சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Oct 2015

ஹெல்மெட் இல்லையா... காசு கொடு அல்லது காதைக் கிழி!

துரையில் ஹெல்மெட் போடாததற்காக ஒருவரை போலீசார் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் காது கிழிந்து ரத்தம்  வர, 108 ல் கொண்டு செல்லும் அளவிற்கு காதை செவிடாக்கிய சம்பவம் நடந்துள்ளது. 

மதுரை கோவில் பாப்பாகுடியைச் சேர்ந்த பி.இ., பட்டதாரியான விமல்குமார்,  கட்சிக் கரை வேட்டி கட்டாத, அரசியல் பின்புலம், அதிகார வர்க்க பலம் , பணபலம் ஏதும் இல்லாத நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஹெல்மெட் போடாததால்  காவலர்கள் வண்டியை மறிக்க,  இதில் நிலைதடுமாறி காவலர்கள் மீது விழுந்தவரை காவலர்களும், போக்குவரத்து ஏட்டு, மற்றும் இதர போலீசார் சூழ்ந்து கொண்டு  கடுமையாகத் தாக்கினர். இதில் நினைவிழந்த அவர் 108 ல்  அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

ஒரு வேளை  அந்த விமல்குமார் ஆம்பூரில் தனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி இருந்தாலோ, ஏ டி எம் கார்டை காண்பித்திருந்தாலோ, தனது ஜாதித் தலைவர் நாளை மறியல் செய்வார் எனச் சொல்லி இருந்தாலோ பயந்து விட்டிருப்பார்கள். வட மாநிலத்தவராக  இருந்தால்  உயர் அதிகாரிக்கு உறவினராக இருப்பார் என்று போலீசார் ராஜ உபச்சாரம் செய்திருப்பார்கள். அப்பாவி என்பதால் போலீசார் ஒற்றுமையாக  சேர்ந்து வீரத்தை நிலை நாட்டி விட்டார்கள். 

முறைகேடாக பல ஆயிரம் கோடிகள் சொத்து குவித்த அரசியல்வாதியைக் கூட சிபிஐ அதிகாரிகள் இப்படி அடித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒரு ஹெல்மெட்டிற்கு இப்படி செவி கிழிய அடிக்கும் இவர்கள்தான் மக்களின் நண்பனா?

விபத்தில் சிக்கியவர்களை 108 ல் அனுப்புவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் ஹெல்மெட் போட  மறந்தவர்களை தடுத்து கொடூரமாகத் தாக்கி, 108 ல் அனுப்புவார்கள் என்று யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. 

ஹெல்மெட் போடாதவர்களை விரட்டிப் பிடிக்கும் போலீசார், மதுரையில் கிரானைட்  மலையை மடக்கி கப்பல் கப்பலாக ஏற்றுமதி செய்தபோது ஏன் விரட்டிப் பிடிக்கவில்லை? சட்டப்படி நடக்கச்  சொல்லும் காவலர்கள்  அப்போதெல்லாம் சட்டம் மறந்து போனார்களா?  தலைக்கவசம் உயிர் காக்கும், தலைக் கவசம் போடாதவர்களை உயிர் எடுப்போம் என்ற பாணியில் போலீசார் மக்களை டார்ச்சர் செய்து வசூல் ஒன்றே போக்குவரத்து போலீசாரின் சாதனையாக தெருவெங்கும் நிற்கின்றனர்.
உயர் படிப்பு படித்தாலும் பணம், அரசியல் அதிகார பலம்  இல்லையென்றால் போலீசாரின்  அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை மக்கள் பார்த்து அரண்டுபோனார்கள் அன்று. திரும்பிய பக்கமெல்லாம் போக்குவரத்து நெரிசலால் நகரமே நகர முடியாமல் திணறும் நேரத்தில், ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் நின்று கொண்டு ஹெல்மெட் போடாதவர்களை தீவிரவாதிகள் போல விரட்டிப்பிடிப்பது  உண்மையில் மக்கள் மீதான அக்கறையா அல்லது ...........?  

