சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Oct 2015

காந்தியை மேலாடை துறக்க வைத்த மதுரை , அவரை மறந்ததுதான் சோகம்!

அபிமான நடிகர்களின் திரைப்படங்களை காண்பதற்கு இரவு முழுவதும் கண்விழித்து, போலீசிடம் அடி வாங்கி, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தி பண்டிகையாக கொண்டாடும் இளைய சமுதாயம் மாகத்மா காந்தியின் பிறந்த தினத்தை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?

இளம் தலைமுறையினரை பொருத்தவரையில் இன்று விடுமுறை தினம். வீட்டில் உள்ளவர்களுக்கோ டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சி பார்க்கும் தினம். பெரும்பாலான தமிழர்களுக்கு மதுக்கடை, இறைச்சிக்கடை அடைப்பு தினம். பதுக்கல் வியாபாரிகளுக்கு ப்ளாக்கில் வைத்து மதுப்புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்க்கும் தினம். பொதுவாக அனைவருக்கும் இதுவும் கடந்து போகும் ஒரு தினம்.

ஆனால், உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல நாட்டில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக மாகாத்மா காந்தி திகழ்ந்து வருகிறார். ரத்தம் சிந்தாமல் போராட்டம் நடத்தி, மக்களின் ஒற்றுமையின் மூலமும், அமைதியான போராட்டங்கள் மூலமும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த முடியும் என்ற வித்தையை கற்று கொடுத்தவர் காந்தி.


இந்த பரபரப்பான உலகில் காந்தியின் கொள்கையை பின்பற்றி எளிய வாழ்க்கை வாழ்கிறவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? காந்தியை போலவே வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கை என்று வாழ்கிறவர்கள் நம்முடன் இருக்கிறார்கள். சின்ன உதவி செய்துவிட்டு பெரிய விளம்பரங்களை தேடிக்கொள்கிறவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சிலர் இருப்பது ஆச்சரியமானதுதான்.

இவர்களை எங்கே காண முடியும் என்கிறீர்களா? நம் மதுரையில்தான்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் அமைந்திருக்கும் காந்தி அருங்காட்சியகத்தில்தான் அப்பழுக்கற்ற காந்திய சிந்தனையாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களே பல பல காந்திய தொண்டர்களை உருவாக்கி வருகிறார்கள். காந்திய சிந்தனை கல்வியையும், அவர் காட்டிய பொருளாதார கல்வியையும் கற்று தருகிறார்கள். நோயற்ற, கவலையற்ற எளிய வாழ்க்கையை கற்று தருகிறார்கள். இதற்கு இவர்களுக்கு குடையாக இருப்பது காந்தி நினைவு அருங்காட்சியகம்.

சமீபத்தில் சேலத்தில் துணிக்கடை திறக்க வந்த திரைப்பட நடிகை நயன்தாராவை காண குழுமிய கூட்டம் தள்ளுமுள்ளு ஆனதில் பலருக்கு போலீசின் லத்தியடி பரிசாக கிடைத்தது. அதைவிட மதுரையில் புலி படம் தாமதமாக ரீலிசானதால் தகாராறில் இறங்கிய இளைஞர்கள் போலீஸ் தடியடியை பெற்ற சம்பவம், காந்தி அருங்காட்சியகத்துக்கு அருகிலுள்ள திரையரங்கில்தான் நடந்தது.
அவர்களுக்கு தெரியுமா? அருகில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தில் காந்தி சுடப்பட்டபோது வழிந்த ரத்தம் தோய்ந்த துணியை என்றாவது பார்க்க சென்றிருக்கிறோமா என்று. இதையெல்லாம் நாம் இளைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்லவில்லை. காந்தி பிறந்த நாளில் அதிரடி திரைப்படங்கள்தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. கதர் துணிகளை உற்பத்தி செய்கிறவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பிரபல நடிகர்கள் வெளிநாட்டு துணிமணிகளை  விற்பனை செய்யும் கடைகளுக்கு விளம்பர தூதுவர்களாக ஊடகங்களில் வலம் வருகிறார்கள்.

சாமனிய மனிதருக்கும் உப்பு சென்று சேர வேண்டும், அது முதலாளிகளின் சொத்தாக இருக்க கூடாது என்று அன்று போராட்டம் நடத்திய காந்தி பிறந்த தேசத்தில்தான், தேசத்தின் உப்பு என்று பகாசுர நிறுவனங்கள் உப்பை விலை உயர்ந்த பொருளாக விளம்பரம் செய்கிறது. தீண்டாமை கூடாது பாவம், மத சகிப்பு தன்மை வேண்டும் என்று இறுதி மூச்சுவரை போராடிய காந்தியின் சிந்தனைகளை, அவர் பணியாற்றிய கட்சி தலைவர்களே தலைமுழுகி விட்டனர்.

