சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Oct 2015

என்னை குடிகாரன் என கூறும் அமைச்சர்கள் மருத்துவ பரிசோதனைக்கு தயாரா?: விஜயகாந்த் சவால்!

என்னை குடிகாரன் என்று விமர்சிக்கும் அமைச்சர்கள் யாரேனும் என்னுடன் மருத்துவ பரிசோதனைக்கு உடன் பட தயாரா? என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக சவால்விட்டு உள்ளார்.
தே.மு.தி.க. சார்பில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற திட்டத்தை செயல்படுத்தி தமிழகம் முழுவதும் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம், மேச்சேரியில் தே.மு.தி.க. சார்பில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின் அவர் பேசும்போது, ''தமிழகத்தில் வறுமை இன்னும் ஒழிய வில்லை. இதனால்தான் நான் மக்களின் வறுமையை போக்கும் வகையில் சிறு,சிறு உதவிகளை செய்து வருகிறேன். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திற்கு பிறகு, தமிழகத்தை மாறி, மாறி ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை. தமிழகத்தை சீரழித்து விட்டார்கள்.

சமீபத்தில் இறந்த திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா ஆட்சியாளர்களின் நெருக்கடிக்கு உள்ளானார். இதேபோல் தற்போது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பல்வேறு வகையில் நெருக்கடி வந்து கொண்டு இருக்கிறது. ஏன் அமைச்சர்களுக்கு கூட இந்த நெருக்கடி உள்ளது. இந்த ஆட்சியால் மக்களுக்கு நெருக்கடி அதிகமானால் இந்த ஆட்சியை மக்கள் மாற்றி விடுவார்கள்.

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். எனது தொண்டர்களிடம் நான் கடுமையாக நடந்து கொள்வதாக சிலர் பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரையில் தொண்டர்களிடம் நான் உரிமை எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு விமர்சிப்பவர்களை பெரிதாக கருதவில்லை. காய்த்த மரத்தில்தான் கல்லடி படும். இன்றைய தினம் எனது மனைவியை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அவர் என்னைவிட அறிவாளி. அவர்தான் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்கிறார். இதனால் குடும்பம் நன்றாக உள்ளது.
இன்றைய தினம் மதுவிலக்கை அமல்படுத்த தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த கோரிக்கையை ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை. என்னை குடிகாரன் என்று விமர்சிப்பவர்களுக்கு நான் நேரடியாக சவால் விடுக்கிறேன். என்னை குடிகாரன் என்று குறை கூறும் அமைச்சர்கள் யாரேனும் என்னுடன் மருத்துவ பரிசோதனைக்கு உடன் பட தயாரா? இந்த கூட்டத்தின் மூலம் அவர்களுக்கு நான் நேரடியாக அழைப்பு விடுக்கிறேன்" என்று ஆவேசமாக பேசினார்.No comments:

Post a Comment