சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Apr 2015

119 காலி பணியிடத்தை நிரப்ப கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

119 காலி பணியிடங்களுக்கு தலா ஒன்றேமுக்கால் லட்சம் வாங்கித்தரும்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார் என்றும், அமைச்சர் சொன்ன தகவலைத்தான் சொன்னேன், முத்துக்குமாரசாமியை நான் மிரட்டவில்லை என்றும் வேளாண்மைத்துறை தலைமை பொறியாளர் செந்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த வேளாண்மை துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கு 7 டிரைவர்களை நியமிப்பது தொடர்பாக மேலிடம் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தலைமை பொறியாளர் செந்தில், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், " தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறையில் தலைமை பொறியாளராக நான் பணியாற்றி வருகிறேன். எனது பணியில் எந்த வித குற்றச்சாட்டும் இல்லாமல் பணியாற்றி வந்து உள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் வேளாண் பொறியியல் துறையில் 119 டிரைவர் காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில் பதிவு மூப்பு பட்டியலை தயார் செய்தேன். ஆனால் அப்போது வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி 119 காலி பணியிடங்களுக்கும் ஒரு இடத்திற்கு ஒன்றேமுக்கால் லட்சம் தனக்கு வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அமைச்சர் சொன்னதை எங்களால் மீற முடியவில்லை. எனவே இது பற்றி நான் தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா உதவி செயற்பொறியாளர்களிடமும் தொடர்பு கொண்டு ஒவ்வொரு காலி பணியிடத்திற்கும் ஒன்றேமுக்கால் லட்சம் தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டேன். நெல்லையில் பிரச்னை ஏற்பட்டது. நெல்லை மாவட்ட வேளாண் பொறியியல் துறையில் காலியாக இருந்த 7 டிரைவர் பணியிடங்களுக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 7 பேர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர் என்றும், அந்த தேர்வுக்கு கலெக்டர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்றும் பொறியாளர் முத்துக்குமாரசாமி கூறினார்.

உடனே நான் முத்துக்குமாரசாமியிடம், அமைச்சர் பணம் கேட்கிறார், நீங்கள் செய்து உள்ளதை கேள்விப்பட்டால் அவரது கோபத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டி இருக்கும். பேசாமல் பணத்தை வசூல் செய்து கொடுத்துவிடுங்கள் என்று எச்சரித்தேன். சென்னையில் வேளாண்மைத்துறை பொறியாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு வரும்போது அமைச்சர் கேட்ட பணத்தை கொண்டு வாருங்கள் என்று கூறினேன். ஆனால் முத்துக்குமாரசாமி பணம் கொண்டு வரவில்லை. அப்போது நான், அமைச்சர் கேட்ட பணத்தை ஏன் கொண்டு வரவில்லை? என்று முத்துக்குமாரசாமியிடம் கேட்டேன். அதற்கு அவர், கலெக்டர் ஒப்புதல் கொடுத்து பணி நியமனமும் முடிந்து விட்டது என்றார். இதுபற்றி நாங்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதற்கு அவர், பரவாயில்லை. பணி நியமனம் உத்தரவு பெற்றுள்ள 7 பேரிடமும் தலா ஒன்றேமுக்கால் லட்சம் வசூல் செய்து தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த தகவலை நாங்கள் முத்துக்குமாரசாமியிடம் கூறினோம். ஆனால் அதன் பிறகும் அவர் பணம் வசூல் செய்து தரவில்லை. இதற்கிடையே அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டதால் நானே முத்துக்குமாரசாமியிடம் 3 தடவை செல்போனில் பேசினேன். எந்த வகையிலாவது பணத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறினேன். இந்த நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக நெல்லை மாவட்ட வேளாண் பொறியியல் துறை கூடுதல் உதவி பொறியாளர் வெள்ளையா எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதை கேட்ட நான் மிகவும் வேதனை அடைந்தேன்.


முத்துக்குமாரசாமியின் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அதிகாரிகளை அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.முத்துக்குமாரசாமியின் வாரிசுகளில் யாருக்காவது ஒருவருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கலாம் என்று மனு எழுதி வாங்கி வருமாறு கூறினேன். ஆனால் முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர், நாங்கள் வறுமையில் வாடவில்லை. எனவே வேலை வேண்டாம் என்று கூறி மனு எழுதித்தர மறுத்துவிட்டனர். முத்துக்குமாரசாமியை நான் ஒருபோதும் மிரட்டவில்லை. அமைச்சர் சொன்னதைதான் செய்தேன்" கூறியுள்ளார்.


No comments:

Post a Comment