சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

டாஸ்மாக்கை மூட டவரில் ஏறிய தொழிலாளி: ஏமாற்றி இறக்கிய போலீஸ்!

நெல்லை மாவட்டத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி டவர் மீது ஏறிய தொழிலாளியை காவல்துறையினர் ஏமாற்றி கீழே இறக்கி கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ளது சுந்தரபாண்டியபுரம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் வெடித்துவரும் சூழலில், இந்த கிராமத்தில் உள்ள கடையை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுக்க தொடங்கி உள்ளது.


இந்த நிலையில், சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த மதுக்கடையை மூடக்கோரி அந்த கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்ற கூலித் தொழிலாளி, தனியாக இன்று போராட்டத்தில் குதித்தார். டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி கோஷங்களை எழுப்பியபடி வந்த அவர், திடீரென அருகில் இருந்த செல்போன் டவர் மீது ஏறத் தொடங்கினார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அவர் டவரின் உச்சிக்கு சென்று விட்டார்.
காவல்துறையினர் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ‘மதுக்கடையை மூடினால் மட்டுமே கீழே இறங்கி வருவேன்’ என அவர் பிடிவாதம் காட்டினார். இதனால் செய்வது அறியாமல் காவல்துறையினர் திணறினர். சுமார் இரண்டு மணி நேரம் இந்த திக் திக் சம்பவம் தொடர்ந்தது.

பின்னர் அதிகாரிகளிடம் பேசிய காவல்துறையினர், நேராக மதுக்கடைக்கு சென்று கடைக்கு பூட்டு போட்டனர். பின்னர், சாவியை அவரிடம் காட்டி ‘கடையை மூடி விட்டோம். கீழே இறங்கி வந்தால் சாவியை ஒப்படைக்கவும் தயாராக இருக்கிறோம்’ என்றார்கள்.

காவல்துறையினரின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட தொழிலாளி அய்யப்பன், உடனடியாக டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை பிடித்த காவல்துறையினர், கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர், மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல விற்பனை தொடங்கியது. கைது செய்யப்பட்ட அய்யப்பன் தென்காசி அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுக்கடையை அகற்றகோரி போராடிய நபரிடம், காவல்துறையினரே தவறான வாக்குறுதி கொடுத்த சம்பவம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.




No comments:

Post a Comment