சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Oct 2015

"நம்மளை பார்த்து பயப்படுது நாசா !”

ந்திய விண்வெளித் துறையின் பெருமைமிகு அடையாளம், விஞ்ஞானி சிவன். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஒவ்வொரு செயற்கைக்கோளின் பின்னணியிலும், இவரது அறிவும் உழைப்பும் இருக்கின்றன. 2,000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 1,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் என, பிரமாண்டமாக விரிந்திருக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பு ஏற்றிருக்கிறார் இந்தத் தமிழர். பலகட்டப் பரிசோதனைகளைக் கடந்து சிவனைச் சந்தித்தால், ''வாங்க வாங்க... நானும் விகடன் வாசகன்தான். சுஜாதாவின் தீவிரமான ரசிகன். 'என் இனிய இயந்திரா’வை ஆர்வமா வாசிச்சிருக்கேன். இப்போ நானே ராக்கெட் அனுப்புறேன்'' - கலகலவெனச் சிரிக்கிறார். அவரது மேஜையைச் சுற்றி எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்களின் மினியேச்சர் மாடல்கள். 
''எனக்கு சொந்த ஊர், நாகர்கோவில் பக்கம் வல்லங்குமாரவிளை கிராமம். எங்க அப்பா கைலாச வடிவுக்கு, மாங்காய் வியாபாரம். 'எவ்வளவு வேணும்னாலும் படி. ஆனா, உன் படிப்புக்கு உண்டான செலவை நீயே வேலை செஞ்சு சம்பாதிச்சுக்க’ - இதுதான் அவர் எனக்குச் சொன்னது. அதனால் வேலை செஞ்சுட்டே படிச்சேன். காலேஜ்ல பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்ல ஃபர்ஸ்ட் வந்தேன். என் ஆசிரியர், 'நீ நல்லா படிக்கிற. எம்.ஐ.டி-யில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படி’னு சொன்னார். அந்த வார்த்தையையே அப்பதான் நான் கேள்விப்படுறேன். இருந்தாலும் நம்பிக்கையோடு தேர்வு எழுதி, எம்.ஐ.டி-யில் சேர்ந்தேன். அதே துறையில் எம்.இ படிச்சு, விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் ஒரு பொறியாளர் ஆனேன்.
சின்ன வயசுல என்னோட அதிகபட்சக் கனவு, எங்க கிராமத்துக்கு மேல பறக்கிற விமானத்துல என்னைக்காவது ஒருநாள் போகணும்கிறதுதான். 'இந்த ஏரோபிளேன் எப்படிப் பறக்குது? நாமளும் இதுபோல ஒண்ணு செஞ்சு பறக்கவிடணும்’னு நினைப்பேன். சின்ன வயசுல இருந்தே நான் நினைச்சது எதுவுமே நடக்கலை. ஒவ்வொரு முறையும் நான் ஆசைப்படுறது நிராகரிக்கப்படும். இருந்தாலும் கிடைச்சதை மகிழ்ச்சியுடன் ஏத்துப்பேன். ஆனால், 'எல்லாம் நன்மைக்கே’னு சொல்றதுபோல, க்ளைமாக்ஸ்ல எனக்கு எல்லாமே சுபமாத்தான் முடியும். அப்படித்தான் நான் விஞ்ஞானி ஆனதும்.''
''பி.எஸ்.எல்.வி புராஜெக்ட் திட்டம், வடிவமைப்பு எல்லாவற்றின் பின்புலத்தில் நீங்கள் இருந்தீர்களா?''
''1983-ம் வருஷம், முதன்முதலில் பி.எஸ்.எல்.வி (Polar Satellite Launch Vehicle) புராஜெக்ட் தொடங்க, அரசாங்கம் அனுமதி வழங்கியது. அதுக்கு ஒரு வருஷம் முன்னால்தான் நான் வேலையில் சேர்ந்தேன். விண்வெளி ஆராய்ச்சியில் ஆனா ஆவன்னாகூடத் தெரியாது. மற்ற விஞ்ஞானிகளுக்கும் அந்த புராஜெக்ட் புதுசுதான். ஒரு குழந்தைபோல எல்லாரும் தத்தித் தத்தி கத்துக்கிட்டோம்.
