சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Aug 2015

கோடிக்கணக்கில் சம்பாதித்த பொருளுக்கு தற்போது மதிப்பில்லை...!- காரணம் என்ன?

ந்திய வரலாற்றின் பெருமை நம்மை விட வெளிநாட்டினருக்கு நன்றாகவே தெரிகிறது. அதனாலேயே நம் நாட்டில் உள்ள வரலாற்று சின்னங்களை விலை கொடுத்து வாங்க வெளிநாட்டினர் போட்டி போடுகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் கோயில்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தமிழகத்தில் 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்களில், நான்கு லட்சத்துக்கு அதிகமான சிலைகள் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கோயில்களில் உள்ள சிலைகள் விலைமதிப்புமிக்கவைகள். குறிப்பாக வெளிநாட்டில் இதற்கு கோடி கணக்கில் கொட்டிக் கொடுக்க தயாராக உள்ளனர் என்பதாலேயே ,  சிலை கடத்தல் கும்பல் தமிழகத்தில் முகாமிட்டு கைவரிசையை காட்டி வருகிறது.  

தமிழகத்தில் உள்ள கோயில்களில் பாதுகாப்பு என்பது பெயரளவுக்கு உள்ளன. பராமரிப்பின்றி பாழடைந்து வரும் கோயில்களில் கோடிக்கணக்கான பஞ்சலோக மற்றும் கலைநயமிக்க கற்சிலைகளும் இருக்கின்றன. அவற்றை குறி வைத்து சிலை கடத்தல் கும்பல் திருடிகின்றன. திருடிய சிலைகளை கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்துகின்றன. சிலை கடத்தலில் ஈடுபடுவர்கள் சில நாட்களிலேயே கோடீஸ்வரன் பட்டியலில் இடம் பெற்றுவிடுகிறார்கள். 

தமிழக காவல்துறையில் பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் செயல்படுகிறது சிலை திருட்டு தடுப்பு பிரிவு. இந்த பிரிவில் பணியமர்த்தப்படும் காவல்துறை அதிகாரிகள், பெயரளவுக்கே செயல்படுவதுண்டு. இந்த பிரிவுக்கு நியமிக்கப்படுபவர்கள், காவல்துறையில் பழிவாங்கும் படலத்திற்கு பலியானவர்களாகவே   கருதப்படுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரிவுக்கு டி.ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இவரது நடவடிக்கையும், விசாரணையும் காவல்துறை வட்டாரத்தில் ஏக பிரசித்தம். பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பிறகு சிலை தடுப்பு பிரிவின் செயல்பாடுகள் வெளியுலகத்துக்கு தெரியவந்தது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மனியில் பிடித்து சென்னை புழல் சிறையில் அடைத்த பெருமை அவரையே சேரும். ஒவ்வொரு முறையும் ஜாமீனில் வெளிவரத் துடிக்கும் சுபாஷ் கபூருக்கு கடிவாளம் போட்டு, சிறை வாசத்திலேயே வைத்துள்ளார் அவர்.
 
அமெரிக்காவில் நடந்து வரும் ஒரு வழக்கிற்காக அந்நாட்டு காவல்துறையினர் சுபாஷ் கபூரை கேட்டு கடிதம் அனுப்பினர். அந்த கடிதத்துக்கு பதிலளித்த தமிழக காவல்துறை சிலை தடுப்பு பிரிவு, 'எங்கள் வழக்கு முடிந்த பிறகே உங்களிடம் சுபாஷ் கபூரை ஒப்படைக்க முடியும்' என்று தெளிவாக சொல்லி விட்டது. இதற்கிடையில் சிலை கடத்தல் ஜாம்பவான்கள் சுபாஷ் கபூரை வெளியில் கொண்டு வர முயற்சிக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பொன்மாணிக்கவேல் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுபாஷ் கபூரின் கூட்டாளிகள் இன்னும் தமிழகத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைக்குள் இருந்து கொண்டே சுபாஷ் கபூர் காரியத்தை கச்சிதமாக முடித்து வருவதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். சுபாஷ் கபூரால் வெளிநாட்டில் விற்கப்பட்ட சிலைகளின் மதிப்பு பல கோடியைத் தாண்டும் என்கிறது காவல்துறை. அதில் பல சிலைகளின் விவரம் காவல்துறைக்கு தெரியவில்லை. வெளிநாட்டில் உள்ள மியூசியத்தில், இந்திய சிலைகள் அதிலும் குறிப்பாக தமிழக சிலை இருப்பதாக தகவல்கள் கிடைத்தாலும், அந்த சிலைகள் எந்த கோயிலிருந்து திருடப்பட்டது என்ற விவரம் இல்லை. இதனாலேயே அந்த சிலைகளை வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வரமுடியாமல் இருக்கிறது.

பொதுவாக கோயில்களில் சிலைகள் திருடப்பட்டால் அதை வெளியில் தெரியாத வகையில் பார்த்துக் கொள்கிறார்கள் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள சில அதிகாரிகள். இதனால் சிலை திருட்டு குறித்து லோக்கல் காவல்துறைக்கு தகவல் வருவதில்லை. புகார் கொடுத்தால் கூட நடவடிக்கை எடுக்க தயங்கும் நம்மூர் காவல்துறையினருக்கு, புகாரே இல்லை என்றால் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் திருட்டுப்போன சிலைகள் குறித்த விவரம் எங்கும் பதிவு செய்யப்படுவதில்லை. இது சிலை கடத்தல் கும்பலுக்கு சாதகமாவதால், கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகுகின்றன.

