வன விலங்கை துன்புறுத்தினால் படம் தடை செய்யப்படுமாம். ஆனால் மனிதனை மலடாக்கும், சாவுக்கு அழைத்துச் செல்லும் குடி போதை காட்சிகளை சென்சார் போர்டு தடை செய்யாதாம். இந்த காட்சிகள் வரும்போது சிறிய எழுத்துக்களில் குடி குடியைக் கெடுக்கும் என அறிவுரை சொல்லுமாம்.
விலங்குகளுக்குள்ள மதிப்பு கூட மனிதனின் உயிருக்கு இல்லையா?. ஒரு காலத்தில் குடிப்பதை குற்ற உணர்ச்சியுடன் அணுகிய இளைய தலைமுறையை இன்று "நான் குடிகாரன்" என்று "பெருமையாக (??) "பேச வைத்துள்ளது தமிழனத்தின் அழிவின் ஆரம்பம். திரை உலகினர், தொலைக்காட்சி நெடுந்தொடர் தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க ஏழையின் வீட்டில் பெண்கள், குழந்தைகள் அழ வேண்டி இருக்கிறது. 

உண்மையிலேயே “வீரதீர செயல் விருது” மத்திய, மாநில அரசு வழங்க வேண்டும் என்றால் அந்தத் தகுதி  குடும்பம் மறந்த குடிகாரனுக்கு மனைவியாகி கஷ்டப்படும் தமிழ் பெண்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். கஷ்டப்பட்டாலும் குடும்பத்திற்காக உழைக்கும் மகளிரை அரசு  என்றைக்காவது  நினைத்துத் தான் பார்க் குமோ? ஒரு பக்கம் அடுத்தவர் குடியை கெடுத்து விட்டு மறு பக்கம் இலவசம் கொடுப்பது இனிமையான வாழ்வைத் தராது. அது ஒரு அரசுக்கு அழகாகவும் இருக்காது.

மாண்புமிகு அரசியல்வாதிகளே, உங்களிடம் உள்ள பணத்தில் அசதிக்கு அமெரிக்காவும், இருமலுக்கு இங்கிலாந்தும் சென்று ஓய்வெடுக்க முடி யும். ஏழைகளை நினைத்துப் பாருங்கள், குடியால் கிடைத்த நோயைத் தீர்க்க படுக்க இடம் கிடைக்காமல்  பாதி இரவில்  பாயோடு சென்று அரசு மருத்துவ மனையில் இடம் பிடிக்க காத்திருக்கும் அவல நிலை தெரி யுமா? அரசு இலவச மருத்துவமனையில்  பணம் கொடுத்தால் மட்டுமே படுக்கை வசதி என்ற நிலையும் இருக்கிறதும் உங்களுக்கு தெரியுமா? 

ஒட்டுமொத்த தமிழினமும் அழிவதற்குள் கேரளா போல மதுபானக் கடைகள் மூடப்படுமா? அரசுக்கு வருமானம் ஈட்ட இயற்கை வளங்கள் குவிந்துள்ளன. தனியார் ஏற்றுமதியாளர்கள் திருட்டுத்தனமாக கனிம மணல், கிரானைட் மூலம்  பல ஆயிரம் கோடி சம்பாதிக்கும் போது அரசே அவற்றை கையகப்படுத்தி ஏற்றுமதி செய்து டாஸ்மாக் சரக்கு வருமானத்தை ஈடு கட்ட முடியாதா? 

கூட்டுக் குடி  நீர் திட்டத்திற்கு, குடிநீர் வசதி பெற உலக வங்கி, மத்திய அரசிடமிருந்தெல்லாம் நிதிபெறும்  நம் அரசு   "குடிகாரர்களை" மீட்க நிதி பெற்று டாஸ்மாக் கடைகளை மூடினால் என்ன? விஷம் வைத்துக் கொன்றால் சிறைத் தண்டனையும், மது போன்ற  மெதுவாகக்   கொல்லும் விஷம் கொடுத்தால் எந்த தண்டனையும் கிடையாதா என்பதை நீதி மன்றங்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். உணவில் கலப்படம் என்றால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லும் சட்டம் உயிரைக் கொல்லும் மது விற்பனையை வேடிக்கை பார்ப்பது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் மது விற்பனை உயர்கிறது; கூடவே நோயாளிகள் எண்ணிக்கையும், சாவும். தமிழரை கொல்லும் சத்தமில்லாத என் கவுன்ட்டர் தானே இது. 

ஏழைகளின் வீடுகளில் குடியால் விதவையான ஏழைப்பெண்களின் அழுகுரல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. இலவச மிக்சி , மின் விசிறி , கிரைண்டர் இவைகளின் சத்தத்தில் அந்த அபலைப் பெண்களின் அழுகுரல் சத்தம் அரசுக்கு கேட்காமல் போய்விடுகிறது. அரசுகளே, இலவசம் தவிர்த்து குடியை ஒழிக்க பாடுபடுங்கள். இதை உங்களுக்கு வாக்களித்த ஒரு குடிமகனாய் கேட்கிறேன். 

செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா ? 



No comments:

Post a Comment