'கிராமப் பூசாரிகள்’ மாநாட்டை நடத்தி முடித்திருக்கும் சீமான், செஞ்சிக்கோட்டையை மீட்கும் 'மாயோன் பெரு விழா’ அறிவித்திருக்கிறார். பனங்காட்டு இசக்கியம்மனுக்கும் கொல்லங்குடி காளிக்கும் இறை வணக்கம் செய்கிறார்கள் 'நாம் தமிழர்’ தொண்டர்கள். 'பண்பாட்டை மீட்கும் போரில் வீரத்தமிழர் முன்னணி’ எனப் படை கட்டும் சீமான், இந்தத் தேர்தலில் எதை மீட்க இருக்கிறார்?’
''திடீரென 'செஞ்சிக்கோட்டை மீட்புப் போர்’ அறிவித்திருக்கிறீர்களே... செஞ்சிக்கோட்டைக்கு என்ன ஆபத்து?''
''செஞ்சிக்கோட்டையை 'தேசிங்கு ராஜா கோட்டை’ எனச் சொல்வதே அயோக்கியத்தனம். செஞ்சிக்கோட்டை என்பது செஞ்சி மன்னன் ஆனந்தக் கோன், அவனுடைய மகன் கிருஷ்ண கோன், அவனுடைய மகன் கோனேர் கோன் ஆகியோர் வழிவழியாக ஆண்டுவந்த கோட்டை. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த செஞ்சிக்கோட்டை மீது படையெடுத்த தேசிங்கு ராஜா, கோனேர் மன்னனின் வாரிசுகளை வீழ்த்தி கோட்டையை வென்றதால், அது தேசிங்கு ராஜா கோட்டை ஆகிவிட்டதாம். 'செஞ்சிக் கோட்டையைக் கட்டியது யார்?’ என இன்று குழந்தைகளிடம் கேட்டால், 'தேசிங்கு ராஜா’ எனச் சொல்லும் அளவுக்கு வரலாற்றை மறைத்து, குப்பத்தின் பெயரை 'கோனேரிக்குப்பம்’ என ஆக்கிவிட்டார்கள். தமிழன் வரலாற்றின் மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும். அதன் ஒரு பகுதிதான் செஞ்சிக்கோட்டை மீட்புப் போர்!''
''கிராமப் பூசாரிகள் மாநாடு மூலம் அரசியலோடு மதத்தைக் கலக்க முயற்சிக்கிறீர்களா?''
''ஆங்காங்கே கலவரங்களைத் தூண்டி கோயில்களை உடைத்து, பக்தர்களை மோதவிட்டு அதை அரசியல் ஆதாயமாக்குவதற்கு பெயர்தான் அரசியலுக்கு மதத்தைப் பயன்படுத்துவது. நான் செல்லும் இடங்களில் அனைத்து சாதி, மத மக்களும் ஐக்கியம் ஆகிறார்கள். ஒன்றாகச் சேர்ந்து சமைத்து உண்ணும் பொதுப் பண்பாட்டை நாங்கள் உருவாக்கி, அடித்தளத்தில் சமூக அமைதியை நிலைநிறுத்துகிறோம். அந்த ஒற்றுமையில் இருந்துதான் பண்பாட்டு மீட்புப் போரை நடத்துகிறோம். கிராமப் பூசாரிகளை அழைத்துச் சென்று சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லிக்கொடுக்கிறார்கள். 'ஏன்?’ எனக் கேட்டால் 'சம்ஸ்கிருதத்தில் மந்திரம் ஓதினால்தான், பக்தன் தட்டில் காசு போடுகிறான்’ என்கிறார்கள். காசுக்காக நம் பண்பாட்டையும் கடவுளையும் விற்கக் கூடாது என்றுதான் கிராமப் பூசாரிகள் மாநாட்டைக் கூட்டினோம். அந்த முயற்சிக்குப் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் கிராமப் பண்பாட்டை மீட்கப்போகிறோம்!'
''2010-ம் ஆண்டில் கட்சி தொடங்கிய உங்களின் சாதனையாக, அரசியல் தளத்தில் எதைக் குறிப்பிட முடியும்?''
''கட்சி தொடங்கிய இரண்டாவது மாதத்திலேயே என்னைத் தூக்கி சிறையில் போட்டார்கள். ஆறு மாதங்கள் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு நடந்த தேர்தலில், ஈழப் போருக்குத் துணைபோன காங்கிரஸை வீழ்த்த பிரசாரம் செய்தேன். 'நாம் தமிழர்’ அரங்குக்கு வந்த பிறகு சிறியதும் பெரியதுமாக பல இயக்கங்கள், அமைப்புகள் உருவாகின; உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதில் எதிலும் 'திராவிடம்’ என்ற பெயர் இல்லை. திராவிடம் என்ற பெயரைச் சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை மாற்றி, திராவிடம் என்ற பெயரைச் சொன்னால் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்!''
''2016-ம் ஆண்டு தேர்தலுக்கான 'நாம் தமிழர்’ வியூகம் என்ன?''
''வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் எல்லோருக்கும் ஒரு தேர்தல்... அவ்வளவுதான். ஆனால், எங்களுக்கோ அது போர். செலவுசெய்யும் திராணி இருப்பவனை வேட்பாளராக்கி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குகிறவர்களுக்கு மத்தியில், ஏழைகளின் பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து கருணாநிதி, ஜெயலலிதாவை அப்புறப்படுத்துவது என்பது ஒரே நாளில் நடக்கும் செயல் அல்ல. ஆனால், அந்த விதையை நாங்கள் அழுத்தமாக விதைக்கிறோம். நிச்சயம் அதில் வெல்வோம்!''
'' 'திராவிட இயக்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது’ என்கிறாரே கருணாநிதி?''
''ஆமாம்... 'திராவிட இயக்கத்தை வீழ்த்த இன்னும் ஒருவன் பிறக்கவில்லை. திராவிட இயக்கத்தை வீழ்த்தப் படை திரட்டுகிறார்கள்’ என்கிறார். பிறக்காத எதிரியைக் கண்டு ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும்? அல்லது 'திராவிடத்தை வீழ்த்த புதிதாக யாரும் பிறந்து வரவேண்டியது இல்லை. அவர்களே அவர்களை வீழ்த்திக்கொள்வார்கள்’ என்கிறாரோ என்னவோ? தி.மு.க-வைப் பொறுத்தவரை அது ஒரு 'வைதேகி காத்திருந்தாள்’ க்ளைமாக்ஸ். இரண்டு ரீல் முன்னாடியே செத்துப்போன வெள்ளைச்சாமி கையில் அரிவாளைத் திணித்து, சும்மாங்காச்சுக்கும் நிறுத்திவைத்திருப்பார் ரேவதி. அப்படித்தான் இன்றைக்கு தி.மு.க நிலைமையும். இன்றைக்கு கல்லூரி மாணவர்கள் யாருக்கும் தி.மு.க என்றால் என்ன என்றே தெரியவில்லை. அது பழைய கட்சியாகிவிட்டது!''
''எல்லா கட்சிகளுக்கும் முன்பே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறீர்கள்... இது என்ன மாதிரியான விளையாட்டு?''
''இந்தத் தேர்தலை, நான் 'போர்’ என்கிறேன்; நீங்கள் 'விளையாட்டு’ என்கிறீர்கள். ஒவ்வொரு தொகுதியிலும் எந்தச் சாதி வெல்லுமோ, அந்தச் சாதி வேட்பாளர்களுக்கு ஸீட் கொடுத்து வெல்வதுதான் திராவிடத் தேர்தல் பண்பாடு. அதை உடைத்திருக்கிறோம். பொதுத் தொகுதியில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். 'தமிழன்னு நினைச்சா ஓட்டுப் போடுங்க... தாழ்த்தப்பட்டவன்னு நினைச்சா உங்க ஓட்டே எங்களுக்கு வேண்டாம். உங்கள் ஓட்டு எங்களுக்குத் தீட்டு’ என மக்களிடம் பேசுகிறேன். நாங்கள் வெல்கிறோமா, தோற்கிறோமா எனத் தெரியாது. ஆனால் 'நாம் தமிழர் கட்சி’, தமிழ் மக்களை நல்ல நேர்மையான ஆதிக்கம் அல்லாத அரசியலுக்குப் பழக்கப்படுத்துகிறது. 'சீமான் ஏன் முதல்வர் ஆகவில்லை?’ என யாரும் என் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கப்போவது இல்லை. என் மனதுக்குச் சரி எனப்படுவதை நான் செய்கிறேன். அந்த மாற்றம் அனைத்துத் தமிழனுக்கும் அதிகாரம் என்ற உன்னதமான அரசியலின் தொடக்கம்!''
''சினிமாவை கிட்டத்தட்ட மறந்து அரசியலில் தீவிரமாக இருக்கிறீர்கள். ஆக, உங்களுடைய சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதலாமா?''
'' 'பகலவன்’ திரைக்கதையை வைத்துக்கொண்டு கடந்த எட்டு ஆண்டுகளாக போகாத நடிகர்கள் இல்லை. 'கதை நல்லா இருக்கு’ என்கிறார்கள். ஆனால், இவன் படத்தில் நடித்தால் நம் வீட்டில் வருமானவரி சோதனை நடத்திவிடுவார்களோ அல்லது இவனே போராட்டம் செய்து சிறைக்குப் போய்விடுவானோ எனப் பயப்படுவதால் ஒதுங்குகிறார்கள். என் படத்தில் நடிக்க என் தம்பி சிம்பு மட்டும்தான் துணிந்துவந்தான். அண்ணன் தாணு 'தயாரிக்கிறேன்’ என்றார். ஆனால், நான் அரசியல் பணிகளில் தீவிரமாகிவிட்டேன். தேர்தல் முடிந்த பின்னர் காலமும் சூழலும் கூடிவந்தால் 'பகலவன்’ படத்தை இயக்குவேன்!''
No comments:
Post a Comment