ஒரு ராக்கெட்டில் என்ன மாதிரி சாஃப்ட்வேர் பயன்படுத்தணும், ராக்கெட்டின் டிசைன் எப்படி இருக்கணும், எவ்வளவு உயரம், எவ்வளவு அகலம், எந்தப் பாதையில் போகணும்... இவற்றை முடிவுசெய்வது என் வேலை. ஹார்டுவேர் பகுதியைத் தவிர்த்த மற்ற வேலைகள் எல்லாத்தையும் கவனிக்கணும். அப்போ நான் இரவு-பகலா முயற்சி செஞ்சு, ஒரு அப்ளிகேஷனை உருவாக்கினேன். அதுக்குப் பெயர் 'சித்தாரா’.  (SITARA - Software for Integrated Trajectory Analysis with Real time Application).  இது, ராக்கெட் பற்றிய முழு விவரங்களையும் டிஜிட்டலா சேகரிக்கும். அதைப் பயன்படுத்தி, ராக்கெட்டின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கலாம். சிம்பிளா சொல்லணும்னா, ஒரு கல்லைத் தூக்கி வீசும்போது, அந்தக் கல் எந்தத் திசையில், எவ்வளவு டிகிரியில், எவ்வளவு நேரத்தில், எந்த இடத்தில், எவ்வளவு அழுத்தத்தில் விழும்னு சொல்வதுதான் 'சித்தாரா’. ஏதாவது தவறு நடந்திருந்தால், உடனே கண்டுபிடிச்சு, சரி செஞ்சுடலாம். இதைப் பயன்படுத்திதான் பி.எஸ்.எல்.வி அனுப்பினாங்க. இப்போ வரை நம்ப நாட்டில் இருந்து ஏவப்படும் எல்லா செயற்கைக்கோள் ராக்கெட்களும் 'சித்தாரா’ அப்ளிக்கேஷனைப் பயன்படுத்திதான் அனுப்பப்படுது. இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு என் பங்களிப்பில் முக்கியமானது இது.
அதேபோல பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஒவ்வொரு நிலையிலும் எப்படி இருக்கணும், முதல் ஸ்டேஜ்ல எந்த பாகம் விழணும், அடுத்த பாகம் எவ்வளவு தூரம் பயணிக்கணும், கடைசியா செயற்கைக்கோளை மட்டும் நிலையான பாதையில் எப்படி நிறுத்தணும்... இதை எல்லாம் 'Sequence’ னு சொல்வாங்க. இதை எல்லாம் திட்டமிட்டேன். கிட்டத்தட்ட 12 வருடப் போராட்டத்துக்குப் பிறகு 1993-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி விண்ணில் பாய்ந்தது. ஆனால், தோல்வி. என்னன்னு விசாரிக்கும்போதுதான் ரொம்ப ரொம்பச் சின்னத் தவறு இருந்ததைக் கண்டுபிடிச்சோம். கணக்கு ஃபார்முலாவில் ப்ளஸுக்குப் பதிலா மைனஸ் இருக்கிறது மாதிரி சின்னத் தவறுதான். ஆனா, மிகப் பெரிய விளைவு. அப்புறம் அணு அணுவா அலசி சரிசெஞ்சோம். அதுக்குப் பிறகு ஏவப்பட்ட எல்லா பி.எஸ்.எல்.வி ராக்கெட்களும் வெற்றிதான். ராக்கெட் விடுறதுக்குப் பெரிய சவாலா இருக்கிறது காற்று. அதிவேகக் காற்றும், மிதமான காற்றும்கூட, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராக்கெட்டின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிச்சுடும். இங்கே 10 கிலோமீட்டர் வேகத்துல காற்று அடிச்சதுன்னா, மேல போகப் போக 70 கிலோமீட்டர் வேகத்துல அடிக்கும். இவ்வளவு அழுத்தத்தைத் தாங்காமல் ராக்கெட் விழுந்துரும். இதனால்கூட சில ராக்கெட்டுகள் தோல்வி அடைஞ்சிருக்கு. இதற்குத் தீர்வுகாண ‘Day of Launch wind bias’ அப்படிங்கிற புதிய மென்பொருளை உருவாக்கினேன். இந்த மென்பொருள் இப்ப வரைக்கும் இந்திய விண்வெளித் துறையில் ஒரு 'பெஞ்ச் மார்க்’.''
''விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் அடிக்கடி கிளம்புவதுபோல, எதிர்காலத்தில் ராக்கெட்டுகளை அடிக்கடி செலுத்த முடியுமா?''
(பலமாகச் சிரிக்கிறார்...) ''நிச்சயமா... என் டீம், இதற்கான ஆய்வில்தான் இருக்கு. இந்த ஆராய்ச்சிக்குப் பெயர் ‘Reusable launch Vechicle’. நாம் செலுத்துற ராக்கெட் எல்லாம் ஒரே ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். ஒரு ராக்கெட்டை 500 கோடி ரூபாய் செலவுசெய்து தயாரித்தால், அது விண்ணில் பாயும்போது
400 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கடலில்தான் விழும். அந்தப் பொருட்களைத்  திரும்பவும் கொண்டுவந்து பயன்படுத்த முடிந்தால், உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் நாம் உயர்ந்த இடத்துக்குப் போயிருவோம். ஆனால், அது மிகப் பெரிய சவால். ஒரு ராக்கெட் விண்ணில் பாயும்போது சுமார் 37,000 கிலோமீட்டர் வேகத்தில் போகும். சுமார் 90 நிமிடங்களில் உலகையே ஒருமுறை சுற்றிவந்துவிடும். இதை மீண்டும் பத்திரமாகப் பூமிக்குக் கொண்டுவர, இன்னொரு ராக்கெட் தேவை. அப்படியே பத்திரமாகக் கொண்டுவந்தாலும் காற்று மண்டலத்தில் அவ்வளவு வேகத்தில் வரும்போது ராக்கெட் எரிந்து சாம்பல் ஆகிரும். ஆனால், இவ்வளவு தடங்கல் இருப்பதைப் பார்த்து மலைக்கக் கூடாது. ஒருநாள் இது சாத்தியம் ஆகும்.''
''இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளைப் பற்றி நாசா விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?''
''நம்மைப் பார்த்து ரொம்பப் பயந்துபோய் இருக்காங்க. 'கிராவிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தின் பட்ஜெட்டைவிட, நம்ம 'மார்ஸ் மிஷன்’ பட்ஜெட் குறைவு. இதைப் பார்த்துதான் பல நாடுகளுக்கும் பயம். 'நமக்கு 100 ரூபாய் செலவு ஆகுது. இந்தப் பசங்க மட்டும் எப்படி
10 ரூபாய்ல அதே வெற்றியைக் கொண்டுவந்துடுறாங்க?’னு ஆச்சர்யமாகப் பார்க்கிறாங்க. அதேபோல எந்த நாடும் க்ரையோஜெனிக் இன்ஜினை மற்ற நாடுகளுக்குத் தர மாட்டாங்க. இப்ப நாம் தயாரிச்ச க்ரையோஜெனிக் இன்ஜினைப் பயன்படுத்தி, 'நாசா’ செயற்கைக்கோள் ஏவப்போகுது.''
'' 'இன்டர்ஸ்டெல்லர்’ படம் பார்த்திருக்கீங்களா... அதில் வருவதுபோல டைம் டிராவல் சாத்தியமா?''