காந்தி பிறந்த குஜராத்தில்தான் சில வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய மதக்கலவரம் நடந்தது. சொந்த மாநிலமே காந்தியை மறந்து போனது. பிறந்த நாளிலும், நினைவு நாளில் மட்டும் காந்தியின் புகழ் பாடிவிட்டு கிளப்புகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் காந்தியின் சிந்தனைகளை தாங்கி பிடித்துக்கொண்டு, அதற்கு அழிவில்லை என்பதை கம்பீரமாக கூறி வருகிறது மதுரையிலிருக்கும் காந்தி அருங்காட்சியகம்.

ஒருமுறை இதற்குள் நுழைந்து பாருங்கள். சபர்மதி ஆசிரமத்துக்குள் நுழைந்த அனுபவம் ஏற்படும். காந்தியடிகளின் மறைவிற்கு பிறகு இந்தியா முழுவதும் 7 காந்தி நினைவு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. அதில் தென்னிந்தியா முழுமைக்கும் மதுரையில்தான் அமைக்கப்பட்டது. அதற்கு காரணமும் உண்டு. 22-9–1921ல் மகாத்மா காந்தி மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தபோது, இங்குள்ள மக்கள் மேலாடை கூட அணிய வழியில்லாமல், மிகவும் வறுமையான நிலையில் வாழ்வதை கண்டார். அதன்பின்தான் சட்டையுடன் வலம் வந்த அவர், தன் மேலாடையை களைந்தார். அரை ஆடைக்கு மாறினார். 'இந்திய மக்கள் அனைவரும் என்றைக்கு முழு ஆடை அடைகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன்' என்று சூளுரைத்தார். அப்படிப்பட்ட வரலாற்று சம்பவம் நிகழ்ந்த ஊர் என்பதால் மதுரையை தேர்வு செய்தார்கள்.
1670ல் ராணிமங்கம்மாள் கோடை காலத்தில் நிர்வாகம் செய்வதற்காக கட்டப்பட்ட அரண்மனை பின்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர்களின் கலெக்டர், நீதிபதிகள் தங்கும் பங்களாவாக இருந்தது. அதையே காந்தி அருங்காட்சியகமாக 1959ல் அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்தார். இந்தியாவின் பழமையான காந்தி அருங்காட்சியகம் இது மட்டும்தான். இங்கு இந்திய விடுதலை வரலாறு, காந்தி வாழ்க்கை வரலாறு படங்களுடன் அமைந்துள்ளது. காந்தி பயன்படுத்திய பதினான்கு அசல் பொருட்களும், 32 மாதிரி பொருட்களும்  இங்கு பாதுகாக்கப்படுகிறது. சுடப்பட்ட அன்று காந்தி உடுத்தியிருந்த ரத்த கரை படிந்த வேட்டி இங்கு உள்ளது.

இதன் உள்ளே ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்று தனி காட்சியகம் உள்ளது. காந்தியின் அஸ்தி பாதுகாக்கப்பட்டு அது அமைதி பூங்காவாக அமைந்துள்ளது. சேவா கிராமத்தில் அவர் தங்கியிருந்த குடிசையின் மாதிரி இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல புகழ்பெற்ற தலைவர்கள் இங்கு வருகை தந்துள்ளார்கள். சர்வதேச அளவில் அமெரிக்காவின் கறுப்பின மக்களின் விடுதலை வீரர் மார்ட்டின் லூதர்கிங், திபெத்திய தலைவர் தலாய்லாமா ஆகியோர் இங்கு வந்துள்ளனர். பல வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து ஆய்வு நடத்தி செல்கிறார்கள். இங்குள்ள நூலகத்தில் பல அரிய புத்தகங்கள் உள்ளன.

மிகவும் குறைந்த கட்டணத்தில் இங்கு காந்திய சிந்தனை, யோகா, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் சுய தொழில் பயிற்சிகள் தினமும் கற்று தரப்படுகிறது. மிக குறைந்த ஊதியத்தில் பத்துக்கும் மேற்பட்ட காந்திய தொண்டர்கள் இங்கு இன்முகத்துடன் சேவை ஆற்றி வருகிறார்கள்.


உள்ளூர் மக்களுக்கு இதன் அருமை தெரியவில்லை. அப்படியிருக்கும்போது குமார் மெஸ்சையும், அம்மா மெஸ், கோனார் கடைய தேடிவரும் வெளியூர் மக்களை நாம் குறைசொல்ல முடியாது. இனியாவது மதுரை வரும்போது  உங்கள் குழந்தைகளை காந்தி அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்லுங்கள். ஒரு தேசத்தின்  விடுதலை வரலாறே நம் கண் முன்னே நின்று கொண்டிருக்கிறது. அதிலும் அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தினமும் பல அறிஞர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம், பாட்டு மன்றம், கருத்தரங்கம், இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை நடக்கிறது. இதை கண்டும் கேட்டும் மகிழுங்கள். காந்தியை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment