சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Oct 2015

கடத்தலுக்காக மகளை காதலிப்பதுபோல் நடிக்க வைத்தேன்: கைதான பெண் வாக்குமூலம்!

கடத்தலுக்காக மகளை காதலிப்பதுபோல் நடிக்க வைத்தேன் என்று சென்னை தொழில் அதிபர் மகன் கடத்தல் வழக்கில் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசுந்தரம். இவர் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். மூலிகை அழகு சாதன பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை முக்கிய தொழிலாக இவர் செய்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் (19), காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக். 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில், அபிஷேக் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் தனது நண்பனின் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது தாயாரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. அபிஷேக்கை பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடிய நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அபிஷேக்கின் வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். 

போனில் பேசிய மர்ம நபர், அபிஷேக்கை கடத்தி சிறை வைத்துள்ளோம். ரூ.5 கோடி பணத்தை கொடுத்தால் அபிஷேக்கை பத்திரமாக திருப்பி அனுப்புவோம் என்றும், போலீசில் புகார் கொடுத்தால் அபிஷேக்கின் உடல்தான் பார்சலில் வரும் என்றும் மிரட்டி உள்ளார். இது தொடர்பான புகாரை பெற்று கொண்ட போலீசார் 7 தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரித்து வந்தநிலையில், சினிமா பாணியில் கடத்தல்காரர்களை காரில் விரட்டிச் சென்ற போலீசார், குர்ஷித் என்ற பெண் மற்றும் ரிஸ்வான், அகமதுபெகாத், சதாம்உசேன், செய்யது யாசீர் கனீபா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். 

மேலும், தப்பி ஓடிய மதன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வரும் போலீசார், ''மதன் சென்னையை அடுத்த தொழுதூரைச் சேர்ந்தவர். அவர் முதலில் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்த குர்ஷித்துடன் நெருங்கி பழகி இருக்கிறார். அந்த பழக்கத்தில் புனிதமான காதலை கடத்தலுக்கு பயன்படுத்தியது மட்டும் அல்லாமல், அபிஷேக் மீது பாலியல் புகாரும் கூறி இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள குர்ஷித் என்ற பெண், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''சென்னை தொழில் அதிபர் ரவிசுந்தரத்தின் மகன் அபிஷேக்கை கடத்தி பணம் பறிக்கும் திட்டத்தை மதன் என்னிடம் சொன்னவுடன் முதலில் நான் சம்மதிக்கவில்லை. திட்டத்தை நிறைவேற்றினால் ரூ.10 லட்சம் பணம் தருவதாக சொன்னார். மேலும், எனது ஊர்க்காரர்கள் 3 பேருக்கும் ரூ.10 லட்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ரவிசுந்தரம் போலீசுக்கு போகமாட்டார். எளிதில் அவரிடம் பணத்தை பிடுங்கிவிடலாம் என்றும் மதன் தெரிவித்தார். இதனால் எனது மகளை அந்த கடத்தல் திட்டத்தில் காதல் கருவியாக பயன்படுத்தினோம்.

அபிஷேக்கின் செல்போன் நம்பரை மதன்தான் கொடுத்தார். அதை வைத்து எனது மகளை அபிஷேக்கை காதலிப்பதுபோல செல்போனில் பேசி நடிக்க வைத்தோம். திட்டப்படி எனது மகளை அபிஷேக்கிடம் பேச வைத்து, கோட்டூர்புரம் வரவழைத்தோம். அங்கு நான், எனது மகள் மற்றும் மதன் அவருடைய கூட்டாளிகள் மற்றும் எனது ஊர்க்காரர்கள் 3 பேர் 2 கார்களில் காத்திருந்தோம். எனது மகளை அபிஷேக் நேரில் பார்க்கவில்லை. நாங்களும் அவரை பார்த்ததில்லை.

அபிஷேக் கோட்டூர்புரம் வந்ததும், அவரை மதன்தான் அடையாளம் காட்டினார். அபிஷேக் அருகில் வந்தவுடன் மதன் காரில் வற்புறுத்தி ஏற வைத்தார். பின்னர் காரை ஓட்டிச்சென்றோம். அந்த காரில் மதன், அவருடைய கூட்டாளிகள் மற்றும் நான், எனது மகள் இருந்தோம். அபிஷேக்கை கண்ணை கட்டி ஊரப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். எனது வீட்டில் உள்ள ஒரு இருட்டு அறையில் தங்க வைத்தோம். சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மதன் மிரட்டினார். இதனால் அபிஷேக் சத்தம் போடவில்லை.

ஞாயிறு அன்று நள்ளிரவு, தொழில் அதிபர் ரவிசுந்தரம் பணத்தை கொடுக்கப் போகிறார் என்றும், எனவே அபிஷேக்கை காரில் அழைத்துச் சென்று, சென்னை விமான நிலையம் அருகில் இறக்கி விடப்போகிறேன் என்று மதன் அவரை அழைத்துச் சென்றார். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. போலீசார் என்னை கைது செய்த பிறகுதான், கடத்தல் திட்டத்தை போலீசார் முறியடித்து விட்டனர் என்பது எனக்கு தெரிந்தது. அபிஷேக்கை கடத்தியவுடன், எனது மகளை பஸ்சில் ஏற்றி திருச்சியில் உள்ள எனது தாயார் வீட்டுக்கு போகும்படி அனுப்பிவிட்டேன். அவளும் திருச்சி சென்று விட்டாள்" என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்த வழக்கில் குர்ஷித்தின் மகள் பானுவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் திருச்சி சென்றுள்ளனர்.




No comments:

Post a Comment