சிரிக்கிறார்... ''நான் பொதுவா சினிமா பார்க்கிறது இல்லை. என் மகன்கள் சொல்லிதான் 'இன்டர்ஸ்டெல்லர்’ பார்த்தேன். படம் முடியும்போது அசந்துட்டேன். அந்தப் படத்துல வர்றதுபோல டைம் டிராவல், மாற்றுப் புது உலகம், வேறு கிரகத்தில் விண்வெளி ஆராய்ச்சி எல்லாமே சாத்தியம்தான். இப்போ கற்பனைக்கு மீறியதா இருந்தாலும், ஒருநாள் நம் கடந்த காலங்களைப் பார்க்கலாம். நாம் செய்த தவறுகளைச் சரிசெய்யலாம். ஐன்ஸ்டீன் சொன்ன கோட்பாட்டின்படி நடக்குமானால், டைம் டிராவலும் சாத்தியமே!''
''உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் எப்படி... ஒருவேளை நீங்கள் அனுப்பும் ராக்கெட் தோல்வி அடைந்தால், உங்கள் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பாதிக்கப்படுமா?''
பலமாகச் சிரிக்கிறார்... ''விண்வெளித் துறையில் வெற்றி-தோல்வி எல்லாமே ஒரு பாடம்தான். இதுல ஒரு புராஜெக்ட் வெற்றி அடைஞ்சா பதவி உயர்வு, ஒரு புராஜெக்ட் தோல்வி அடைஞ்சா சம்பளக் குறைவுனு எல்லாம் கிடையாது. நாங்க எல்லாருமே மத்திய அரசு ஊழியர்கள். ஆனால், மற்ற அரசு அலுவலகங்கள் மாதிரி நேர வரையறை இங்கே கிடையாது. இங்கே 24 மணி நேரமும் இயங்குகிறோம்.''
''உங்க ரோல்மாடல் யார்?''
''ரோல்மாடல்னு வெச்சுக்க, எனக்குச் சின்ன வயசில் இருந்தே பிடிக்காது. ரோல்மாடல்னு இல்லாம, என் அனுபவத்துல நான் பார்த்த சிறந்த மனிதர்னா, அது அப்துல் கலாம். தன்னுடன் வேலை செய்றவங்களுக்கு, தன்னால முடிஞ்ச உதவிகளைச் செய்வார். கலாம், எனக்கு ரொம்ப சீனியர்; ரொம்ப அமைதியானவர்; யாராவது சின்னதா சாதித்தாலே, பெருசா பாராட்டுவார். நான் 'சித்தாரா’ போன்ற ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு மென்பொருள் உருவாக்கியதால், என்னை எப்பவும் 'சாப்ட்வேர் இன்ஜினீயர்’னுதான் கூப்பிடுவார். அவரது மரணம், நம் நாட்டுக்கும் விண்வெளித் துறைக்கும் பெரிய இழப்பு.''
''உங்க பொழுதுபோக்கு என்ன?''
''பழைய சினிமா பாடல்களைக் கேட்கிறது எனக்குப் பிடிக்கும். எங்க வீட்டுல 400 பழைய சினிமா பாடல் கேசட் சேகரிச்சுவெச்சிருக்கேன். ஒருநாள் என் இளைய மகன், 'என்னப்பா இன்னமும் கேசட் போட்டுப் பாட்டு கேட்கிறீங்க?’னு சொல்லிட்டு, இன்டர்நெட்ல இருந்து என் செல்போனுக்கு பாடல்களை எல்லாம் டௌன்லோடு செஞ்சு கொடுத்தான். நான் ராக்கெட் விடுற
விஞ்ஞானியா இருக்கலாம். ஆனால், செல்போன்ல பாட்டு டௌன்லோடு பண்றதை சின்னப் பசங்கதான் நமக்குச் சொல்லித்தர்றாங்க. இப்பவும் 'ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்னு புதுசு புதுசா நிறைய அப்ளிக்கேஷன்ஸ் வந்திருக்கு. வாங்க’னு பையன் கூப்பிடுவான். 'இருக்கிற புத்தகங்களைப் படிக்கவே அப்பாவுக்கு நேரம் இல்லை. அதெல்லாம் வேண்டாம்’னு சிரிப்பேன்!''  

No comments:

Post a Comment