சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Aug 2015

வளைக்கப்படும் நிலங்கள்...வதைபடும் தொழிலாளர்கள்! - சோலார் பிளான்ட்டின் சோக கதைகள்!

மிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சோலார் சிஸ்டம் மூலம் மின்சாரம் பெற அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சோலார் சிஸ்டம் மூலம் மின்சாரம் பெறுவதற்கு தமிழக அரசுக்கும், அதானி குரூப்ஸ் உள்பட சில நிறுவனங்களுக்கும் இடையே சென்னையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் சோலார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7.01க்கு மின்வாரியம் கொள்முதல் செய்வதும், சோலார் சிஸ்டங்கள் அமைப்பதற்கு தமிழக மின் வாரியம் உதவுவதுதான்.
இந்நிலையில், சோலார் நிறுவனங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஒரு கோடி லட்சம் ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது. இதனால் மின் வாரியம் கடும் நஷ்டத்தை சந்திக்கும் என்று தி.மு.க., பா.ம.க. உள்பட பல்வேறு எதிர்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


ஒரு பக்கம் எதிர்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்தாலும், மறு பக்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த அதானி நிறுவனம் உள்பட பல்வேறு வட மாநில தனியார் நிறுவனங்கள், தமிழகத்தில் சோலார் பிளான்ட் அமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி விட்டன.

தமிழகத்தில் அதானி நிறுவனம் சென்னை, ராமநாதபுரம் உள்பட சில இடங்களில் நேரடியாக சோலார் சிஸ்டத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பிற இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களை, சோலார் சிஸ்டம் அமைப்பதற்தான சப்-ஏஜெண்ட்டுகளாக நியமித்துள்ளது. இதையடுத்து, வட மாநிலத்தை சேர்ந்த சோலார் சிஸ்டம் தொழிலில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள், தமிழகம் நோக்கி படையெடுத்துள்ளன.
தென் மாவட்டங்களில் அதிகம் 

வட மாவட்டங்களை காட்டிலும் தென் மாவட்டங்களில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வானம் பார்த்த பூமியாக பல இடங்கள் வறட்சியாக இருக்கின்றன. எனவே இந்த மாவட்டங்களை குறி வைத்து வட மாநில நிறுவனங்கள் இடங்களை தேர்வு செய்து, சோலார் சிஸ்டம் அமைக்கும் பணியை தொடங்கி வருகின்றன.

குறைந்த விலைக்கு நிலங்களை வளைத்து போடும் நிறுவனங்கள் 

வறட்சியான இந்த மாவட்டங்களில் விவசாயம் பெரிய அளவில் இல்லை. எனவே, தொலை தூரத்தில் காலி இடங்களாக இருக்கும் நிலங்களை ஒரு ஏக்கர் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை குறைந்த விலைக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர்களை வாங்கி கையகப்படுத்தி வருகின்றன வட மாநில நிறுவனங்கள்.
எந்தெந்த இடங்களில் சோலார் சிஸ்டம்?

தென் மாவட்டத்தை பொறுத்தவரை விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் சோலார் சிஸ்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு மெகாவாட் சோலார் ஒளி பெறுவதற்கு குறைந்தது 5 ஏக்கர் அவசியமாம். தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் (10 மெகாவாட்- 60 ஏக்கர்), கோவில்பட்டி அருகே பட்டியூர் (13 மெகாவாட்), திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் (5 மெகாவாட்) ஆகிய இடங்களில் சோலார் சிஸ்டம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில்,  கா.விலக்கு என்ற இடத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் சோலார் சிஸ்டம் அமைக்கும் வேலையில் அதானி நிறுவனமே நேரடியாக களம் இறங்கியுள்ளது.

அதுபோல் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பகுதியில் முத்துராமலிங்கபுரம் (8 மெகாவாட்), பந்தல்குடி, குருந்தமடம், பாலையம்பட்டி பெரிய புளியம்பட்டி, ஆமத்தூர் (12 மெகாவாட், 60 ஏக்கர்), எரிச்சநத்தம் அருகேயுள்ள செங்குன்றாபுரம் (40 மெகாவாட்) ஆகிய பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் சோலார் சிஸ்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேறு வேறு வட மாநில நிறுவனங்களிடம் இந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விரைவில் 40 மெகாவாட் ரெடி 

விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் 40 மெகாவாட் (ஒரு லட்சம் யூனிட், ஒரு மெகாவாட்) தயாரிக்கும் பணியை, மத்திய பிரதேசத்தை சேர்ந்த மால்பானி என்பவருக்கு சொந்தமான 'கிரிராஜ் எண்டர்பிரைசஸ்'  என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து சோலார் பிளேட்டுக்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு, அவற்றை கான்கிரீட் தரையில் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தென் மாவட்டங்களில் இந்த சோலார் பிளான்ட்டுத்தான் விரைவில் பணிகள் முடிந்து சோலார் மின்சாரத்தை வழங்கவுள்ளதாக அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் வாரிய அதிகாரிகளை வளைத்து போடும் நிறுவனங்கள்

தமிழக மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 'என்.சி.இ.எஸ்.' (நான் கன்வர்ஷனல் எனர்ஜி சிஸ்டம்) என்ற அமைப்புத்தான் இந்த சோலார் சிஸ்டம் அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்குவது, செலவு பில்களை அனுமதிப்பது உள்பட பல்வேறு பணிகளை கவனித்து வருகிறது. வட மாநில நிறுவனங்கள் சோலார் சிஸ்டம் அமைப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கியதும் அதை ஓ.கே. செய்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி அந்த நிறுவனங்கள் கேட்கும் அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து தரும்படி உத்தரவு பறக்கிறது. ஏன் பல இடங்களில் மின் வாரியத்துக்கு சொந்தமான லாரிகள், வாகனங்கள், ஊழியர்கள் உள்பட பல்வேறு வசதிகள் அந்த நிறுவனங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கிறது.
விலை போன ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரிகள் 

மின்வாரியத்தின் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை இந்த வட மாநில நிறுவனங்கள் மாதம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கி வேலைக்கு அமர்த்தியுள்ளனர். மின் வாரியத்தின் ‘நெளிவு சுழிவுகளை’ அறிந்த இவர்கள், வட மாநில நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை முன்னின்று செய்து தருகின்றனர். மின் வாரிய அலுவலகத்தில் பைல்களை ஓ.கே. செய்வது, சோலார் சிஸ்டம் எந்த மாவட்டத்தில் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பதுவரை எல்லா விசயங்களிலும் இவர்கள்தான் அவர்களுக்கு அட்வைசர்கள். குறிப்பாக, சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்ற ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரிதான் இந்த நிறுவனங்களுக்கும், மின்வாரியத்துக்கும் இடையே பாலமாக செயல்படுகிறாராம்.
வட மாநில நிறுவனங்களின் ராஜ தந்திரம்

பெரும்பாலும் வறட்சியான மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தை வளைத்து போடும் வட மாநில நிறுவனங்கள், உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பை சமாளிக்க, முதல் கட்டமாக அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரை ‘செமையாக’ கவனித்து விடுகின்றனர். பிறகு உள்ளூர்வாசிகளை வேலைக்கு சேர்த்துக்கொள்கின்றனர். உள்ளூர்வாசிகளுக்கு 300 ரூபாய் சம்பளம் என்றால் 400 ரூபாய் கொடுத்து வாயை அடைத்து விடுகின்றனர். ஆனால், 20 முதல் 30 பேருக்குத்தான்  உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு.  பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களைத்தான் நூற்றுக்கணக்கில் அழைத்து தங்க வைத்து வேலை வாங்குகின்றனர்.
நிரம்பி வழியும் ஓட்டல்கள்

வட மாநில நிறுவனங்களின் அதிகாரிகள், அந்தந்த ஊர்களில் உள்ள ஓட்டல்களில் ஏ.சி. ரூம் எடுத்து தங்குகின்றனர். அதுபோல், வாடகைக்கு ஏ.சி.கார்கள் எடுத்து பயன்படுத்துகின்றனர். எனவே விருதுநகர், அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன.