வசூலில் காட்டும் அக்கறையை கொஞ்சம் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதில் காண்பிக்கிறார்களா இவர்கள். மதுரையில் சென்ற வாரம் கூட இரு குண்டுகள் பேருந்தில் வெடித்ததாக செய்திகள் வந்தன. கொலையும், கொள்ளையும் அன்றாடச் செய்தியாகி விட்டன. கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு பல நூறு வழக்குகள் தேங்கி உள்ளன. அவற்றில் எல்லாம் காட்டாத அக்கறை கேவலம் ரூ.100க்காக நடு ரோட்டில் நின்று  வசூல் செய்து, பணம் இல்லாதவரை விரட்டிச் சென்று பிடித்து அடிப்பது நீதிமன்றம் தானாகவே விரைந்து விசாரித்து முடிவு கட்ட வேண்டிய வழக்கு.

ஒரு பெரிய வழிப்பறி திருட்டுக் கும்பல் கூட ,போக்குவரத்து போலீசாரிடமிருந்து தப்பித்து விடலாம். ஆனால் ஹெல்மெட் போடாத மக்கள், போக்குவரத்து போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றாகிவிட்டது. 

போலீஸ் பாற்றக்குறை, அதிக குற்றச் செயல்கள், மோசமான சாலை வசதி, வாகன நெரிசல் உள்ள மாநிலத்தில், போலீசாரை ஏன் அபராதம் வசூலிக்கும் வேலைக்கு  அனுப்ப வேண்டும்?
ஹெல்மெட் போடாதவர்களை வாகன  எண் மூலம் அவர்கள் கட்டும் ஆண்டு  வாகன காப்பீடு அல்லது வண்டியை விற்கும் முன் மொத்த அபராதம், வங்கி கணக்கில்  அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து காலை முதல் இரவு வரை போலீசாருக்கு வசூல் செய்வதை மட்டுமே வேலையாக கொடுக்க வேண்டுமா?

நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறும்  இன்ஸ்பெக்டரின் வேலை, அபராத ரசீது கிழித்து கொடுப்பது. இது  நம் மக்களின் வரிப்பணம் எப்படி வீணாக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தை அவமதித்ததால்  மதுரை உயர் நீதிமன்றக் கிளையை மூடலாமா?  என்று கேள்வி கேட்ட நீதிபதிகள், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த   காவலர்களை, பொது மக்களை அடித்து துன்புறுத்தும் ஒரு காவலரைக் கூட தானாகவே வேலையை விட்டு நிறுத்த சொல்லும் அதிகாரம் இல்லாமல் போய்  விட்டதா?

மக்களுக்காகவே சட்டம் என்றால், அந்த சட்டம் அப்பாவிகள் காது  கிழிய அடி வாங்கும் வரை வேடிக்கை மட்டுமே  பார்த்தால், அந்தச் சட்டம்  யாருக்கு துணை நிற்கும் என்பதே கேள்வியாக உள்ளது.

ஹெல்மெட்  போடாதவர்களை போலீசார் அல்லாத தனிப்பிரிவின் மூலம் நடமாடும்  நீதிமன்றம்  மூலம் மட்டுமே அபராதம் வசூலிக்கச் செய்ய வேண்டும். அன்றாட ஹெல்மெட் அபராத தொகை விபரத்தை ரசீது புத்தக எண் வாரியாக,  மாவட்ட வாரியாக   நீதிமன்றம் வசம் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டும். அப்பாவிகளிடம் வீரத்தைக்   காண்பிக்கும் போலீசாரை இலங்கை கடற்படை, காஷ்மீர்   எல்லைக்கு அனுப்பி  வீரத்தை நிரூபிக்க  நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். 

விபத்தில் தப்பிக்க கட்டாய தலைக்கவசம் தேவை என்று சொல்லும் நீதிமன்றம், போலீசாரின் தவறான அடாவடி  அணுகுமுறைக்கு கட்டாய பணி நீக்க உத்தரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது  சொந்த சம்பளம், இதர பிடித்தத்தில்  இருந்து இழப்பீடு வழங்கவும்  உத்தரவிடும் வரை    ஹெல்மெட் போட்டாலும் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்பது உறுதி.

No comments:

Post a Comment