வெளிநாடுகளில் உள்ள மியூசியத்தில் நம்மூர் சிலைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடப்பதற்கும், அதை மீட்க முடியாமல் இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். சிலை கடத்தல் வழக்கில் சினிமா இயக்குனர் வீ.சேகரின் கைது சம்பவத்துக்குப் பிறகே, இதுசம்பந்தமான தகவல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன. தமிழகத்தில் உள்ள கோயில்களில், சோழ கால சிலைகளுக்கு அதிக மதிப்பு வெளிநாட்டில் இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அடுத்து கலைநயமிக்க சிலைகள் என்றால் அதன் மதிப்பு பல லட்சத்தை தாண்டுகிறது.
 
வரலாற்றின் வடிவமைப்பாக விளங்கும் சிலைகளை வைத்திருப்பதை பெருமையாக வெளிநாட்டினர் கருதுகின்றனர். இதனால் எத்தனை லட்சங்கள் என்றாலும் பேரம் பேசாமல் அதை வாங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இப்போது திருட்டு சிலைகள் என்றால் வெளிநாட்டினர் வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். இதற்கு காரணமும் தமிழக சிலை தடுப்பு பிரிவே காரணம். தமிழகத்தில் திருட்டுப்போன சிலைகள் குறித்த விவரங்களை இப்பிரிவினர் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் திருட்டு சிலைகள் வாங்கி வில்லங்கத்தில் சிக்காமலிருக்க வெளிநாட்டினர் முன்எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள். தமிழக சிலைகள் விற்பனைக்கு வந்தால், முதலில் தமிழக சிலை தடுப்பு பிரிவின் இணையத்தளத்தில் விவரத்தை பார்த்தப்பிறகே அவைகளுக்கு விலை பேசுகிறார்கள் வெளிநாட்டினர். இதனால் திருட்டு சிலைகள் வெளிநாட்டில் விற்பனை குறைந்து விட்டது. இது கடத்தல் கும்பலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான 8 பஞ்சலோக சிலைகளை திருடிய படத்தயாரிப்பு மேலாளர் தனலிங்கம் தலைமையிலான கும்பல் சிக்கியதற்கும் இதுவே காரணம். சிலைகளை திருடிய இந்த கும்பல் அவற்றை விற்க முடியாமல் மாதக்கணக்கில் சிரமப்பட்டுள்ளனர். அப்போதுதான் இயக்குனர் வீ.சேகர் வீட்டில் இந்த சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதன்பிறகும் சிலைகள் விற்கப்படாததால் தனலிங்கம் அதை வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினர் கைது செய்து விட்டனர்.  தமிழக சிலைகள் வெளிநாட்டில் உடனுக்குடன் விற்கப்பட்டு இருந்தால் இந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை பிடித்து இருக்க முடியாது என்கிறார்கள் காவல்துறையினர்.
இதுகுறித்து தமிழ்நாடு சிலை தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள கோயில்களில் விலை மதிப்பு மிக்க சிலைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவைகளுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு என்பது மிகவும் குறைவு. கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் குற்றவாளிகளின் உருவம் சரிவர தெரிவதில்லை. சிலை கடத்தல் கும்பலில், கோயில்களுக்குச் சென்று சிலைகளை திருடுவதற்கு என்று ஒரு குரூப் உள்ளது. அவர்கள் சிலையை திருடி விட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக் கொண்டு சென்று விடுவார்கள். இதன்பிறகு அந்த சிலை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படுகிறது. அதன்பின்னர் நட்சத்திர ஓட்டல்களில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வெளிநாட்டினருடன் பேரம் பேசும் படலம் நடத்தப்படுகிறது. இதில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும், உள்ளூர் கடத்தல் புள்ளிகளும் பங்கேற்கிறார்கள்.

கலைநயம், வடிவமைப்பு, பழமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுகிறது. பேரம் முடிந்தவுடன் வெளிநாட்டை சேர்ந்த சிலை கடத்தல் கும்பல் அதை பாதுகாப்பாக இங்கிருந்து கடத்துகின்றன. இந்த கடத்தல் சம்பவத்தின் போது சில அதிகாரிகள் கவனிக்கப்படுகின்றனர். இதையடுத்து வெளிநாட்டில் சிலை வாங்க விரும்புவர்களிடம் விலை பேசி விற்கப்படுகிறது.
சிலை கடத்தலை தடுக்க வேண்டும் என்றால் கோயில்களில் பாதுகாப்பு வசதியை பலப்படுத்த வேண்டும். சிலைகள் குறித்த விவரங்களை அதன் கீழ்பகுதியில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டால் வெளிநாட்டினர் அந்த சிலையை வாங்க மாட்டார்கள். மேலும் கோயில்களில் உயரக கேமராக்களும், காவல்துறை சார்பில் பாதுகாப்பிற்காக புதிதாக இளைஞர்கள் நியமிக்கப்படவும் வேண்டும். அதோடு வங்கிகளில் இருப்பதைப் போல கோயில்களிலும் பாதுகாப்பு அலாரம் அமைத்து அதன் சிக்னலை லோக்கல் காவல்துறையினருக்கும், இந்து அறநிலையத்துறையினருக்கும், உள்ளூர் முக்கிய பிரமுகருக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் சிலைகள் திருடப்படுவது தவிர்க்கப்படும்" என்றார்.



No comments:

Post a Comment