தொழிலாளர்கள் படும்பாடு

வட மாநில நிறுவனங்களின் அதிகாரிகள் ஏ.சி.ரூம்களில் தங்கியிருக்க,  அந்த சோலார் பிளாண்ட்டுக்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. எல்லாம் கண்ணீரை வரவழைக்க கூடியவை. பிளான்ட்டில் ஒரு பெரிய தகர செட் அமைத்து, அதில் தங்க வைக்கப்படுகின்றனர். சமையல் மாஸ்டர்கள் மூலம் அங்கேயே சப்பாத்தி, ரொட்டி, சாப்பாடு போன்ற உணவுகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. வட மாநில தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் ராத்திரி பகலாக வேலை செய்கின்றனர்.


நோ பாத்ரூம்; எல்லாமே வெளியில்தான்... 

விருதுநகர் செங்குன்றாபுரம் அருகே ‘ஸ்டெர்லிங் அன்ட் வில்சன்’ என்ற நிறுவனம் 250 ஏக்கர் பரப்பளவில் அமைத்து வரும் சோலார் பிளாண்ட் பணியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், செங்கோட்டையில் ஒரு சின்ன திருமண மண்டபம் மாதிரி ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்க வைக்கப்படும் தொழிலாளர்கள் பெரும்பாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். கழிப்பறை வசதியோ, குளியல் அறை வசதியோ கிடையாது. எல்லாமே வெளியில்தான்.

இங்கு வேலையில் சேர்ந்துள்ள கருப்புராஜா என்பவர் கூறுகையில், ''செங்குன்றாபுரம்தான் எனது சொந்த ஊர். டிரைவராக வேலை பார்த்தேன். தினமும் 300 ரூபாய் சம்பளம் கிடைச்சது. இப்போது சோலார் பிளாண்ட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளேன். தினமும் 400 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், சோலார் பிளான்ட் வேலை முடிஞ்சதும், வேலை கிடையாது என்று சொல்லுகிறார்கள். திரும்பவும் டிரைவர் வேலைக்கு போக வேண்டியதுதான்.

விருதுநகரைச் சேர்ந்த சுரேஷ், ''பி.பி.ஏ. முடிச்சுட்டு தனியார் பாங்க்கில் வசூல் ஏஜெண்ட்டாக வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். ஆனால், அந்த சம்பளம் பத்தவில்லை. லேபர் காண்ட்ராக்டர் மூலம் இங்கே வேலை கிடைச்சது. தினமும் 400 ரூபாய் சம்பளம். வாராவாரம் தந்து விடுவோம் என்று சொல்லி வேலைக்கு சேர்த்தார்கள். இப்போது ஒரு மாதமாகிவிட்டது. இன்னும் சம்பளம் வரவில்லை.''

ஸ்ரீவில்லிப்புத்தூர் சரவணன், ''நான் இன்ஜினியரிங் மெக்கானிக்கல் படித்துள்ளேன். ஒரு லேபர் காண்ட்ராக்டர் மூலம் இங்கே வேலைக்கு வந்தேன். தினமும் 400 ரூபாய் சம்பளம்னு சொன்னாங்க. ஆனா, நான் படிச்ச படிப்புக்கு ஏற்ற மாதிரி வேலை தரலை. சோலார் பிளான்ட்டை இறக்கி அதில் நட்டு, போல்ட்டை டைட் பண்ணுற வேலைதான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆனா, இன்னும் சம்பளம் தரவில்லை. பாத்ரூம் போறது, குளிக்குறது எல்லாமே வெளியில்தான். காலையில் 8 மணிக்கு சோலார் பிளாண்ட்டுக்கு வேலைக்கு போனால் சாயந்திரம் 6 மணிக்குத்தான் விடுவாங்க. இந்த மண்டபத்தில்தான் மொத்தமா 50 பேர் தரையில் படுத்து தூங்குவோம். மழை பெய்தா ஏதாவது ஒரு ஓரமாக ஒண்டிக்கிட்டு காலத்தை தள்ளுறோம்''.No comments:

Post a Comment